இந்தியாவில் முதலாவது இணைய வழி திருமணம்!!
இந்தியாவின் கேரளாவில் முதல்முறையாக வெளிநாட்டு மாப்பிள்ளையை இணைய வழியில் பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்தவர் ஜீவன்குமார். இவர் உக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருவனந்தபுரம் கழக்கூட்டத்தை சேர்ந்த தன்யாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இருவரும் கடந்த மார்ச் மாதம் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய புனலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். எனினும் கொரோனா பரவல் காரணமாக ஜீவன்குமாரால் குறிப்பிட்ட நாளில் சொந்த ஊரான கேரளாவுக்கு வரமுடியவில்லை.
இதையடுத்து ஆன்லைன் மூலம் திருமணத்தை நடத்த அனுமதிக்கக்கோரி இருவரும் கேரள உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்தனர். அவர்களின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அது தொடர்பாக வெளியுறவு துறை, தகவல் தொழில் நுட்பத்துறையிடம் கருத்து கேட்டதை அடுத்து அது குறித்து பரிசீலித்த இரு துறைகளும் இணைய வழி திருமணத்தை நடத்த அனுமதி வழங்கியது.
இதையடுத்து நேற்று புனலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் வைத்து இருவருக்கு இணைய வழி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அங்கு மணமகள் தன்யா, மணமகன் ஜீவன்குமாரின் தந்தை தேவராஜன் மற்றும் இருவீட்டார் உறவினர்கள் வந்திருந்தனர்.
இதே வேளை உக்ரைன் நாட்டில் ஜீவன்குமாரும் ஆன்லைனில் தயாராக இருந்தார். இதையடுத்து சார்-பதிவாளர் டி.எம்.பிரோஸ் முன்னிலையில் இணைய வழி காணொளி காட்சி மூலம் இருவருக்கும் திருமணம் நடந்தது.
அப்போது, மணமகன் சார்பில் அவரது தந்தை தேவராஜன் பதிவேட்டில் கையெழுத்து போட்டார். இந்த திருமணத்தை மாவட்ட பதிவாளர் சி.ஜே.ஜான்சன் காணொளியில் கண்காணித்தார்.
திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணமகள் தன்யாவுக்கு திருமண சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேவேளை இணைய வழி திருமணம் நடப்பது கேரளாவில் இதுவே முதல் முறை என தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை