6 வருடத்திற்கு முன் கொலை

 


ஆறு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகனுக்கு அவரது உறவினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன், தாய் மற்றும் மகன் புதைக்கப்பட்ட வவுனியாவிலுள்ள முருகனூர் பகுதியிலுள்ள இடத்தில் பால் வார்க்கப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 2015.08.09 அன்று தயாரான சயிந்திகாவும், அவரது மகனான பொபிஷணனும் யாழ். கோண்டாவிலில் உள்ள சயிந்திகாவின் தாயார் வீட்டிலிருந்து, கணவனது ஊரான வவுனியா - முருகானூர் கிராமத்திற்கு கணவனுடன் சென்றுள்ள நிலையில் அன்றைய தினமே இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மகளிடமிருந்து எந்த தகவலும் இல்லாத நிலையில் பெற்றோர் பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என பல இடங்களுக்கு சென்று முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் ஆறு வருடங்களின் பின்னர் கடந்த 2021.08.07 அன்று சயிந்திகாவின் கணவன் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த இருவரையும் தானே கொலை செய்து புதைத்ததாக தெரிவித்து வவுனியா - முருகனூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த வீட்டினை அடையாளம் காட்டியுள்ளார்.

இந்த நிலையிலேயே தாயினதும், சேயினதும் ஆத்மா சாந்தியடைவதற்காக அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அவர்களது பெற்றோரும், கோண்டாவில் வாழ் உறவினர்களும் பால்வார்த்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-வவுனியா தீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.