படகுப் பாதை விபத்து - இன்று துக்கதினம் அனுஷ்டிப்பு!!

 


திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இன்று (25) துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுவதாக கிண்ணியா பிரதேச சிவில் அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய,  இன்றைய தினம் (25) அனைத்து வீடுகள், கடைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வௌ்ளை கொடிகளை பறக்கவிட்டு, அமைதியான முறையில் துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை மூடி துக்க தின அனுஷ்டிப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கிண்ணியா சிவில் சமூக ஒன்றியம் கோரியுள்ளது.

ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்த்து அனைவரும் தங்களின் வீடுகளிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேட பிரேர்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச சிவில் அமைப்புகளின் ஒன்றியம், பள்ளிவாயில்கள் சம்மேளனம், உலமா சபை, ஷிரா சபை மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

இதேவேளை, கிண்ணியா தொடக்கம் குறிஞ்சாக்கேணி வரையான பாலத்திற்கான நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆறு தொடக்கம் ஒன்பது மாதங்களுக்குள் பாலத்தின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தக்காரரின் தாமதம் காரணமாகவே நிர்மாணப்பணிகளும் தாமதமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் கிண்ணியா தொடக்கம் குறிஞ்சாக்கேணி வரையான பாலத்திற்கான நிர்மாணப் பணிகளை வேறொரு ஒப்பந்தக்காரரிடம் வழங்கி, நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிஞ்சாக்கேணி பகுதியில் பாலம் இன்மையால் படகுப்பாதை போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (23) ஏற்பட்ட விபத்தில் படகுப்பாதையில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கிய போது காப்பாற்றப்பட்டவர்களில் 19 பேர் தொடர்ந்தும் திருகோணமலை மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே படகுப்பாதை சேவையை முன்னெடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

படகுப்பாதையின் உரிமையாளர், அதனை செலுத்துபவர் மற்றும் போக்குவரத்து கட்டணம் அறவிடும் நபரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியாவை மாத்திரமின்றி முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள படகுப்பாதை விபத்து தொடர்பில் பாராளுமன்றத்திலும் கடந்த இரு தினங்களாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

கிண்ணியா பகுதிக்கான பாலத்தின் தேவை தொடர்பில் பல தடவைகள் பாராளுமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் நேற்றைய சபை அமர்வின் போது குறிப்பிட்டார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.