பாரதிராஜாவுக்கு அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்!!

 


ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்திருந்த காவல் ஆய்வாளரின் குருமூர்த்தி என்கிற பெயரும், அவரின் வீட்டில் மாட்டப்பட்டிருந்த அக்கினிசட்டி காலண்டரும் வன்னியர் சமூகத்தை குறிப்பிடுவதாக கூறி பாமகவின் புகார் கூறினார். இதுபற்றி சூர்யா விளக்கமளித்தும் பாமகவின் கொந்தளிப்பு அடங்கவில்லை.

எனவே, சினிமாவை விட்டு விடுங்கள் என இயக்குனர் பாரதிராஜா அன்புமணி ராமதாஸுக்கு ஒரு கடிதம் எழுதியிரிருந்தால் தற்போது அதற்கு பதில் கூறி அன்புமணி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

ஜெய்பீம் சர்ச்சை தொடர்பாக தாங்கள் எனக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். களப்போராளியாகவும், யாருமே துணியாத காலத்தில் சமூகநீதியை திரைப்படத்தில் பதிவு செய்தவர் என்ற முறையிலும், படைப்பாளியாகவும் எனக்கு கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள், மகிழ்ச்சி.

ஒடுக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. இன்று தமிழ்நாட்டில் அதிகமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி அவர்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்ததில் மருத்துவர் அய்யாவுக்கு நிகராக இங்கு வேறு யாரும் இல்லை.

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை ((Jai Bhim Controversy) சாதி பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனையும் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பெருங்குடி சமுதாயமான வன்னியர் சமூகம் திட்டமிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது தொடர்பான சமூகப் பிரச்சனை. இந்த பிரச்சனையில் உங்களுக்கும் திரைத்துறையினருக்கும் மிகப் பெரிய புரிதல் இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.



ஜெய்பீம் திரைப்படத்தில் சாதி வெறி பிடித்த கொடுமைக்கார சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட தேவர் திருமகனாரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை அவர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்து இருப்பீர்களா?

ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன், மேற்கண்டவற்றில் எந்தக் காட்சி அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தாலும் அதை கண்டித்தும் முதல் குரல் என்னிடமிருந்து தான் வந்திருக்கும்.

வானளாவிய படைப்புச் சுதந்திரம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும்தானா? இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முனைந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்தப் படைப்பு சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்? கடுமையான கண்டனக் கடிதத்தை தாங்கள்தான் எழுதியிருந்தீர்கள், நினைவு இருக்கிறதா? சமீபத்தில் வெளியான Family Man- II தொடர் முழுவதும் தடை (Ban) செய்ய வேண்டுமென்று கடுமையான எச்சரிக்கை விடுத்தீர்கள். அப்பொழுது எங்கே போயிற்று உங்கள் படைப்பு சுதந்திரம்? அண்மையில் வெளியான கர்ணன் படத்தில் 1997-ஆம் ஆண்டு என்று இருந்ததை மாற்றி ’1990-களின் இறுதியில்” என்று போட வைத்தபோது, என்னவாயிற்று உங்கள் படைப்பு சுதந்திரம்.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவு படுத்தும் வகையில் வன்னியர்களுக்கு புனிதமான அக்னி குண்டத்தை வைத்து சத்ரியர் என்ற அடிக்குறிப்பு போட்டு கொலையாளிகளாகக் காண்பித்தால் அதற்கு நீங்களும், திரைத்துறையினரும் ஆதரவு அளிக்கிறீர்களா?

எலி வேட்டை என்ற பெயரில் படத்தை தொடங்கி, தயாரித்து முடிக்கும் தருவாயில் பரபரப்புக்காக ஜெய்பீம் ஆக்கி பெயர் அரசியல் செய்து வியாபாரமாக்கியது நாங்கள் அல்ல. எதற்கும் துணிந்தவர்கள், அந்தோணிசாமி என்று பெயர் வைப்பதற்கு பயந்து குருமூர்த்தி என்று பெயர் அரசியல் செய்து குறவர் சமுதாயத்தை இருளர் சமுதாயமாக மாற்றி, வட தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய சமுதாயத்திற்கும் சாதிக் கலவரத்தை தூண்டி பெயர் அரசியல் செய்தது திரையுலகம் தானே தவிர, அந்த இரண்டு சமுதாயங்கள் அல்ல.



