தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் உத்தியோகபூர்வ அறிக்கை!!
தமிழீழத் தேசத்தின் இறைமையை எந்நிலைவரினும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் - 2021 தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளிவந்துள்ளது .
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27.11.2021
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள்.
தமிழீழ மக்களின் இறைமையை மீட்டெடுத்து, தமிழீழத்தேச அரசமைக்கும் புரட்சிகர வரலாற்றுப்பயணத்திற்காக, விடுதலைக்கனவுடன் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரத் தெய்வங்களை வணங்கி, நினைவுகூர்ந்து, அவர்கள் கனவு நனவாக நாம் உறுதியுடன் போராடியே தீருவோமென உறுதிகொள்ளும் புரட்சிகரநாள்.
தமிழின விடுதலைக்காகத் தம்மை ஈந்து எமது மண்ணில் விதையாகிப்போன மாவீரர்களின் ஈகத்தினை ஒவ்வொருவரது நெஞ்சத்திலும் நிறுத்தி, தமிழ்த்தேசியம் என்ற உயிர்மைக் கருத்தியலினை எமது வாழ்வியல் நெறியாகவும் அரசியல் வழியாகவும் கொண்டு, தமிழீழத் தனியரசமைக்கும் விடுதலைப்பயணத்தில், உறுதியுடன் போராடுவோம் என எழுச்சிகொள்ளும் தமிழீழத்தேசியநாள்.
தமது இறுதிமூச்சு வரை தமிழின விடுதலைக்காகத் தம்மை ஒறுத்துப்போராடி, ஒப்பற்ற ஈகங்களைச் செய்த எமது மாவீரர்களை நினைவுகூரும் இந்நாளில் என் குடும்பம், என் உடைமை, என் வளங்கள், என் நலன்கள், என் வளர்ச்சியென சிந்தையில் குறுகிக்கிடக்காமல், எமது மக்கள், எமது மண், எமது விடுதலை என்று தமிழர்கள் ஒவ்வொருவரும் எண்ணி உணர்வதே அறம் என்ற பரந்துபட்ட சிந்தையில் எமது மக்களை உந்தும் புரட்சிகரநாள்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்கு எடுத்துச்சென்ற எமது வீரர்களைப் பெற்றெடுத்தோரும் அவர்தம் குடும்பத்தினரும் என்றும் போற்றுதற்குரியவர்கள். தாயகத்தில் இம்மாவீரச் செல்வங்களுக்குச் சுடரேற்றி வணக்கம் செலுத்தமுடியாது, மாவீரர் துயிலுமில்லங்கள் இடித்தழிக்கப்பட்டு இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இறந்தவர்களை நினைவுகூருதல் தொடர்பான அனைத்துலக சட்டங்களைப் புறந்தள்ளி, தமிழ்மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தமுடியாத அளவிற்குத் தடுத்துநிறுத்தியுள்ளபோதிலும் எம்மினத்திற்காக வீரகாவியமானவர்களை ஆண்டுதோறும் நினைவேந்தி வருகின்றோம்;.
இன்று எமது மாவீரர்களினதும் எமது மக்களினதும் அளப்பெரிய உயிர் அர்ப்பணிப்புகளாலும் அடிபணியா வீரம் செறிந்த வாழ்வியலாலும் வளர்த்தெடுத்த தமிழ்த் தேசியம் எனும் பெருவிருட்சம் நாடுகள், எல்லைகள் கடந்தும் தலைமுறைகள் கடந்தும் பெருவளர்ச்சியுற்று நிற்கின்றது. இது வெறும் பூடகமான கருத்துருவாக்கமோ பொருளற்ற கருத்துப் படிமமோ அல்ல. பதிலாக, உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் இனத்தின் பண்பாட்டு, மொழியியல், வாழ்வியல் செழுமையின் உச்சமான ஓர் உயிர் இயக்கமாகும். ஓர் பெரும் நாகரிகத்தை, அகம் புறம் சார்ந்த வாழ்வியலை, தொன்மையான வளமான மொழியை, காலங்காலமாக அடிபணிய மறுத்த வீரஞ்செறிந்த மறவர்களின் வித்துடல்களைக் கருவாகக்கொண்ட ஓர் தேசத்தின் உயிர் மூச்சாகும். இதுவே, தாயகம் தொட்டு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் அர்த்தம் செறிந்த வாழ்வியலின் மையமாகவும் அமைந்துள்ளது.
