ஆலயத்தின் புனிதத்தை உதாசீனம் செய்த பொலிஸ் அதிகாரி!


யாழின் பிரபல ஆலயத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சப்பாத்துடன் நுழைந்தமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன இன்று மதியம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நாளை கிளிநொச்சியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொலிஸ் மா அதிபர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தையும் இன்று மாலை சந்திக்கவுள்ள அவர் பின்னர் காங்கேசன்துறையில் தங்கியிருந்து நாளை கிளிநொச்சிக்குப் பயணமாவார் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நாளைய கூட்டத்துக்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் , வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயங்களுக்குள்,  காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிங்கள பொலிஸ் அதிகாரி பாதணியை அகற்றாமல் கோயிலுக்குள் சென்றமை தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், கோவில் வெளி வீதியில் சப்பாத்துகளை கழற்றிவிட்டு, கோவில்களுக்குள் சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில், குறித்த அதிகாரி மட்டும் சப்பாத்துகளை கழற்றாது, கோவில்களுக்குள் சென்ற சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.