அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்!!


 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 விடுதலை என்பது ஒரு அக்கினிப்பிரவேசம், நெருப்பு நதிகளை நீந்திக்கடக்கும் நீண்ட பயணம், தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம், இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

மாவீரர் பணிமனை,அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
20.11.2021

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

எமது தேசத்தின் உன்னதர்களான மாவீரர்களைப் பூசித்து வணங்கும் திருநாள், மாவீரர் நாளாகும்.
உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்தின் வெற்றிக்காக இறுதிக்கணம் வரை நெஞ்சுரத்தோடு போராடி மண்ணை முத்தமிட்ட மானமறவர்களை எமது நெஞ்சப்பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது வீர விடுதலைவரலாறு, எம் மாவீரர்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் உயிர்த்தியாகத்தாலும் பொறிக்கப்பட்டது. சோதனை மிகுந்த நெருக்கடியான வரலாற்றுக் காலகட்டங்களில், பெரும் மலையாக நின்று தடைகளைத் தகர்த்து எம்மைத் தலைநிமிர வைத்து, வையகத்தில் எம்மினத்திற்கான முகவரியைப் பெற்றுத்தந்தவர்கள் எமது மாவீரர்களே.
தலைமுறை தலைமுறையாக எமது இதயக்கோயிலில் வைத்துப் பூசிக்கவேண்டியவர்கள் எம் மாவீரர்கள். இம்மாவீரர்களை விடுதலைப்போருக்கு உவந்தளித்த பெற்றோர்களே, உரித்துடையோர்களே உங்களைப் போற்றி, பேரன்புடன் பற்றிக்கொள்ளும் இந் நாளில் மாவீரர்களுக்கு மலர்தூவி நெய்விளக்கேற்றி வணங்கிட உங்கள் வாழிட நாடுகளில் மாவீரர் நாளுக்கான மாவீரர் மண்டபங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

எமது விடுதலைக்காக முதல் வித்தாகிய லெப்.சங்கர் அவர்களின் வீரச்சாவடைந்த நாளாகிய நவம்பர் 27ஐ தேசிய மாவீரர் நாளாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 1989 இல் பிரகடனப்படுத்தியிருந்தார். அந்நாளையே உலகெங்கும் வாழும் தமிழர்கள் கனத்த இதயங்களுடன் மாவீரர்நாளாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள். இந்த மாவீரர்கள் துயில்கொள்ளும் துயிலுமில்லங்களை அழித்தும், உறவுகள் மாவீரர்களுக்குச் சுடரேற்றி நினைவேந்துவதைத் தடுப்பதன் மூலமும் தமிழர்கள் நெஞ்சில் நீறுபூத்து நிற்கும் நெருப்பை அணைத்துவிடலாம் என சிங்கள அரசு நப்பாசை கொண்டுள்ளது.

தமிழர்களின் ஓர்மத்தையும் போர்க்குணத்தையும் இந்நாள் கூர்மைப்படுத்துவது சிங்கள அரசிற்கு அச்சத்தை ஏற்படுத்திவருவதாலேயே, புலம்பெயர் தேசத்திலும் தமிழ்தேசியக் கட்டமைப்புக்களைச் சிதைத்து மாவீரர்நாளைக் குழப்பத் திட்டமிட்டுச் செயற்பட்டுவருகின்றது. எந்த இடர்வரினும் நாம் ஒன்றுபட்ட சக்தியாக தொடர்ந்தும் இந்நாளில் மாவீரர்களை நினைவுகூர்ந்து எமது இலட்சியப் பாதையில் பயணிப்போம்.

சத்திய இலட்சியத்தில் பற்றுறுதி கொண்ட மக்களாக ஒன்று திரண்டு நிற்பதால் எந்தவொரு சக்தியாலும் எம்மை அழிக்கவோ, அசைக்கவோ முடியாது. விடுதலை வேண்டிநிற்கும் மக்களுக்கு உறுதிதான் வலிமைமிக்க பேராயுதம். இன்று மாவீரர்களின் கல்லறைகள் சிதைக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் இலட்சியங்கள் எமது நெஞ்சங்களில் அழிக்கமுடியா இடத்தில் இருந்து எம்மை வழிநடத்தும் என்பது உறுதி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.