தலைமுறைகள் கடந்தும் தேசங்கள் கடந்தும் ஓர் பெரும் விடுதலைப்போரின் பேரியக்கமாக மலர்ந்து நிற்கின்றது இவ்வுயிரியக்கம். ஓர் தேச மக்களாக, நாம் முகங்கொடுத்த இன அழிப்புகள் நிறைந்த வாழ்வியலும் ஈழத்தமிழின வரலாறும் திரிபுகள் மறைப்புகள் கடந்து, அடுத்துவரும் இளந்தலைமுறைகளுக்கும் கடத்தப்பட்டு, எமக்கானதோர் தாயகம் வேண்டுமென்ற உயிரோட்டமானது தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டுப் போசிக்கப்படும்போதே, எமது விடுதலையின் கருவானது கலையாமலிருப்பது உறுதியாகும். அத்துடன் உலகெங்கும் பரந்து வாழும் நாம், எமது மொழி, கலைககள், பண்பாடு என்பன செழுமையும் உயர்ச்சியும் அடையும் வகையில் பேணிப்பாதுகாத்து, எமது தேசிய இனக்கூட்டுணர்வை மேலும் வலுவூட்டல் அவசியம். இதுவே, நாம் எமது மாவீரர்களுக்குச் செய்யும் உண்மையான அகவணக்கமாகும்.
பௌத்த சிங்களப் பேரினவாத அரசின் இராணுவமேலாதிக்கத்தை அடக்கி, அதனைத் தமிழரின் மறத்தின் முன்பு மண்டியிடச் செய்து, தன்னாட்சியடிப்படையில் தனித்தமிழீழம் அமைக்க தமிழரால் முடியும் என்று பலமுறை களமுனையில் நிரூபித்துக்காட்டியும் ஈழத்தமிழரின் விடுதலைப்போர், இத்தகைய இடர்நிலைக்கு வந்தமைக்கு, பன்னாட்டு வல்லாண்மையாளர்கள் தமது நலன்களிற்காகச் பௌத்த சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை அரசுக்குக் கொடுத்த ஒத்துழைப்பே காரணமென்பதை உலகத்தமிழர்கள் ஐயந்திரிபுறப் புரிந்துள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய எமது புரட்சிகர விடுதலை இயக்கத்தையும் அதனால், ஆளுகைக்குட்படுத்தப்பட்டுவந்த தமிழர்களின் தமிழீழத் தேச அரசையும் அழிப்பதற்காக, உலகெங்கும் ஒத்துழைப்புத் தேடி சிறிலங்கா அரசினால் செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் எண்ணிலடங்காதவை. எமது தாயகத்தில் சிங்கள அரசானது தமிழ்மக்களின் இறையாண்மையினை அழித்துத் தனது மேலாதிக்கத்தினை செலுத்தவேண்டுமென்று திட்டமிட்டுச் செயற்படுவதால், தனது இறையாண்மையினையும் இழந்துவருவதை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். சிங்கள தேசமும் அதனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகமும் இறையாண்மையுள்ள தேசங்களாக இயங்கும்போதுதான், எமது தேசங்களை பாதுகாக்கமுடியும். சிங்கள அரசதலைவர்கள், எமது தேசங்களைக்; கூறுகளாகப் பிரித்து வல்லரசுகளிடம் பலதசாப்தங்களுக்கு அடைவுவைக்கப்பட்டு வருவதை சிங்கள மக்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்களாயின் பின்னர் நீங்களும் தமிழ் மக்களைப்போல் தேசவிடுதலைக்காகப் போராடவேண்டிய காலம் விரைவில் வரும் என்ற யதார்த்தத்தினை மறந்துவிடவேண்டாம்.
ஆனாலும் சிங்கள தேசம், தாம் எத்தகைய சிக்கலில் சிக்குண்டு துன்பத்தில் துவண்டாலும் அது தமிழர்களது நிலங்களை வன்பறிப்புச்செய்வதிலும் தமிழர்களது சமூகப் பொருண்மிய வாழ்வியலை அழிப்பதிலும் தமிழர்கள் ஒரு தேசமாக இருப்பதைத் தடுப்பதிலும் தன்னாலியன்ற அத்தனையையும் செய்யத்தான் போகிறது. தமிழினத்தை வேரோடு அழிக்கவேண்டும் என்ற மகாவம்ச வக்கிர மனநிலையிலிருந்து, அதனால் ஒருபோதும் வெளிவர முடியாது. பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் உருவாக்கமும் இருப்பும் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நாம் விடுபட்டு, ஒரு அடிப்படை மாந்தர்களாகவேனும் வாழ, தமிழினம் தனது தேச விடுதலைக்காகத் தொடர்ந்தும் போராட வேண்டும்.
இன்றைய உலக ஒழுங்கு மாறிவருகிறது. சர்வதேச அரசியல் உறவுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. சீன தேசத்தின் அரசியல், பொருளாதார எழுச்சியும் அதை மையமாகக் கொண்டு உலகிலும் குறிப்பாக, இந்தோ - பசுபிக் பிராந்தியத்திலும் நிகழ்ந்துவரும் பூகோள அரசியல் மூலோபாய நகர்வுகளும் உலக ஒழுங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பெரும் சக்திமிக்கப் பிராந்திய சர்வதேச அரசுகளுக்கிடையிலான மூலோபாய உறவுகளும் கூட்டுகளும் போட்டிகளும் என வலுச்சமநிலை நோக்கிய நகர்வுகள் நிகழ்ந்துவருகின்றன. அரசற்ற ஓர் தேசமாகத் தமிழினத்தையும் அவர்களின் அரசியல் இராசதந்திர விடுதலை முனைப்புகளையும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகப் பொருளாதார நலன்களை மையப்படுத்திய சர்வதேசத் தாராளமய உலக ஒழுங்கு, பல தசாப்தங்களாகத் தாக்கம் செலுத்தி வந்துள்ளது. தமிழர் தேசத்துக்கும் சிங்கள தேசத்துக்கும் இடையில் நிகழ்ந்த, சர்வதேச அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் இறுதியில் நிகழ்ந்த பெரும் இன அழிப்புப் போரிலும் அதனை வெளிப்படையாகவே தமிழர் தேசம் அனுபவித்திருந்தது.
2002 ஆம் ஆண்டு, தமிழர் தேசத்துக்கும் சிங்கள தேசத்துக்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையினைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்துடன் சர்வதேசச்சமூகம் நிகழ்த்தியிருந்த சந்திப்புகளும் பேச்சுகளும் எண்ணிலடங்காதவை. சீன மற்றும் யப்பானிய உயர்மட்ட இராசதந்திரிகள் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களும் மேற்குலக அரசுகளான சுவீடன், யேர்மன், நெதர்லாந்து, பிரித்தானியா, நோர்வே, சுவிற்சர்லாந்து, கனேடிய இராசதந்திரிகளும் தொடர்ச்சியாக ஈழத்தமிழ் மக்களின் தலைமையான தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இராசதந்திர அரசியல் பேச்சுகளில் ஈடுபட்டிருந்தனர். உலகத் தமிழின வரலாற்றில் முதன் முறையாக சர்வதேச இராசதந்திர சமூகம் தமிழர்களின் அரசியற் தலைமையுடன் தேடிவந்து பேச்சுகளில் ஈடுபட்ட ஓர் காலகட்டமாக அது இருந்தது.
ஓர் தேசமாகத் தமிழினம், உறுதியுடனும் தெளிந்த பார்வையுடனும் சர்வதேசச் சட்டங்களுக்கு அமைவாகத் தமது அடிப்படை அரசியல் உரிமைகளான சுயநிர்ணய உரிமை, தாயகம், தேசியம் ஆகியவற்றினடிப்படையில் சர்வதேசச் சமூகத்தின் அனுசரணையுடன் சிங்கள தேசத்துடன் பேச்சுகளில் ஈடுபட்டிருந்தது.
இவ்வாறானதோர் வரலாற்றுச் சூழமைவில், இன்று எமது அரசியல் இராசதந்திர முன்னெடுப்புகளில் இப்பூகோள அரசியல் போக்கினை ஆழமான அவதானிப்புக்குட்படுத்தத் தவறுவோமாயின், அரசியல் இராசதந்திரப் பாதையில் தடைப்பட்டு, அடையாளம் இழந்து போகும்நிலைக்குத் தள்ளப்படுவோம். தமிழர் தாயகத்தில் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை உண்மையுடனும் உறுதியுடனும் முன்னெடுக்கும் ஆற்றல்மிக்க போதிய தலைமைகள் இல்லாத நிலையில், சில வலுமிக்க மேற்குலக அரசுகளும் பிராந்திய அரசுகளும் தத்தமது நலன்களைப் பேணும் வகையில் தமிழ் மக்கள் மீது அரசியல் தீர்வுகளைத் திணிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அத்துடன், ஈழத்தமிழ் மக்களின் இன அழிப்புக்கான நீதிக்கான முன்னெடுப்புகளைச் சர்வதேச அரங்குகளில், தமது பூகோள அரசியல் நலன்களுக்கேற்றவாறாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஓர் அரசியல் உதைப்பந்தாகவே மாற்றியுள்ளன. இதைப் புரிந்துகொண்டு சிங்கள அரசியலமைப்புக்குள் தீர்வுதேடும் தமிழ் அரசியற்கட்சிகள் தமது கொள்கைகளை மாற்றி எமது விடுதலைக்காக ஒன்றிணைந்து குரல்கொடுக்கவேண்டும்.
