மெழுகுதிரி - ராதாமேத்தா

 


சலசல என ஓடும் அந்த அருவியின் சத்தம், நடு இரவில் துல்லியமாக ராகலயம் போட்டுக் கொண்டிருக்கிறது. லயத்து வாசலில் நிலவின் நிழலில் தனிமையாக உட்கார்ந்திருந்தது அவளது உருவம்.


ஏக்கம், எதிர்பார்ப்பு, எதிர்காலத்தின் மீதான பயம் போன்ற எண்ண அலைகள் ஒவ்வொன்றாக வந்து அப்போது அவளை தீண்டி நிற்க, முழங்காலுக்குள் புதைத்துக் கொண்ட முகத்தை மேலேத் தூக்கி லயத்துக்கு வரம் பாதையைப் பார்க்கிறாள்… இருட்டு... இருட்டு... அவளது வாழ்க்கை போல் ஒன்றுமே தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கை வெளிச்சம் வருமெனக் காத்திருக்கின்றாள்…

‘கண்டாக்கையா’ என்ற பெருமையோடு, இவளுக்கு எட்டு வயதான போது மலை மண்ணுக்கு உரமானார் இவளது அப்பா! தோட்டத்தில் ஒருவர் வேலை செய்தால்தான், இந்த லயம் என்ற கூடுக்குள் வாழமுடியும் என்ற நிலையில், பருவம் பிடிக்காத மூன்று பச்சிளம் கன்றுகளை எண்ணி தோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தாள் அம்மா ராமாயி!

கணவன் இல்லை எனத் தெரிந்ததும் புருவம் நெளிக்கும் புறம் போக்குகளின் நெரித்தல்களுக்குத் தப்பி... வயிற்றுக்காய் வாழப்பழகி... எப்படியாவது பிள்ளைகளைப் படிக்க வைத்துவிடவேண்டும் என்று இரவு, பகல் பாராது பத்து ஆண்டுகளை நகர்த்தியபோதுதான் இவள் குமரியானாள். இவள் குமரியானபோதுதான்... அவள் நெஞ்சுக்குள் குத்துவலி வந்தது. வந்த குத்துவலியும் சாவுக்குத் தந்தி அடித்தது.

“ அக்கா... அம்மா போயிடிச்சே... இனி எங்களை யார் பார்ப்பா? நாங்க என்ன பாவம் அக்கா செஞ்சோம்… ஏன் எங்களுக்கு மட்டும் இப்புடிநடக்குது?” என தம்பியும் தங்கையும் இவளது காலைச் சுற்றி நின்றபோதுதான் அம்மாவின் பிரிவால் நிலை குலைந்து போயிருந்த சுகந்தி தன்சுய நினைவுக்கு வந்தாள்.

சுகந்தி, பிரபா, பிரபு, என்ற அநாதைகளின் முகவரி ஒன்று 18,16,10 என்ற வயதுகளின் அடையாளத்துடன் அந்த மேல்கணக்கில் எழுதப்பட்டது. சொந்தங்கள் பந்தங்கள் எல்லாம் சோதனைகளின் போது தூர்ந்துபோகும் பந்தங்கள் என்பதை ராமாயியின் மரணத்தின் பின்னரான அத்தியாயம் உறுதிபடுத்திக் கொண்டிருந்தது. பட்டுவிட்டக் குடும்பத்தைத் தொட்டுக் கொண்டால் தொந்தரவுதான் எனச் சொந்தங்கள் ஒதுங்கிய போதுதான் சுகந்தி இந்த உலகத்தை உணர்ந்தாள்.

“அக்கா பசிக்குது.. நான் இனி பள்ளிகூடம் போகனுமா? அக்கா விளக்கேத்தலாம் பெண்ணை இல்லை..”இந்த வினாவுகளுக்கு எல்லாம் எப்படி விடைகொடுப்பது? யோசித்து... யோசித்து இதயம் கனத்த போதுதான் பக்கத்து கம்பறா வள்ளியம்மா அக்கா துணைக்கு வந்தாள்.

