அரிய தமிழ்க் கல்வெட்டு தமிழர் தலைநகரில்!!


திருகோணமலையில் மிக அரிய தமிழ்க் கல்வெட்டு ஒன்று , பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தலைமையிலான குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டானது திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில், கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசம் முன்னர் , கட்டுக்குளப்பற்று நிர்வாகப் பிரிவாக இருந்த போது, இந்த இடம் குமரன்கடவை என அழைக்கப்பட்டது. அதோடு அங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன் சமகாலத்துக்குரிய அழிவடைந்த சிவாலயமும் அதன் சுற்றாடலில் அழிவடைந்த கட்டட அத்திவாரங்களும் காணப்படுகின்றன.

கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் முதல் தலைவரும் முதல் பேராசிரியரும் தென்னாசியாவின் புலமைமிக்க தொல்லியல், வரலாற்று அறிஞர்களில் ஒருவருமான கலாநிதி கா. இந்திரபாலா கூறுகையில்,

கங்கராஜ காலிங்க விஜயபாகு தேவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள மன்னன் மாகன். இவன் கங்கவம்சத்தைச் சேர்ந்தவன் என்பது முன்னரே முன்வைக்கப்பட்ட ஒரு கருத்து. இக்கருத்து இலக்கிய ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஊகிக்கப்பட்ட ஒரு கருத்தாகும்.

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டால், இது உறுதிப்படுத்தப்படுகின்றது. காலிங்க விஜயபாகு என்ற பெயர் மாகனுக்கு இருந்தது முன்னரே இலக்கிய ஆதாரங்களால் அறியப்பட்ட செய்தி.

சமகாலக் கல்வெட்டில் அது கொடுக்கப்படுவது இந்த ஆவணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. ஶ்ரீகுலோத்துங்கசோழ காலிங்கராயன் என்பவன் இங்கு இரண்டு முக்கிய செயல்களைச் சாதித்தான் என வரலாறுகளில் கூறப்பட்டுள்ளது.

ஒன்று, அவன் ஈழத்தைக் கைப்பற்றினான். இரண்டாவது, அதன் விளைவாகக் காலிங்க விஜயபாகு தேவர்க்கு வீராபிஷேகம் நடத்தினான். இந்த இரண்டும் புதிய விடயங்கள். மாகன், தென்னிந்தியப் படைகளுடன் ஆட்சியைக் கைபற்றினான் என்பது முன்னரே இலக்கிய ஆதாரங்களில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இவற்றின் சான்றில் குழப்பம் அதிகம். மாகனுக்கு உதவியது தமிழ்ப் படைகள் என்றும், தமிழ்-கேரளப் படைகள் என்றும், கலிங்கத்துப் படைகள் என்றும் தெளிவற்ற கூற்றுகள் உள்ளன.

இவ்வாறான நிலையில் இக்கல்வெட்டு இதைத் தெளிவுபடுத்த உதவுகிறது. காலிங்கராயன் என்பவன் மாகனுக்கு உதவிய படையின் தளபதி என்பதும், அவன் முழுப் பெயரைப் பார்க்குமிடத்து அவன் சோழநாட்டைச் சேர்ந்த ஓர் உயர்நிலை அதிகாரி என்பதும், ஈழமண்டலம் ‘எறிந்து’ என்று கூறுவதால், பொலன்னறுவை அரசை வெளியில் இருந்து வந்து கைப்பற்றினான் என்பதும் இக்கல்வெட்டில் இருந்து ஊகிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், காலிங்கராயன் மாகனுக்கு வீராபிஷேகம் செய்தபடியால், அவன் மாகன் திரட்டிவந்த சாதாரணக் கூலிப்படையின் தளபதியாக இருந்திருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை அந்த அதிகாரம் அவனுக்கு எப்படிக் கிடைத்தது? அதனை மாகன் எப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருந்தது? அவன் சோழ மன்னனுடைய படை ஒன்றின் தளபதியாக இருந்தான் என்றும், மாகன் விண்ணப்பத்துக்கு இணங்கி (ஏற்கெனவே பல முறை இலங்கைக்குப் படை அனுப்பிய) மூன்றாம் குலோதுங்க சோழன் இம்முறை மாகனுக்கு உதவினான் என்றும் ஊகிக்க இடமுண்டு” எனவும் கலாநிதி இந்திரபாலா கல்வெட்டில் உள்ள வாசகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.   

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.