இங்கு, நாம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், சர்வதேச பூகோள அரசியல் குறித்துக் கூறிய கருத்துகளை நினைவிற்கொள்வது மிகவும் பொருத்தமாகும். “இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை. ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையே முதன்மைப்படுத்துகிறது. மனித உரிமை, மக்கள் உரிமை என்ற தார்மீக அறத்திலும் பார்க்க, பொருளாதார வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கமைப்பை நிர்ணயிக்கின்றன”. இன்று இதன் உண்மைத் தன்மையை முன்பு போலவே ஆனால், ஓர் புதிய உலக ஒழுங்கமைவில் நேரடியாகவே அனுபவித்துவருகின்றோம். சர்வதேச உறவுகளில் நிரந்தரமான நட்பு சக்திகளோ அல்லது எதிர்ப்பு சக்திகளோ இன்றி, தனியே தேச அரசுகளின் நலன்களே நிரந்தரமாகவுள்ள ஓர் ஒழுங்கமைவில் வாழ்கிறோம்.
ஓர் தேசமக்களாக ஒன்றுபட்டு நின்று, தெளிவான அரசியல் நலன்கள் சார்ந்த நிலைப்பாடுகளுடனும் மூலோபாயச் சிந்தனைகளுடனும் செயற்படுவதானது மிகவும் அவசியமானது. இல்லையெனில், அரசுகளாலும் அவர்கள் சார்ந்த அமைப்புகளாலும் அவர்களுடைய நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும் வெறும் சதுரங்கக் காய்களாக அகப்பட்டு, நாம் எமது இறைமையையும் அடையாளத்தையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.
சர்வதேச மற்றும் பிராந்திய அரசுகளின் நலன்களுக்கோ இறைமைக்கோ ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களும் இன அழிப்புக்கான நீதி கோரிய முன்னெடுப்புகளும் எக்காலத்திலும் எதிராக இருந்தது கிடையாது.
இந்திய அரசு, தமிழ் மக்கள் மீது இந்திய - இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையிலான இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தைத் தீர்வாகத் திணிக்க முற்படுவது, ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சியுரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து, தேசிய இன முரண்பாட்டுக்குத் தீர்வுத்திட்டம் ஒன்றை வகுக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் தொடர்ச்சியான நிலைப்பாடாகும். இங்கு நாம், தமிழீழத் தேசியத் தலைவர் இது குறித்துக் கூறியதை நினைவிற்கொள்ள விரும்புகின்றோம். “நாம் இந்தியாவை எமது நேச சக்தியாகவே பார்க்கின்றோம். எமக்கு இந்தியாவின் நல்லெண்ணமும் உதவியும் அவசியம். அதேவேளை, இந்தியா தனது தீர்வைத் தமிழீழ மக்கள் மீது திணிப்பதை நாம் விரும்பவில்லை. தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முழு உரிமையும் எமது மக்களுக்கு உண்டு”.
அன்பார்ந்த தமிழீழ மக்களே!
இன்று நாம்; புதியதோர் சர்வதேசச் சூழமைவை எதிர்கொண்டு நிற்கின்றோம். பூகோள அரசியல் நலன்களின் அடிப்படையிலான அரசுகளின் மூலோபாயங்களுக்கு முகங்கொடுத்து நிற்கின்றோம். தாயகத்தில் தொடர்;ச்சியாக எமது இன அடையாளங்களை அழித்து, திட்டமிட்டுத் தமிழ் மக்களின் இனப்பரம்பல் மாற்றியமைக்கப்பட்டு, எமது அரசியல் வாழ்வின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் சிங்கள அரசை எதிர்கொண்டுள்ளோம்.
