மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
உலகளவில் ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் ஐரோப்பாவில்தான் அதிகமான உயிரிழப்பும், தொற்றுப்பரவலும் ஏற்பட்டதாகவும், கடந்த வாரத்தில் இரட்டை இலக்க சதவீதத்தில் உயர்ந்ததாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளான உக்ரைன், ரோமானியா, பல்கேரியா, மால்டோவா, ஜார்ஜியா போன்ற நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. மக்களிடையே குறைவான அளவில் தடுப்பூசி செலுத்துவது இருந்ததே அதிகபட்சமான பாதிப்புக்கும், உயிரிழப்புக்கும் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உல சுகாதார அமைப்பின் வாராந்திர அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த வாரத்தில் மட்டும் உலகளவில் கரோனா தொற்று 18 சதவீதம் அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் 4-வது வாரமாக கொரோனா பரவல் உயர்ந்து வருகிறது.
ஐரோப்பாவில் கடந்த வாரத்தில் மட்டும் கொரோனாவில் ஏற்படும் உயிரிழப்பு 14 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிதாக 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், 21 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 5.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இது கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தைவிட 12 சதவீதம் குறைவாகும். கடந்த வாரத்தில் 11,600 பேர் உயிரிழந்தனர்.
பிரித்தானியாவில் கடந்த வாரத்தில் புதிதாக 3.30 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். ரஷ்யாவில் 2.50 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். கடந்த வாரத்திலிருந்து அமெரிக்காவிலும் உயிரிழப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் மக்கள் தொகை அதிகமாகஇருக்கும் இந்தியா, இந்தோனேசியா நாடுகளில் கரோனா தொற்று 8 சதவீதம் குறைந்துள்ளது, உயிரிழப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை