முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும்!




 “இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும். இறந்தவர்கள் அவர் யாராக இருந்தாலும் அவரை நினைவு கூருவது மானிடப்பண்பு” என்று குறிப்பிட்டு இன்றைய தினம் ஏற்கனவே வழங்கிய மாவீரர் நிகழ்வுக்கு எதிரான கட்டளையை  இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்பதாக திருத்தியமைத்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கப்பட்ட மாவீரர் நாள் தடை உத்தரவுகளை நீக்கக்கோரி நீதிமன்றில் நகர்த்தல்  பத்திரம் ஊடாக விண்ணப்பிக்கப்பட்டு விசாரணைகள் இன்று இடம்பெற்றது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எழுபத்திரண்டு பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும்-திருத்திய கட்டளையை வழங்கிய நீதிமன்று


இந்நிலையில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான இந்த தடை உத்தரவை நீக்கக்கோரி நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைகள்  முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.


தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ,கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகனேசன், சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன்,வி.எஸ்.எஸ் தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராசா,க.கணேஸ்வரன் ஆகிய  சட்டத்தரணிகள்  குறித்த வழக்கில் ஆயராகி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றுக்கு எடுத்துரைத்தனர்


இதனடிப்படையில் குறித்த திருத்திய கட்டளையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழங்கியுள்ளார்.


குறித்த கட்டளை தொடர்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவிக்கையில்,


நவம்பர் மாதம் 17 ம் மற்றும் 23 ம் திகதிகளில்  ஏழு வெவ்வேறு  காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையினர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளின் மூலம் வழங்கப்பட்ட கட்டளைகள் அதாவது எதிர்வரும் நவம்பர் மாதம் 25ம் திகதி இன்று முதல் 27ம் திகதி வரை  மாவீரர் நினைவுகூரல்களை நடாத்த கூடாது என்று செய்த விண்ணப்பத்தின் மீது நீதிமன்றம் தடைக்கட்டளையை வழங்கியிருந்தது.


அந்த தடைக்கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் சார்பில் இன்றைய தினம் நகர்த்தல் பாத்திரம் அழைத்து மன்றில் தோன்றி எங்களுடைய சமர்ப்பனங்களை செய்தோம். அந்த சமர்ப்பணங்களை செவிமடுத்தகௌரவ நீதிபதி, தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றினுடைய சின்னங்கள்,இலட்சினைகள் அல்லது அவ் இயக்கத்தினுடைய நிகழ்வு ஒன்றாக நினைவு படுத்தக்கூடியதாக நினைவு கூரல்களை மேற்கொள்ளாமல்  இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும். இறந்தவர்கள் அவர் யாராக இருந்தாலும் அவரை நினைவு கூருவது மானிடப்பண்பு என்று குறிப்பிட்டு ஏற்கனவே வழங்கிய மாவீரர் நிகழ்வு கொண்டாடுவதற்கு எதிரான  கட்டளையை,  இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்பதாக திருத்தியமைத்து கட்டளையாக்கியிருக்கிறார்” என்றார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.