“பயப்படாத புள்ள நாம இருக்கோம்! நீ ஒண்ணுக்கும் யோசிக்காதே! நான் கணக்கப்புள்ளை ஐயாகிட்ட பேசியிருக்கேன். உன்பேரப் பதியச் சொல்லியிருக்கேன்! எங்களுக்குன்னு ஒரு தொழில் பரம்பரை பரம்பரையா இருக்கிறப்போ... நாம எதுக்கு அடுத்தவன் கையை எதிர்பார்த்து இருக்கனும். இப்ப உனக்கு என்ன வேணுமோ சொல்லு நான் உதவுறன். நீ வேலைக்குப்போய் தங்கச்சி தம்பியை படிக்க வைச்சிடு… ஒண்ணுக்கும் யோசிக்காதே எதுவா இருந்தாலும் எங்கிட்ட கேளு..”

இந்த வாசகம்தான் சுகந்திக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. தான் இதுவரை படிச்சது போதும் என்றாலும் தங்கச்சி தம்பியை நன்றான படிக்க வைக்க வேண்டும் என்ற உணர்வின் வெறியோடு. கூடையைத் தூக்கிய சுகந்தி ஐந்து ஆண்டுகளைக் கழித்து விட்டாள்.

எத்தனை ஏற்றங்கள் இறக்கங்கள், இந்த மலை போன்று அவள் வாழ்விற்குள் வந்த போனது… பருவங்கள் வெளிச்சம் போட்டபோதும்... தனிமையில்தானே இருக்கிறார்கள் என்ற உணர்வின் வெளிப்பாடுகள் வலை விரித்த போதும்... அவள் கொண்டிருந்த உறுதியாலும் பக்கத்து விட்டு வள்ளியம்மாவின் பக்கத்துணையாலும் அவை ஒவ்வொன்றாக உதிர்ந்து கொன்டிருந்தன, தன் நினைப்பை மறந்து தனது சகோதரங்களின் வாழ்வே தன் வாழ்வு என வாழ்ந்த சுகந்தி, பிரபாவை க.பொ.த உயர்தரம் வரையும், பிரபுவை 9ஆம் ஆண்டுக்குள்ளும் தொடர்ந்து படிக்க வைத்த களிப்பில் இருந்தாள்.

இருந்தும் இந்த இருட்டில் எதுக்காக அவள் தனிமையில் உட்கார்ந்து இருக்கிறாள்? இளமை தூறல் வீசும் ஏக்கத்தோடு சுகங்களின் வரவுகளுக்காக காத்திருக்கும் பருவத்தில் இவள் எதுக்காக காத்திருக்கிறாள், தெரியுமா?

டீச்சர் உத்தியோகத்திற்கான நேர்முகப் பரீட்சைக்கு போன பிரபா இன்னமும் வரவில்லை அவள் வரவை எதிர்பார்த்து இந்தக் காத்திருப்பு,

‘அக்கா நான் போயி சின்னக்காவை பார்த்துட்டு வரட்டுமா?’

‘வேண்டாம்டா தம்பி... அவ வந்துடுவா…’

‘அப்புறம் எதுக்கு நீங்க இந்தப் பனியில உட்கார்ந்து இருக்கிறீங்க உள்ள வாங்க...’

ம்... அவனது அழைப்பும் நியாயமானதுதான்... ஆனாலும் மனதில் ஏதாவொரு அழுத்தம்… மெல்ல எழுந்து கீழேப் பாதையை பார்க்கிறாள்.

வெளிச்சம் பந்தம் தெரிகிறது...

‘தம்பி… அக்கா வருகுது போலத் தெரியுது. என்னாச்சோ தெரியல்ல...’ சொல்லிக் கொண்டே பந்தம் வரும் திசையைப் பார்க்கிறாள்.

அது அவர்களது லயத்து பக்கம் வரவில்லை என்பது தெரிந்தது. இதற்கு மேல் அவளால் பொறுமை கொள்ள முடியவில்லை.

‘வள்ளியம்மாக்கா… வள்ளியம்மாக்கா...’

‘என்ன பிள்ளை என்ன?’

‘பிரபாவை இன்னும் காணல்லக்கா…’

‘பஸ் ஏதும் லேட்டா இருக்கும்.. வந்துடுவா நீ பயப்படதே...’

‘எனக்கு என்னமோப் பயமா இருக்கு...’

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே... பிரபா லயப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தாள்.

‘இந்த பிரபா வந்துட்டுது…’

‘என்னக்கா பயந்துட்டிங்களா…. பஸ் எடுக்கிறதே பெரிய கஷ்டம்’

‘அது சரி போன விசயம் என்னாச்சு?’

