சுருங்கிய உலகம் - நாங்குநேரி வாசஸ்ரீ

 


விஸ்வநாதன் தாத்தாவும் செண்பகம் பாட்டியும் சந்தோஷத்தின் உச்சக்கட்டத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். பேரனைப் பார்க்கப்போகும் மகிழ்ச்சியை அக்கம் பக்கத்து வீடுகளில் ஒரு வாரமாகப் பகிர்ந்து கொண்டு விட்டார்கள்.


காலையில் கோவில் சென்று திரும்பிய தாத்தாவிடம், ‘கோவில் குருக்களிடம் சொல்லிண்டாச்சா’ என விசாரித்த பாட்டி, இன்னிக்கு எதிர்த்தாத்து லல்லி (லலிதா) சாப்பிடச் சொல்லியிருக்கா. சப்பாத்தியும் பருப்பும் விமானத்துக்கு ஒரு பார்சல் கட்டிக் குடுத்துடுவா என்றாள்.

சரி சரி 11:30 க்கு தயாரா நிக்கணும். மேலாத்து சண்முகம் சார்வாள் அவர் கார்ல ஏர்போர்ட்க்குக் கூட்டிண்டு போவார். இது தாத்தா.

இப்படி விமரிசையாகக் கிளம்பி விமானம் உயரக் கிளம்பியவுடன் பாட்டி பேசத் தொடங்கினாள்.

‘உலகம் எவ்வளவு சின்னது பாத்தேளா. திருச்சிலேந்து கெளம்பி டில்லி போய்ச் சேர மூணு மணி நேரந்தான் ஆறது. மதியம் இங்க சாப்பிட்டுட்டுக் கெளம்பினா சாயங்காலம் காபி குடிக்க அங்க போய்டலாம். எல்லா மனுசாளயும் சுலபமா சந்திக்க முடியறது’ என ஆரம்பித்து, தங்களது ஒன்பது வயதுப் பேரன் என்னவெல்லாம் செய்து கொண்டிருப்பான் எனப் பேச்சு திசை மாறியது.

விமான நிலையத்திற்குத் தங்கள் மகன் சுரேஷூடன் பேரன் கார்த்திக்கும் வந்திருந்ததால் ரெட்டிப்பு சந்தோஷம் பாட்டி தாத்தாவுக்கு. வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே தன் விளையாட்டுச் சாமான்களைக் காண்பிக்க ஆரம்பித்தான் பேரன். சிறிது நேரம் விளையாடிய பின், அவனை அழைத்துக்கொண்டு கீழிறங்கி நடந்து கொண்டே பேரனிடம் பேச ஆரம்பித்தாள் பாட்டி.

இங்க மொத்தம் எத்தனை வீடுகள் இருக்கு?

நூத்தருபது பாட்டி, நாம இருக்கற பிளாக் ‘பி’ ல மட்டும் இருபது. அப்டி எட்டு பிளாக்கு இருக்கு.

ஆமா. யார் யார்கூடயெல்லாம் தினமும் வெளையாடுவ. அவா பெயரயெல்லாம் வரிசயாச் சொல்லு பாக்கலாம்.

கார்த்திக்கிடமிருந்து பதில் வராமல் போகவே, சரி உடு. நம்ம எதிர் வீட்ல உன்ன மாதிரி சின்ன பசங்க யாரும் இருக்காங்களா. இல்லன்னா மேல , கீழ...

எந்தக்கேள்விக்கும் பதில் இல்லை.

ஏண்டா கண்ணா பாட்டி போரடிக்கறேனா. ப்ரெண்ட்ஸ் கூட வெளையாடப் போணுமா...

இல்ல பாட்டி எனக்கு ப்ரெண்ட்ஸ் னு யாரும் கெடயாது. அக்கம்பக்கத்து வீடுகள்ல யார் யார் இருக்காங்கன்னு தெரியாது பாட்டி. அம்மா, அப்பா வேலைக்கு போகும்போது என்னய பள்ளிக்கூடத்துல விட்டுட்டு போவாங்க. பள்ளி முடிஞ்சவொடனே வேலக்கார ஆன்ட்டி என்னய வீட்டுக்கு கூட்டிட்டு வருவாங்க. அதுக்கப்புறம் அவுங்க சொல்றபடிதான் நான் கேக்கணும். நான் வீட்டுக்குள்ளயேதான் வெளையாடுவேன். சாயங்காலம் அஞ்சுமணிலேந்து ஏழுமணி வர அவுங்க கண்ணுக்கெதிர சைக்கிள் ஓட்டுவேன். அவ்ளோதான் அனுமதி. அப்பா,அம்மா வந்தப்புறம் வீட்டுப்பாடம் எழுதிட்டுச் சாப்பிட்டுத் தூங்கிடுவேன்.

கேட்கக் கேட்க கோபம் பொத்துக்கொண்டு வந்தது பாட்டிக்கு.

வீட்டிற்குள் சென்றவுடன் முதல் வேலையாகத் தன் பிள்ளையை அழைத்துக் கடிந்து சொன்னாள் பாட்டி. கார்த்திக்குக்கு எதிர் வீடு, மேல் வீடு, கீழ் வீட்ல குடியிருக்கறவங்கள அறிமுகப்படுத்தலையா. அவனுக்கு யாரையும் தெரியலையே.

அம்மா இந்த வருசம் கார்த்திக்கோட பிறந்த நாளைக்குத்தான் எல்லாரையும் அழைக்கலாம்னு இருந்தோம். இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு வருசந்தானே ஆறது எனக்கும் யாரோட பெயரும் தெரியாது. நேரமில்லாததால எப்போதாது ஹலோ, ஹலோ அவ்ளோதான். இங்க நம்ப ஊர் மாதிரி கிடையாது. இந்த சொசைட்டி அலுவலகத்துக்குப் போன் செஞ்சா அவங்க நமக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் அனைத்தையும் செஞ்சுடறாங்க. பால்காரன் முதல் பழக்காரன் வரை வீட்டுக்கேக் கொண்டுவந்து கொடுத்துடறான். பக்கத்து வீட்டுக்காரங்க தயவில தான் வாழணுங்கற அவசியம் இல்லாததால யாரும் யார்கிட்டயும் ஒட்டுறவா பழகறதில்லை. பணம் இருந்தால் போதும் எல்லா வசதிகளும் வீடு தேடி வந்துடும்.

மகனின் இந்தப் பெருமிதமானப் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போனாள் செண்பகம் பாட்டி. காலையில தான் உலகம் சுருங்கி விட்டதாச் சந்தோஷப்பட்டேன்.. இப்போ புரியறது. சுருங்கினது உலகம் மட்டுமில்ல. பட்டணத்து நாகரிக மனித மனங்களும் தான்.

காலையிலிருந்த உற்சாகம் குறைந்த நிலையில் இரவிற்குள் பாட்டியின் மனம் திருச்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.