தவறுதலாக பணத்தை ஒன்லைனில் வேறொருவருக்கு அனுப்பினால் பதற்றம் வேண்டாம்!!

 


வங்கிக் கணக்குகளில் தவறுதலாகப் பணம் கிரெடிட் செய்யப்பட்ட செய்திகளை அண்மையில் படித்திருப்போம். இவ்வாறு வங்கி பணப் பரிமாற்றத்தில் தவறுகள் நடந்துவிட்டால் என்ன செய்வது என்று பார்ப்போம்.  

மின்னணு முறையில் வங்கிப் பணப் பரிமாற்ற வழிமுறைகள்

மின்னணு முறையில் வங்கிப் பணப் பரிமாற்றத்துக்கு NEFT, RTGS, IMPS, UPI போன்ற வழிகளைப் பயன்படுத்தலாம். இதில் எந்த வழிகளில் பணப்பரிமாற்றம் செய்தாலும் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஆகவே, பணம் அனுப்புபவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும்போது, பணத்தைப் பெறுபவருடைய வங்கிக் கணக்கில் உள்ள அவரது பெயர், வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், வங்கி கிளையின் பெயர், ஐ.எஃப்.எஸ்.சி கோட் (IFSC Code), யு.பி.ஐ ஐடி (UPI ID) போன்ற விவரங்களை ஒருமுறைக்கு இரண்டு முறை சரிபார்த்து அதற்குப் பிறகு பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும்.

மற்றவருடைய வங்கிக் கணக்கை தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டால்?

நாம் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும்போது அந்தப் பணத்தை பெறுபவருடைய வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களைத் தவறுதலாகக் குறிப்பிட்டு டிரான்ஸ்ஃபர் செய்த பிறகு, உங்கள் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் டெபிட் செய்யப்பட்டுவிட்டால், அப்படிப்பட்ட ஒரு வங்கிக் கணக்கு எண்ணோ, யு.பி.ஐ ஐடியோ இல்லவே இல்லை என்றால், தாங்கள் டிரான்ஸ்ஃபர் செய்த பணம் உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு நாளிலிருந்து மூன்று நாள்களுக்குள் மீண்டும் தானாகவே கிரெடிட் செய்யப்படும்.

அவ்வாறு செய்யப்படவில்லை என்றால், தாங்கள் தங்கள் வங்கிக்கு நேரடியாகச் சென்று புகார் அளித்தால் நடவடிக்கை எடுத்து அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் திரும்ப கிரெடிட் செய்துவிடுவார்கள்.

இதில், நீங்கள் எல்லா விவரங்களையும் சரியாகக் குறிப்பிட்டு, உங்கள் வங்கி தவறுதலாக வேறு ஒருவருடைய வங்கிக் கணக்குக்கு பணத்தை கிரெடிட் செய்துவிட்டால் அது முழுக்க முழுக்க வங்கியின் தவறு என்றாகிவிடுகிறது.

அவ்வாறான சூழ்நிலையில் தாங்கள் வங்கிக்கு நேரடியாகச் சென்று தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து பூர்வமான புகார் அளித்தால் உங்களுடைய வங்கி உடனே நடவடிக்கை எடுத்து அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றம் செய்யும்.  

ஆதாரங்கள் என்று பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ததற்கான ஸ்க்ரீன்ஷாட், தாங்கள் ஏற்கெனவே தங்கள் வங்கிக் கணக்கில் ரிஜிஸ்டர் செய்து வைத்துள்ள பணத்தைப் பெறுபவரின் வங்கி விவரங்கள் (Beneficiary Details), அந்தத் தவறு நடந்த குறிப்பிட்ட நாளுக்கான வங்கிக் கணக்கு புத்தகம் அல்லது அறிக்கையின் நகல், இத்தோடு என்ன தவறு நடந்தது என்பதற்கான விளக்கக் கடிதம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.  

ஒரே வங்கியில் உள்ள வங்கிக் கணக்கில் தவறுகள் நடந்தால்?

தங்கள் வங்கிக் கணக்கும் தாங்கள் தவறுதலாகப் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்தவரின் வங்கிக் கணக்கும் ஒரே வங்கியாக இருந்தால், தாங்கள் தங்களது புகாரை தகுந்த ஆதாரங்களுடன் வங்கியில் கொடுத்தால், உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு மீண்டும் கிரெடிட் செய்துவிடுவார்கள்.

