இலங்கை நாடாளுமன்றத்தில் மாவீரா்களுக்கு சி.சிறீதரன் அஞ்சலி !
இலங்கை நாடாளுமன்றத்தில் மாவீரா்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய அவர்,
மாவீரர்களை பற்றி உரையாற்றுகையில்,
sritharan-2-300x188.jpg
தமிழர்கள் அத்தனை பேரினதும் ஆழ்மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்து போன ஈகைத்திருநாளே தமிழ்த்தேசிய மாவீரர் நாள்.
இந்தப் பூமிப்பந்தின் தேசமெங்கணும் பரந்து வாழும் உலகத்தமிழர்கள் அத்தனை பேரினதும் ஆழ்மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்துபோன ஈகைத் திருநாளே தமிழ்த்தேசிய மாவீரர் நாள்.
மக்களுக்கான போராட்டம் ஒன்றின் தோற்றுவாய்க்கு, மனிதாபிமான மனோநிலையும், மனிதநேய மாண்புகளுமே அடிப்படையாய் அமைய முடியும். அத்தகையதோர் மக்கள் போராட்டத்திற்கு, சக மனிதர்களையும், தன் சார்ந்த சமூகத்தையும் நேசிக்கத்தக்க அன்பின்பாலான மனநிலை மட்டுமே மூலாதாரமாக முடியும். அந்தவகையில் அனைத்துலகும் பிரமித்துநிற்கத்தக்க பிரமாண்டத்தோடு, தமிழின விடுதலை ஒன்றையே மூச்சாகவும், வீச்சாகவும் கொண்டு, முப்பது ஆண்டுகாலமாக நடைபெற்றுமுடிந்த மக்கள் போராட்டத்திற்காக தம்மையே தாரைவார்த்த எம் தேசவீரர்களை பயங்கரவாதிகள் என்று பறைசாற்றுவது எத்தனை அபத்தமானது?
நீண்ட, நெடிய, நெருப்பாறாய் நிகழ்ந்தேறிய போரின் விளைவாக, பொருளாதார ரீதியாகவும், வேலைவாய்ப்பு, கல்வி, கலை, கலாசார, மொழி, நில அடையாள ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு, உறவுகளின்
உயிரிழப்பு, அவயவ இழப்பு, மாற்றுத்திறனாளிகளின் உருவாக்கம், ஆயிரக்கணக்கான விதவைகளின் தோற்றம், அன்னை, தந்தையை இழந்த நிலையில் அநாதரவாக்கப்பட்ட சிறுவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், இன்னும் விடுவிக்கப்படாத நிலங்கள் , வன்பறிப்புச் செய்யப்படும் பூர்வீக நிலங்கள் என வலிதாங்கிய இனமாக வாழத்தலைப்பட்டிருக்கும் எமது மக்களின் மனக்காயங்களுக்கும், அவர்களின் ஆற்றாமைகளுக்கும் ஆறுதலளிப்பதாய், அமைதி தருவதாய், நம்பிக்கை ஊட்டுவதாய் அமையக்கூடியது, இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை ஒன்றே ஆகும். அந்த அடிப்படை உரிமையைக்கூட, வலிந்து மறுதலிக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகள், இந்த மண்ணில், எமது மக்களின் இருப்பை இன்னும் இன்னும் கேள்விக்குட்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இழப்பின் வலி சுமந்து நிற்கும் ஒரு இனத்தின் ஒவ்வொரு குடும்பத்தவர்களதும் சமய, சமூக, பண்பாட்டு விழுமியங்களைத் தழுவிய ‘நினைவுகூரல்’ என்னும் அடிப்படை உரிமைக்கான பிரார்த்தனைகளையும், சடங்குகளையும் மேற்கொள்கின்றபோது அவை உள்ளூர் அதிகாரத்துவமுடைய அதிகாரிகளினால்
பயங்கரவாத விடயங்களோடு ஒத்துப் பார்க்கப்படுதல், அல்லது போராட்டம் ஒன்றினை மீள உருவாக்கம் செய்வதற்கான செயல் முனைப்பாக காண்பிக்கப்படுதல், அத்தகைய பிரார்த்தனைகளில் ஈடுபடுபவர்களை
கோரமான உணர்வுகளைக் கொண்டவர்களாக சித்தரித்து அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்தல் என்பன தவறான அர்த்தப்படுத்தல்களாகும். அது எமது மாவீரர்களின் உயிர்த்
தியாகங்களையும், மாவீரர் தினத்தின் புனிதத்தன்மையையும் வலிந்து மலினப்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.
இன விடுதலை என்னும் சத்திய இலட்சியத்திற்காக, தமிழ்ச் சமூகத்தின் விடிவுக்காக, அடுத்த சந்ததியின் அமைதியான வாழ்வுக்காக, வாழ்வியலின் அத்தனை சுகபோகங்களையும் துறந்து, மனித சுதந்திர உணர்வின்
பிரதிபலிப்பாய் தம்மையே தற்கொடையாக்கிய அறுபதாயிரத்திற்கு (60,000) மேற்பட்ட மாவீரர்களை இந்த மண்ணிலே புதைத்து விட்டு, விடுதலை நோக்கிய ஆழ்மன ஏக்கங்களோடு தவித்திருக்கும் எமது மக்களின் வலி சுமந்த மனப்பரப்பு முழுமைக்கும், மாவீரர்களின் தியாகங்கள் என்றென்றைக்கும் சுடர்ந்தவண்ணம் தான் இருக்கும். கையறு நிலையிலிருக்கும் எம் மக்கள், அரூபத்தன்மை கொண்ட ஆபத்பாந்தவர்களாக, தமது ஆழ்மனங்களில் வைத்துப் பூசிக்கும் மாவீரத்தியாகிகளின் நினைவுகளை, நீதிமன்றத் தடையுத்தரவுகளாலோ,
நீண்டிருக்கும் ஆயுத முனைகளாலோ நீர்த்துப்போகச் செய்யமுடியாது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பீர்கள்.
தமது சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகளற்ற, நசுக்கப்பட்ட இனமாக இருந்துகொண்டு தனது இருப்பைத் தக்கவைப்பதற்காய் எல்லாவழிகளிலும் போராடத் தலைப்பட்டுள்ள தமிழினத்திற்கு, இத்தகையதோர் இழிநிலை வந்துவிடக்கூடாதென்ற வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு, ‘விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம், நெருப்பு நதிகளை நீந்திக்கடக்கும் நீண்ட பயணம், அது தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம்’ என்ற தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து, தர்மத்தின் வழி நின்று, இனவிடுதலை என்ற சத்திய இலட்சியத்திற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து, தமிழினத்தின் எழுச்சிக்கு மூச்சாகி நின்ற எம் மாவீரச்செல்வங்களை என் நெஞ்சிருத்தி அஞ்சலித்து நிறைவு செய்கிறேன்.
துட்டகைமுனு மன்னன் தாம் போரில் வெற்றிகொண்ட எல்லாளனுக்கு மரியாதை செலுத்தக்கூறிய இந்த நாட்டில் போரில் இறந்த மாவீரர்களின் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் இன்று நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களின் தினத்தை முன்னிட்டு மாவீரா்களுக்கு தமது அஞ்சலியை செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபா வரையில் வேதனம் உயர்த்தப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை