உன் வீதியும் என் காதலும் - முத்து மகரந்தன்!!



மேலும்

பனியும் சாணியும் வீசும் முற்றத்தின்

வெள்ளைக் கொடிகளில்

பூசணிப் பூக்களோடு பூத்திருப்பாய்

தினமும் நீ.

இரவைக் கழுவிய தெருவின் ஈரத்தில் உதிர்ந்து விட்டன

உன்னால் பொறுக்கப் படாத

என் பார்வைகள்.

எறும்புகள் இழுத்துப் போகும்

அதன் கோட்டுத் தடங்களே

ரத்தம் பிராவகிக்கும்

என் நரம்புகளாயிற்று.

முன்னதாகவே

உன்னைக் குறித்த 

என் அழகான

கனவு களை சாக்கடையிலும்

மலத் தொட்டியிலும்

கொட்டி விட்டிருந்தாய்.

வெளிச்சம் காய்க்கும் அந்தி மரத்தில் வீசி விட்டுப் போனாய்

என் புத்தம் புது கவிதை யை.

(பின் ஆளுக்கொரு எழுத்தாய்

பங்கீட்டுக் கொண்டன

உனக்கு பிடித்த கறையான்கள்.)

புற வாசலின் நரகலை ஒத்த

உன் அலட்சியத்தைச் சுற்றி படர்ந்த

என் வேதனையும் துக்கமும்

பன்றி மிதிகளில் 

கண்ணீராய் பீறிட்டது.

கடைசியாய்

பசுஞ் சுவர்களில் பறவை எச்சம்

விதைக்கும் ஒரு குளிர் சாமத்தில்

ஒப்பாரியும் எக்காளமும் கலந்த

வீதி நாய்களின் குரைப்பொலி

மத்தியில் உடல் விறைக்க

செத்துப் போனது

அந்த இளங் காதல்....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.