காலப் புத்தகம்!!

 


தலைவர் படத்துக்குத் தடை என்பதைக் கொண்டாடுபவர்களும் சிலர் இருக்கிறார்கள். இந்தத் தடைக்காக உழைத்தவர்களும் எம்மத்தியில் இருக்கிறார்கள். 


ஆனால், வரலாறு எப்பவும் முன்னோக்கியே நகரும்.


அந்த வகையில் இந்த தடை இன்று எம் மக்களை இன்னொரு படி முன்நகர்த்தி இருப்பதை நான் இப்போது, அதுவும் இன்றைய நாள், கண்ணூடாகக் காண்கிறேன்.


2005 ஆம் ஆண்டு, சுனாமி ஒராண்டை முன்னிட்டு பிபிசி தொலைகாட்சி தயாரித்த “7 Hours in Boxing Day” என்னும் ஆவணப்படப் படப்பிடிப்புக்கான அனுமதியைப் பெறுவதற்காக அந்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளரும் இன்று அல் ஜசீரா தொலைக் காட்சித் தயாரிப்பாளராக இருப்பவருமான எனது நண்பி Juliana Rufus அவர்களும் நானும் கிளிநொச்சியில் இருந்த தயா மாஸ்டர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தோம். 

சற்று நேரம் அங்கு காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது நண்பி Juliana Rufus, ஆளுயரம் அளவில் அங்கு வைக்கப்பட்டிருந்த தலைவரின் படத்தையே கண்வெட்டாது நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளைக் குறுக்கிட்டு, “என்ன அப்பிடிப் பார்க்கிறாய்?” என்றேன். அவள் சட்டென்று பதில் சொன்னாள், “What a charismatic leader!” 


அவள் கண்களும் முகமும் சொல்லிற்று அவள் எவ்வளவு இரசித்துச் சொல்கிறாள் என்பதை.  


ஆம், அவர் ஒரு வசீகரமான தலைவன்!


அந்த கறிஸ்மா, அந்த வசீகரம் அதுதான் பிரச்சினையே!


அவர் ஆயுதப் போராளி என்பதைக் கூட மன்னித்துவிடுவார்கள். அவர் பயங்கரவாதியாக இருந்தால் கூடப் பயம் கொள்ள மாட்டார்கள். அவரின் அசாதாரண வசீகரம்தான் பிரச்சினை. உலகின் எந்த ஒரு அரசியல் தலைவனும், ஆயிதப் போராளியும் இவ்வளவு வசீகரமாக இருந்ததில்லை. 


ஆனால் அதே வசீகரம்தான், அவரை நேசிக்கும் பலர் அவரை சரியாக அறிந்து கொள்ள முடியாமற் போனதுக்கும் காரணம். அவரை நாயகனாக, ஒரு காவல் தெய்வமாக, குலதெய்வமாக, கடவுளாக உள்வாங்கிய அளவுக்கு அவரைக் கருத்தியல் ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் யாரும் புரிந்து கொள்ள முற்படவில்லை. 


அவரைக் கருத்தியல் ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் நாம் புரிந்து கொள்ளாதவரை அவரைப் பற்றிய அனைத்துத் துதிபாடல்களும் விளலுக்கு இறைத்த நீர்தான்.


ஆனால், இன்று இந்த முகநூலும் ஏனைய சமூக வலைத்தளங்களும் அவரின் முகத்துக்கு இட்ட தடை, அவரின் படத்தைப் பகிர்ந்தால் சிறை என்ற நிலை எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுள்ளது


வெறுமனே தலைவரின் படத்தை பகிர்ந்து லைக்குகளை வாங்கிக் கொண்டிருதவர்களை எல்லாம் அவரைப் பற்றி நாலு வசனம் எழுதத் தூண்டியுள்ளது. அதற்காக அவர்கள் தங்கள் மூளையை பிழிய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் மட்டுமல்ல, அவரின் பெயரை கூட எழுதாமல் அவரை நினைவுபடுத்தக்கூடிய மதிநுட்பமான, அர்த்தபூர்வமான வரிகளை எழுதத் தூண்டியுள்ளது.


உருவமாகி அருவுருவமாகி, அருவமாகி எமது “பிரக்ஞை” இன் அங்கமாகிவிட்டார்!  


வரலாற்றைத் தவிர விட்டு செல்ல தன்னிடம் வேறெதுவம் இல்லை என்றவர் அவ்வாறே தன் வாழ்க்கையை வரலாறாக்கிச் சென்றார். 


அந்த வரலாறு எம்மை விடுதலை செய்யும். நம்புங்கள்!


முகநூலில் இருந்து......

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.