கொலை செய்யப்பட்டவரும் வன்னியர் அல்ல, கொலை செய்தவரும் வன்னியர் அல்ல, கொலை செய்யப்பட்டவருக்காக வழக்காடியவரும் வன்னியர் அல்ல, உதவி செய்தவர்கள் மட்டுமே வன்னியர்கள் என்று உண்மை நிலவரம் இருக்கும் போது, எதற்கு வன்னியரின் சின்னமான அக்னி குண்டத்தை கொலையாளியின் வீட்டில் நட்ட நடுவில் மாட்டி வைத்தீர்கள்? என்ற நியாயமான கேள்வி கூடவா உங்கள் மனங்களில் எழவில்லை.

வன்னியப் பெருங்குடி மக்களின் மனதை காயப்படுத்தி விட்டீர்கள் என்ற உண்மையை ஒத்துக் கொள்ள மனம் இல்லை என்பதைத்தான் திரைத் துறையினரின் கடிதங்களும், ஊடகங்களின் விவாதங்களும் காட்டுகிறது.

இது வெறும் காலண்டர் தானே, என்று நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம். சுட்டிக்காட்டிய உடன் அந்த காட்சி நீக்கப்பட்டு விட்டது என்று சப்பை கட்டு கட்டலாம். ஆனால் ஏன் அந்த அக்னி குண்டத்தை அங்கு வைத்தீர்கள்? என்ற கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை. கோடிக்கணக்கான வன்னியப் பெருங்குடி மக்களின் மனதை ஆழமாக புண்படுத்தி விட்டீர்கள் என்று ஏன் உங்களாலும் எங்களை விமர்சனம் செய்கின்ற அவர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை?

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் மனங்கள் காயப்பட்டிருக்கின்றன. இதை சுட்டிக்காட்டி நான் கடிதம் எழுதிய போது, உண்மையை ஒப்புக்கொண்டு வன்னிய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக படக்குழுவினர் வருத்தம் தெரிவித்திருந்தால், இந்த விவகாரம் அன்றே முடிவுக்கு வந்திருக்கும்.

உங்களுக்கு வீடு கட்டித்தரும் தொழிலாளியாகவும் நீங்கள் பயணிக்கின்ற சாலைகளை போடும் பாட்டாளிகளாகவும், உங்களுக்காக சேற்றில் இறங்கி கடுமையாக உழைத்து உங்களுக்கு சோறு போடும் விவசாயிகளான வன்னிய மக்களை கொலையாளிகளாக சித்தரித்து இருக்கிறீர்கள் அல்லவா? அதனால் தான் எங்கள் மனம் வலிக்கிறது.

இதற்குப் பிறகும் நாங்கள் மௌனமாக இருந்தால் இந்த குற்றச்சாட்டை ஒத்துக் கொள்வதாக ஆகிவிடாதா? திருடியதாக ஒத்துக்கொண்டால் காலத்துக்கும் அந்த திருட்டு பட்டம் தங்கிவிடும் என்று ஜெய்பீம் திரைப்படத்தில் வசனம் வருகிறது. அது அவர்களுக்கு மட்டும் தானா? கொலையாளிகள் வன்முறையாளர்கள் என்ற அவப்பெயர் வன்னியப் பெருங்குடி சமுதாயத்திற்கு காலத்திற்கும் தங்கி விடாதா?

இவை எனது கேள்விகள் மட்டுமல்ல…

கோடிக்கணக்கான வன்னிய மக்களின் மனங்களில் தீயாய் எரிந்து கொண்டிருப்பவை தான் இந்த வினாக்கள். வன்னியர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடாமல் அவர்களின் மனத் தீயை அணைக்க முடியாது என்பதை மட்டும் தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எங்கள் கைகளில் இல்லை. இவற்றை தெரிவிப்பதற்காகவே இந்தக் கடிதம்.

எனத்தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.