‘அக்கா எனக்கு வேலை கிடைச்சிடுச்சு... வள்ளியம்மாக்கா எனக்கு வேலை கிடைச்சுடுச்சுக்கா’

‘நாம கும்பிட்ட தெய்வம் நம்மள கைவிடாது சுகந்தி... பாத்திய இனி என்ன உனக்கு பாரம் குறைஞ் சமாதிரிதான்…

‘வேலை கிடைச்சாலும் ஒரு சின்ன பிரச்சினையக்கா?’

‘பிரச்சினையா என்ன?’

‘நம்ம டிஸ்றிக்கில வேலைக்கான காடர் இல்ல அதனால அடுத்த டிஸ்றிக்கில போட்டிருக்கிறாங்க… போறது. வாறது தான் கஸ்டம். அதனால அங்குள்ள குவாட்டர்ஸிலதான் தங்கியிருந்து வேலை செய்யனும். அத நினைச்சாதான் கஷ்டமா இருக்கு

‘அதுல என்ன? அரசாங்க வேலைன்னா அப்புடித்தான். நம்ம தோட்டத்தில் இருந்து எத்தனை புள்ளைங்க கொழும்புக்கு போய், அங்க போடிங்கில தங்கியிருந்து வேலை செய்யுதுக! அதை எல்லாம் யோசிக்காம கிடைச்ச வேலையை பாரு’ என்றாள் வள்ளியம்மாக்கா.

‘அக்கா சின்னக்கா குவார்ட்டஸில தனியா இருக்கத்தானே பயப்பிடுது... நானும் துணைக்கு போறேனாக்கா... அங்க லைட்டு இருக்கும். அது எனக்கு படிக்கிறதுக்கு உதவியா இருக்கும் என்றான் பிரபு

‘அதுவும் நல்லதுதான் இவனையும் கூட்டிக்கொண்டு போயிடு... சனி, ஞாயிறல்ல வந்து அக்காவை பாத்ததுட்டு போறதுதானே’ என்றாள் வள்ளியம்மாக்கா.

இவர்களது உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த சுகந்தி ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாதவளாக யோசித்துக் கொண்டேயிருந்தாள்.

‘என்ன பிள்ளை யோசிச்சுகிட்டிருக்கிற... எல்லாம் நல்லதுக்குதான். இதுக படிச்சிருக்கு படிச்சத்துக்கு ஏத்த உத்தியோகம் செய்யத்தானே வேணும். வேலைக்குப் போய் கைநிறைய சம்பாரிக்கட்டும். நீ ராசாத்தி மாதிரி இருடி ஒன்னுக்கும் யோசிக்காமா அதுகளை அனுப்பிவை’ என்று சொல்லிக் கொண்டே வெளியே சென்றா வள்ளியம்மாக்கா!

சிறிதுநேரம் வர தாமதமான போதும் இவர்களைப் பிரிந்திருப்பதை தாங்கிக் கொள்ள முடியாத சுகந்தியால்... எப்படி இந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியும் அதை நினைத்துப் பார்க்க முடியவில்லை அவளால்.

என்ன செய்ய எனது உழைப்பில் எப்படிதான் அவர்களது தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்யமுடியும்? அவர்களது நன்மைக்காக இந்தப் பிரிவை தான் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததோடு அவர்களை அனுப்பிவைக்கத் தயாரானாள் சுகந்தி.

ஒரு கூட்டுக்குள் கூடி மகிழ்ந்திருந்த பறவைகள் சிறகுகளை விரிக்க ஆரம்பித்தன. காலங்களும் கரைந்தோடின... சிறகுவிரித்த பறவைகள் தங்கள் எண்ணக் கோலங்களை மாற்றிக்கொண்டு தத்தமது விருப்புக்கு ஏற்ப - தமது சம்பாத்தியம், தத்தமது வாழ்வு, தமது பந்தம் என அவை வேறுபட்டு நின்றன. தமக்காக ஒரு ஜீவன் தனது சுகதுக்கங்களை மறந்து தனியாக ஒரு லய அறைக்குள் தன்னை உருக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதை அவர்கள் எண்ணிப்பார்க்கவில்லை. ஆனாலும் அந்த ஜீவன் இன்னமும் இன்னமும் இவர்களுக்காகவே உருகிக் கொண்டிருக்கிறதே இதை என்னவென்பது?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.