குடும்பத்தினரைக் காப்பாற்ற சாலையோர வியாபாரியாக மாறிய பெண் பத்திரிகையாளர்

 


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடக்குமுறையால் வேலைக்குச் செல்ல முடியாத பெண் பத்திரிகையாளர் ஒருவர் குடும்பத்தைக் காக்க, சாலையோர வியாபாரியாக மாறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் தலிபான்கள் பிடிக்குள் அந்நாடு வந்தது. தலிபான்கள் இடைக்கால முஸ்லிம் எமிரேட் ஆட்சியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த முறை ஆட்சியைப் போல் மோசமாக இருக்காது, பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும், பொருளாதாரம் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்பு மட்டும் மனிதநேய அடிப்படையில் உதவிகளை வழங்கி வருகின்றன.

ஆனால், இந்த மனிதநேய உதவியிலும், தொண்டு நிறுவனங்கள் சார்பில் செய்யப்படும் உதவியிலும் பெண்களைப் பயன்படுத்த தலிபான்கள் தடை விதி்த்தனர். பெண்கள் எந்த வேலைக்கும் செல்லக்கூடாது, குறிப்பாக ஊடகங்களில் பணியாற்றவும் தலிபான்கள் தடை விதி்த்துள்ளனர்.

இதன் காரணமாக தலிபான்கள் ஆட்சிக்குவந்தபின் ஏராளமான ஊடகங்கள் மூடப்பட்டுவி்ட்டன, ஆயிரக்கணக்கான பெண்பத்திரிகையாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

இந்நிலையில் பர்ஜானா அயூபி என்ற பெண் பத்திரிைகயாளர்கள் வேலையிழந்த நிலையில் தனது குடும்பத்தைக் காக்க காபூல் நகர சாலையில் துணி வியாபாரியாக மாறிவிட்டார்.

டோலோ சேனலுக்கு பர்ஜானா அளித்த பேட்டியில், “ ஏராளமான ஊடகங்கள் தலிபான்கள் ஆட்சிக்குப்பின் மூடப்பட்டதால், பெண் பத்திரிகையாளர்கள் வேலையிழந்துவிட்டனர். எனக்கு என் குடும்பத்தினரைக் காக்க வேறு வழி தெரியாததால், சாலையோரத்தில் வியாபாரம் செய்யத் தள்ளப்பட்டேன். சர்வதேச சமூகம், ஊடகங்கள் இங்குள்ள நிலையை கவனித்து, பிரச்சினையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

சர்வதேச ஊடகங்கள் கண்காணிப்பு கூறுகையில் “ ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலைக் கண்காணித்து வருகிறோம். அங்குள்ள பத்திரிகையாளர்கள் நிலை பற்றியும் பார்த்துவருகிறோம். விரைவில் பிரச்சினைக்கு தீர்வு எட்ட முயல்வோம். இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு கிடைக்க சர்வதேச ஊடகங்கள்கூட்டமைப்பு ஒன்று சேர வேண்டும்”எனத் தெரிவி்த்தார்

ஆப்கானிஸ்தான் தேசிய பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் மஸ்ரார் லட்பி கூறுகையில் “ ஆப்கானிஸ்தான் அரசியல் மாற்றம் ஏற்பட்டபின், ஊடகத்தினர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டமாக ஆபத்தான பணியாற்ற பத்திரிகையாளர்கள் தள்ளப்பட்டதால், உயிரைக் காக்க தெருவோர வியாபாரிகளாகவும்மாறிவிட்டார்கள்”எனத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.