கொரோனா செயலணியின் அதிரடித் தீர்மானங்கள்!!


 ஜனாதிபதிகோட்டாபாய ராஜபக்க்ஷ  தலைமையில் கூடிய கொரோனா தடுப்பு   செயலணி சில அதிரடியான தீர்மானங்களை   மேற்கொண்டுள்ளது. அதன்படி,

  • மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டது.
  • பொது இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம்.
  • உயர்தரம் மற்றும் சாதாரணத்தர வகுப்புகளை ஆரம்பிக்கத் தீர்மானம்.
  • தற்போதை நிலைமையை நிர்வகிப்பதற்கு மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம்.
  • சுற்றுலாத்துறை கைத்தொழிலை இழக்குவைத்து பல தீர்மானங்கள்
  • மக்களிடத்தில் தடுப்பூசி பயத்தை ஏற்படுத்தும் ஒருங்கமைக்கப்பட்ட குழுத் தொடர்பில் ஆராயுமாறு ​பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை.

  என்பவையே  குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும்  குறித்த விடயங்கள்  தொடர்பிலான  கலந்துரையாடலில், 

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று முற்பகல் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாகஇடம்பெற்ற கொவிட் தொற்றொழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இதனை கூறினார்.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, பாடசாலை மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பில் அவதானம் செலுத்தி, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரங்களுக்கான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சுகாதாரப் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில், பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தி, கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் , ஜனாதிபதி பணித்துள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விரைவில் ஆராயுமாறும், சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்தினார்.

பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்குச் செல்லும் போது, தடுப்பூசி அட்டையைக் கட்டாயம் எடுத்துச் செல்வதற்கான இயலுமை தொடர்பில் உடன் கண்டறியவும், இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

மேலும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க, கொரோனா சட்டதிட்டங்களில் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளதென்று சுட்டிக்காட்டிய சுகாதார அதிகாரிகள், இது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலின் முன்னேற்றம் தொடர்பிலும், ஜனாதிபதி இதன்போது ஆராய்ந்தறிந்தார்.

கொவிட் மரணங்களின் வீதம் மற்றும் தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள, தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

அத்துடன், பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்துக்கு நடமாடும் சேவையை முன்னெடுக்குமாறும் அனைத்து மக்களும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறும், ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.

இதற்காக, பொதுச் சுகாதார அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் மற்றும் பிராந்திய அரசியல்வாதிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.

தடுப்பூசி ஏற்றல் தொடர்பில் சில குழுவினர் முன்னெடுத்துவரும் போலிப் பிரசாரங்கள் தொடர்பில், மாகாண சுகாதாரப் பணிப்பாளர்களால் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தடுப்பூசி தொடர்பில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைக்கப்பட்ட குழுக்கள் தொடர்பில் உடன் கண்டறியுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

தற்போதைய தொற்றுப் பரவல் நிலைமையைக் கட்டுப்படுத்தி, நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவரும் வேலைத்திட்டத்தில், மாகாண மற்றும் மாவட்டச் சுகாதாரப் பணிப்பாளர்கள் அதிக பொறுப்புகளை ஏற்க வேண்டுமென்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி , அனைத்துத் துறைகளையும் தொடர்புபடுத்திக்கொண்டு, கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேலும் வெற்றிகரமாக்கிக்கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் சவாலுக்கு இலக்காகியுள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முக்கிய துறையாக சுற்றுலாத்துறை அடையாளம் காணப்பட்டுள்ளது. அது தொடர்பான பல புதிய தீர்மானங்களுக்கு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதென்று, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகள் பிரகாரம், சுற்றுலாத்துறையை மேம்படுத்த, அதிக அக்கறையுடன் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிச் செயற்பட வேண்டுமென்று, ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் இலங்கையில் நடத்தப்படவுள்ள சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிடுவதற்காக, வெளிநாட்டு இரசிகர்கள் வருவதற்கான வாய்ப்பளித்தல் தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அவர்களை உயிர்க் குமிழிக்குள் வைத்திருந்து, தேவையான வசதிகளை வழங்க முடியுமென்று, சுகாதாரத் துறையினர் எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் நாட்டுக்குள் நடத்தப்படவுள்ள LPL போட்டிகள் உள்ளிட்ட மேலும் பல போட்டிகளைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு, உள்நாட்டு, வெளிநாட்டு போட்டி ஒருங்கிணைப்பாளர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்தாகவும் அவை, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் அந்நியச் செலாவணியை அதிகரித்துக்கொள்ளக் கிடைத்துள்ள விசேட வாய்ப்புகள் என்றும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதன்போது எடுத்துரைத்தார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.