பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு மனித நேயத்தின் பெரும் இழப்பாக கருதுகின்றோம்!

 


உலக மக்களுடன் சேர்ந்து உலகத் தமிழ்மக்களும்  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்த பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு மனித நேயத்தின் பெரும் இழப்பாக கருதுகிறோம்.

  – தமிழீழ மக்கள்

உலகளாவிய ரீதியில் இன நிறவெறிக்கெதிராகக் குரல் கொடுத்து வந்த மானுடநேயர் பேராயர் டெஸ்மாண்ட்  டுட்டு் அவர்கள் தனது 90 ஆவது அகவையில் காலமான செய்தி எம்மையெல்லாம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஆன்மீகவழியில் மானுட விடுதலைக்காகப் போராடிய மகத்தான மாமனிதர். தென் ஆப்ரிக்கா மக்கள் இன -நிற வெறி அடக்குமுறைக்குள் இருந்த காலத்தில் நெல்சன் மண்டேலா மற்றும் தென் ஆப்ரிக்கா விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பலருடன் சேர்ந்து தனது மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர் டெஸ்மாண்ட்  டுட்டு. அத்துடன் நின்று விடாமல், உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் மனிதவுரிமைகளுக்காவும் அமைதியான வாழ்வுக்காகவும் தன் வாழ்வின் இறுதிக்கணங்கள் வரை குரல் கொடுத்துவந்தவர். ஈழவிடுதலை மீதும் பற்றாளராகவும் தமிழர்களுக்கான நீதிக்காகவும் சர்வதேச அரங்குகளில் குரல் கொடுத்துவந்த பேராயர்  டெஸ்மாண்ட்  டுட்டு அவர்களது இழப்பு தமிழீழ மக்களுக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.

தென்னாபிரிக்காவில் இன நிறவெறிக்கெதிரான போராட்டத்திற்கு தலைமை ஏற்ற மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களுக்கு பெரும் பக்க பலமாக டெஸ்மண்ட் டுட்டு இருந்திருக்கிறார். அக்காலம் முதல்  பல நெருக்கடிகளைச் சந்தித்த போதும் தனது ஆன்மீகமானது அல்லல்படும், அடிமைப்படுத்தப்படும் மக்களினதும் நிறவெறி மற்றும் இனவேறுபாடுகளுக்கு எதிரானது என்றும் அதற்காக போராடுகின்ற விடுதலை அமைப்புகளுக்கும் பக்க பலமாக தான் இருப்பேன் என்றும் இறுதிவரை கூறி சளைக்காது போராடியவர். ஆபிரிக்க மக்களுக்கு மட்டுமல்ல பாலஸ்தீன மக்களுக்காகவும், ஈழத்தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுத்து வந்தவர்.

1948 முதல் 1991 வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இவரது போராட்டம் வியாபித்திருந்தது. ஆபிரிக்க மக்களின் இன நிறவெறிக்கெதிரான விடுதலைப் போராட்டம் நெல்சன் மண்டேலா அவர்கள் நிறைவுக்கு கொண்டு வந்தபோதும் அதற்கு இவரின் பங்கும் அளப்பரியதாக இருந்திருக்கின்றது. அதன் கரணியமாக 1984 யில்  இவருக்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

தென் ஆபிரி


க்கா வாழ் தமிழ் மக்கள் எடுத்த பெரும் முயற்சியின் கரணியமாகத் தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றியும் அதன் அவசியத்தையும் இவர் அறிந்து கொள்ள மிகுந்தவாய்ப்பாக அமைந்து விட்டது. அதனூடக ஆபிரிக்க நாடுகள் எல்லாம் எமது இனப்பிரச்சனையும் இன்று வரை அறிந்து வைத்திருக்க இவரின் அளப்பரிய பங்கு இருந்திருக்கின்றது. அதற்கு மேலாகச்சென்று விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவின் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளருடனும் மானசீகமான கலந்துரையாடல்களையும் இவர் மேற்கொண்டதோடு எமது ஈழவிடுதலைப்போராட்டத்தின் அவசியத்தையும் உணர்ந்து கொண்டதுடன் எமது விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுவெளியிலும், பல்வேறு மூத்த உலக அரசுத்தலைவர்களோடு பேச்சுக்களில் கலந்து கொண்டதையும் நன்றியுணர்வோடு இவ்வேளையில் நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.

‘மகான் போல நீ வாழ வேண்டும் என்றில்லை….’ மனசாட்சியின் படி வாழ்ந்தால் போதும் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த பேராயர். டெஸ்மாண்ட்  டுட்டு அவர்களின் குரல் இன்று ஓய்ந்து போனது.

எமது நீதிக்காகவும் விடுதலைக்காகவும் ஆபிரிக்கக் கண்டத்திலும் சர்வதேச அரங்குகளிலும் குரல் கொடுத்த பேராயர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களுக்கு உலகம் வாழ் அனைத்துத் தமிழ்மக்கள் சார்பாக நாமும் நன்றியுணர்வோடு மாண்பு மிகு இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு

தொடர்புகளுக்கு: mte.france@gmail.com

தொலைபேசி: 0652725867


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.