புத்தளம் , கற்பிட்டி பிரதேச சபைகளுக்கான புதிய பிரதேச சபை உறுப்பினர்கள்

 


புத்தளம் பிரதேச சபை மற்றும் கற்பிட்டி பிரதேச சபைகளுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 3 புதிய பிரதேச சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமனம் செய்யும் நிகழ்வு நேற்று (24) புத்தளம் நகர சபையில் நடைபெற்றது.


கடந்த உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸூக்கு கிடைத்த 3 போனஸ் ஆசனங்களுக்கு புத்தளம் பிரதேச சபைக்கு பிஸ்லியா பூட்டோ, பாத்திமா இல்மா ஆகியோரும், கற்பிட்டி பிரதேச சபைக்கு பாத்திமா முஜீபாவும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த 3 பெண் உறுப்பினர்களுக்கும் கட்சியால் வழங்கப்பட்ட ஒப்பந்த காலம் நிறைவடைந்ததை அடுத்து, அவர்கள் தமது உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இதனை அடுத்து, புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேச சபைகளில் ஏற்பட்ட உறுப்பினர்கள் வெற்றிடத்திற்கே புதிய உறுப்பினர்கள் மூவர் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கற்பிட்டி பிரதேச சபைக்கு உலாம் காதர் சித்தி சகீனாவும் , புத்தளம் பிரதேச சபைக்கு அசநெய்னா நௌபியாவும், நந்த விதானலாகே அமிலா பிரியதர்ஷினி ஆகிய மூவரும் இவ்வாறு புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மூவரும் மு.கா தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக், புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக், புத்தளம் பிரதேச சபை தலைவர் அஞ்சன சந்தருவன், கற்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எம்.இன்பாஸ் உட்பட மு.கா புத்தளம் நகர சபை, புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.