தாய் மகள் எரித்துக்கொலை!


தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே குடியிருப்பில் சுகாதார பணி பெண் காளியம்மாள் 58, அவரது மகள் மணிமேகலை 34 ஆகியோரது உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

கடந்த 7 ஆம் திகதி காலை உள்புறமாக பூட்டிய வீட்டில் இருந்து தாய் மற்றும் மகளின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தாய்- மகள் கொலை தொடர்பாக பொலிசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ள உயிரிழந்த காளியம்மாள், மண்டபம் முகாம் உமையாள்புரத்தில் புதிய வீடு கட்டி வந்தார். கட்டட வேலைகளில் புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 4 பேர் செய்து வந்தனர்.

இந்நிலையில், காளியம்மாள் குடியிருந்த ரயில்வே குடியிருப்பில் சிதைந்த தரை தளத்தை 4 பேரும் கடந்த 3 வாரங்களுக்கு முன் பூசும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காளியம்மாளிடம் இருந்த நகை, பணத்தை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

இந்த 4 பேரில் 3 பேர் மட்டும் கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு 11:30 மணியளவில் அரிவாள், இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் காளியம்மாள் வீட்டின் பின்புற வாசல் வழியாக சத்தமின்றி உள்ளே புகுந்தனர். வீட்டில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த காளியம்மாள், மணிமேகலை தாக்கி கொலை செய்துள்ளனர்.

தடயத்தை மறைக்க தீயிட்டு எரித்து விட்டு, பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியுள்ளனர். போட்டோவுடன் கூடிய இருவரின் இறப்பு செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்த, காளியம்மாள் வீட்டில் வேலை பார்த்த அகதி ஒருவர், தன்னுடன் வேலை பார்த்த மற்ற 3 பேர் மீது சந்தேகம் உள்ளதாக மண்டபம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அவரின் ஊகத்தை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மண்டபம் முகாமில் வசித்து வரும் புதுக்கோட்டை அகதிகள் முகாம் சசிகுமார் 35, கரூர் மாவட்டம் குளித்தலை அகதிகள் முகாம் ராஜ்குமார் (எ) சம்பூர்ணலிங்கம் 30 ஆகியோரை மண்டபம் பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் கைதானவர்களிடமிருந்து தங்க வளையல் 4, செயின் 2, தோடு 2 என்பவற்றை கைப்பற்றியதுடன், தொடர்புடைய நிஷாந்தனை தேடி வருவதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.