இதில் சில சமயம் தவறுதலாகப் பணம் கிரெடிட் செய்யப்பட்டவரின் ஒப்புதலைப் பெற்று, பிறகு உங்கள் வங்கிக் கணக்குக்கு அந்தப் பணத்தை மாற்றம் செய்து கொடுப்பார்கள். நடைமுறையில் இதற்கு சில நாள்கள் ஆகலாம்.

தங்கள் வங்கிக் கணக்கும் தாங்கள் தவறுதலாக டிரான்ஸ்ஃபர் செய்த பணத்தின் வங்கிக் கணக்கும் வேறு வேறு வங்கியாக இருந்தால்?

இப்படிப்பட்ட சமயத்தில் இந்த விஷயம் கொஞ்சம் சிக்கலாகி விடுகிறது. இதில் இரு வங்கிகள் தொடர்புடையதால் தாங்கள் தங்கள் வங்கிக்குச் சென்று தவறான வங்கி கணக்குக்கு பணம் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து புகார் அளித்தவுடன், அப்படித் தவறுதலாகப் பணம் கிரெடிட் செய்யப்பட்ட நபருடைய வங்கியிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தவறுதலாகப் பணம் கிரெடிட் செய்யப்பட்டவரின் ஒப்புதலைப் பெறாமல் அவருடைய வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஆகவே, இதில் உங்கள் பணத்தைத் திரும்ப பெறுவதற்கு 5-லிருந்து 20 நாள்கள் வரைகூட ஆகலாம்.

சம்பந்தப்பட்டவர் ஒப்புதலை தரவில்லை என்றால்?

தவறாகப் பணம் கிரெடிட் செய்யப்பட்ட வங்கிக் கணக்குக்கு உரியவர் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து அந்தப் பணத்தை திரும்ப எடுப்பதற்கு ஒப்புதலை தரவில்லை என்றாலோ, அந்தப் பணத்தை எடுத்து செலவழித்துவிட்டாலோ அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கையை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இதில், தவறான விவரங்களைக் குறிப்பிட்டு பணத்தை நாம் டிரான்ஸ்ஃபர் செய்திருந்தால், உங்கள் வங்கியோ அவருடைய வங்கியோ ஒத்துழைப்பைத் தருவார்களே தவிர, சட்டபூர்வ நடவடிக்கையை நீங்கள்தான் எடுக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு சில நாள்களில் இருந்து மாதங்கள் வரைகூட ஆகலாம்.

பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

ஏற்கெனவே குறிப்பிட்டபடி பணத்தைப் பெறுபவரின் வங்கிக் கணக்கு விவரங்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்த பின் தங்கள் வங்கிக் கணக்கில் ரிஜிஸ்டர் செய்து, பிறகு பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும்.

பெரிய தொகையை டிரான்ஸ்ஃபர் செய்யும் முன் முதலில் ஒரு சிறு தொகையை ரூ.50, ரூ.100 என்று டிரான்ஸ்ஃபர் செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்துகொண்டு விட்டு, பிறகு மீதியுள்ள பெருந்தொகையை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

பணம் டிரான்ஸ்பர் செய்த பிறகு, அந்த ஸ்க்ரீன்ஷாட்டையோ, உங்களுக்கு வரும் குறுஞ்செய்தியையோ சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பித்து உறுதி செய்துகொள்வது நல்லது.

நமது வங்கிக் கணக்கில் நடைபெறும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையின்போது நமக்கு நம்முடைய மொபைல் நம்பருக்கு குறுஞ்செய்தி வருவதுபோல் வங்கி கணக்கில் கண்டிப்பாகப் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தவறுதலாகப் பணம் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுவிட்டால் ஏற்கெனவே குறிப்பிட்டபடி முதலில் அந்தத் தவறு நடந்ததற்கான ஆதாரங்களைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்ட வங்கியிடம் புகார் அளித்தும் பலனில்லை என்றால் ஆர்.பி.ஐ ஓம்புட்ஸ்மன் (RBI Ombudsman) பிரிவுக்கு புகார் அளிக்கலாம். இந்தப் புகாரை ஆன்லைன் மூலமாகக்கூட செய்யலாம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.