தமிழர்களின் நிலங்கள், பல்தேசிய நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படுவதன் மூலமும் தமிழர்களின் தாயகம், வெளியாரின் முதலீட்டிற்குத் திறந்துவிடப்பட்டிருப்பதன் மூலமும் சிறிலங்கா அரச ஒத்துழைப்புடனான பொருண்மியத் திட்டங்கள் மூலமாகவும் தமிழர்களின் பொருண்மியப் பண்பாடு சிதைத்தழிக்கப்பட்டு தமிழர் தாயகத்தின் பொருண்மியம், தமிழர் கைகளிலிருந்து முற்றாக அகற்றப்பட்டவாறு தமிழீழத் தமிழர்களின் தேசிய இன வேர்கள் பிடுங்கியெறியப்பட்ட வண்ணம் உள்ளன.
தமிழ்த்தேசிய ஓர்மையினைச் சிதைக்கும் நோக்கோடு, ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்திலுள்ள அக முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்வதுடன் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக அடையாள வேறுபாடுகளை வலியுறுத்தவும் புதிய வேறுபாடுகளைப் புகுத்தவும் தம்மாலான அத்தனை சூழ்ச்சிகளையும் உலக வல்லாண்மையாளர்களின் உளவு அமைப்புகளும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உளவு அமைப்புகளும் தொடர்ந்து செய்துவருகின்றன. இதன் வெளிப்பாடாகவே, தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களைச் சிதைத்து, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி, விடுதலைச் சிந்தனையிலிருந்து தமிழ்மக்களை அகற்றுவதற்கான செயற்பாடுகள், பல குழுக்களால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற இச்சூழலில் மக்களை விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தாயகத்தில் பல ஆண்டுகளாக அரசியற் கைதிகளாகவுள்ள எம்மவர்களை விடுதலைசெய்யாது, தொடர்ந்தும் பலர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றார்கள். இதற்கு நீதி கேட்டு எமது மக்கள் சர்வதேசச் சமூகத்திடம் குரல்கொடுத்து வருகிறார்கள். காணி அபகரிப்பு, அரசியற்கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான போராட்டங்களென பல வழிகளிலும் சர்வதேசத்திடம் நீதிவேண்டிப் போராடிவருகின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை தொடர்பில் முடிவுகள் ஏதுமின்றி, அவர்களது உறவுகளும் சாவடையும் அவலநிலை இன்றுவரை தொடர்கிறது. முன்னாள் போராளிகளின் நிலைமை துன்பத்திற்கிடமாகவே ஒவ்வொரு நாளும் நகர்கின்றது. தான் நினைத்த நேரத்தில் யாரையும் கைது செய்யலாம், எவ்வழக்கின் கீழும் தண்டிக்கலாம் என்ற நிலையிலும், சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பலர், சந்தேகத்திற்கிடமான முறையில் சாவடைந்தும் வருகின்றனர். இதேவேளை, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பலரும் பாதுகாப்பின்றிச் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். பௌத்த சிங்களப் பேரினவாத அரசு, திட்டமிட்டே அவர்களுக்கான அடிப்படை உதவிகளை வழங்காது தவிர்த்து வருகின்றது. இவற்றுக்கெதிராகத் தன்னெழுச்சியாகப் போராடிவரும் மக்களின் நீதிக்காக நாமும் தொடர்ந்து போராடுவோம்.
புலம்பெயர் தேசங்களில் தொடர்ச்சியான அரசியற்சந்திப்புகள், தமிழின அழிப்பிற்கு நீதிகோரி நடைபெறும் மக்கள் போராட்டங்கள், ஈருருளிப்பயணங்கள், ஒளிப்படக் காட்சிப்படுத்தல்கள், கவனயீர்ப்புப் போராட்டங்கள், நாடுகள் வாரியாக நிறைவேற்றப்படும் தமிழின அழிப்பிற்கு எதிரான தீர்மானங்கள், தமிழினப் படுகொலையாளர்களுக்கு எதிரான கண்டனப்போராட்டங்கள், எமது நீதிக்கான சட்டரீதியான முன்னெடுப்புக்கள், எமது விடுதலைப்போராட்டத்தைச் சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரச்சாரங்களுக்கெதிராக இளையோரால் சமூகவலைத்தளங்களில் நடாத்தப்படும் விழிப்புணர்வுகளென பல வழிகளிலும் போராடிவரும் இச்சூழமைவில், எமது ஒன்றுபட்ட சக்தியைச் சிதைக்கும் நோக்குடன் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு செயற்பட்டுவரும் எமது மக்கள், தேசியச் செயற்பாட்டாளர்கள், இளையோர்கள், தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் நாம் பாராட்டுவதுடன், தொடர்ந்தும் ஐ.நா பொதுச்சபை, பாதுகாப்புச்சபை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றங்கள், நாடுகள் வாரியாகத் தீர்ப்பாயங்களென நாம் நகரவேண்டியுள்ளதால், இவற்றை வெற்றிகரமாகச் செய்துமுடிப்பதற்கு எமது வாழ்விட நாடுகளின் அரசுகள், அரசியற்பிரமுகர்கள், மனிதவுரிமை அமைப்புகள், சட்டவல்லுனர்களென அனைவரையும் நாடி எமது விடுதலைப்போராட்டத்தை முன்னகர்த்தும் தார்மீகப்பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
அன்பார்ந்த தமிழக மக்களே!
தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் தாய்மடியாகத் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்களே என்றும் இருந்துவருவதுடன், ஈடிணையற்ற ஈகங்களைத் தமிழீழ விடுதலைக்காகத் தமிழினப்பற்றுடன் செய்துவருகின்றீர்கள். இவ் வையகத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தாயகமாகத் தமிழ்நாடே இருக்கிறது. எமது மொழியையும் பண்பாட்டையும் வரலாற்றையும் தொல்லியலையும் அறிவார்ந்து வளர்த்துக்காக்கும் ஆற்றல்வளம், உங்களிடமே ஒப்பீட்டளவில் கூடுதலாகவுள்ளது. கட்டமைப்புசார் தமிழின அழிப்புக்கு எதிராக சுயாதீன சர்வதேச விசாரணைக்கு இந்திய நடுவண் அரசின் ஆதரவைப் பெறும்வகையில், அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்காகவும் தொடர்ந்தும் குரல் எழுப்புமாறு வேண்டிநிற்கின்றோம். தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கு, எமது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்பார்ந்த இளையோர்களே!
எமது இனத்தின் பண்பாட்டையும் அடையாளங்களையும் பாதுகாத்து, தமிழீழ விடுதலைப் பயணத்தில் தற்பொழுது நீங்கள் முன்னெடுக்கும் பணியானது மிகக்காத்திரமானதாக அமைந்துவருவதுடன், அது தமிழின அழிப்புச் செய்துவருகின்ற சிங்கள அரசை இன்று அச்சமடையச்செய்துள்ளது. தாயகத்தில் தொடரும் தமிழின அழிப்பிற்கு எதிராகவும் தமிழீழத் தனியரசு அமைக்கும் இலக்கு நோக்கியும் எமது விடுதலைப்போராட்ட நியாயத்தையும் எமது மக்கள்படும் அவலத்தையும் சர்வதேசச் சமூகத்திடம் வெளிப்படுத்த வேண்டிய பாரியபொறுப்பு உங்களிடம் உண்டு. தாயகத்து மக்களின் பாதுகாப்பும் பலமும் பெருமளவு உங்கள் கைகளில்தான் தங்கியுள்ளது. பல்தேசிய இனங்களின் ஆதரவை எமது விடுதலைக்கான பயணத்தை நோக்கித் திருப்பவேண்டிய பாரியபொறுப்பையும், சமரசமற்ற வகையில் எமது இனத்தின் விடுதலைக்காகக் குரல்கொடுக்க வேண்டிய கடமையையும் இளைய சமுதாயத்தின் கைகளில் வரலாறு ஒப்படைத்திருக்கின்றது. எனவே, பல தியாகங்களாலும் அர்ப்பணிப்புக்களாலும் வளர்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னகர்த்த, இளையோர்கள் தொடர்ந்தும் முன்வரவேண்டும் என வேண்டிநிற்கின்றோம்.
அன்பார்ந்த தமிழீழ மக்களே!
தமிழீழத் தேசியத் தலைவரின் மூலோபாயச் சிந்தனையின் அடிப்படையில், பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளிலிருந்து அடிமைத் தடைகளை உடைத்தெறிந்து, தமிழீழத்தேச அரசை நிறுவும் ஆற்றலை, எமது மாவீரர்களின் ஈகங்கள் எமக்குக் கொடுத்திருக்கின்றன. சவால்கள் மிகுந்த காலப்பகுதியில் மண்டியிடா வீரத்துடன் களமாடிய மாவீரர்களின் உளவுரணையும் அர்ப்பணிப்பையும் நெஞ்சில் நிறுத்தி, தமிழீழத் தேசத்தின் இறைமையை எந்நிலைவரினும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்ற விடுதலை உறுதியுடன் தொடர்ந்தும் போராடுவோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை