இறுதிச் சுற்று பேச்சுகளில் இனிய இறுதி முடிவு!!

 


"இந்த நாட்டில் வாழும் வடக்கு, கிழக்கு, முஸ்லிம் தேசிய இனங்களுடன் கரங்கோர்த்து, சிங்கள சகோதர மக்களுக்கும் ஒரு செய்தியை சொல்லி, மலையக மக்களின் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கும் உயர்த்த வேண்டிய வரலாற்று கடமை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் எனக்கு இருக்கின்றது. சமீபத்து இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர்களின் விவகாரங்களை தொடர்ந்தும் தோட்ட, பிரதேச, மாவட்ட  பிரச்சினைகளாக மட்டும் முடக்காமல், ஏனைய சகோதர சமூகங்களது பிரச்சனைகளை போல் தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கு கொண்டு செல்வதே, இன்றைய தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாட்டில் எங்கள் நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. இதை சரியாக புரிந்துக்கொண்டு  மலையக இளைய தலைமுறையும், படித்த தலைமுறையும்  எமது கரங்களை பலப்படுத்த வேண்டும்."


- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.


கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் இன்று நடைபெறும் இறுதிச் சுற்று பேச்சுகளில் இனிய இறுதி முடிவு எட்டப்படும் என நான் நம்புகிறேன் எனவும் அவர் நேற்றுக் காலை குறிப்பிட்டார்.


இது தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தியதாவது:-


"இந்தக் கூட்டு செயற்பாட்டில் நாம் இடம்பெறாமல் இருந்திருந்தாலும்கூட நான் இதை வேறு அடிப்படைகளை செய்தே இருப்பேன். ஐ.நா. அவைக்கு மலையக விவகாரங்களை கொண்டு செல்ல தீர்மானித்துள்ளேன் என நான் மூன்று மாதங்களுக்கு முன்பே சொன்னேன். இன்று இந்தியாவுக்கு ஞாபகப்படுத்தி, அமெரிக்கா, ஐரோப்பா, ஐநா என சகோதர மக்களுடன்  கரங்கோர்த்து மலையக மக்களும் பயணிக்க வேண்டிய காலம் உதயமாகி உள்ளது.


இன்றைய நடவடிக்கை இலங்கையின் உற்ற நட்பு நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதில் ஆரம்பிக்கிறது. இந்நாட்டின்  சமீபத்து இந்திய வம்சாவளி மக்களையும் சேர்க்காமல் அல்லது இந்திய வம்சாவளி மக்களின் பிரதான அரசியல் இயக்கத்தின் பங்கு பற்றல் இல்லாமல், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுத முடியுமா?

 

ஆகவே, நாம் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கேயே இருக்கிறோம். அதுவும் நன்றாகவே இருக்கிறோம். நாம் எதை செய்ய வேண்டுமோ, அதையே  செய்கிறோம். அதையும் நன்றாகவே செய்கிறோம். இந்நோக்கில் எம்முடன் கரங்கோர்க்கும் எவரையும் அரவணைக்க தயாராகவும் இருக்கிறோம்.


எழுபதுகளில் மறைந்த  சௌமியமூர்த்தி தொண்டமான் தமிழ் கட்சிகளுடன் தமிழர் கூட்டணி கூட்டு தலைமையில் இடம் பெற்றார். வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுக்கும் நிலைமைக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புகள் தள்ளப்பட்ட பிறகு, தன்னிலை விளக்கம் அளித்து அந்த கூட்டில் இருந்து  நாகரிகமாக  பெரியவர் தொண்டமான் விலகினார். அதேபோல் பிற்காலத்தில் வடகிழக்கு சகோதரர்களின் தலைமையின் அழைப்பை ஏற்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் நண்பர் சந்திரசேகரனும், நானும் வடக்கு, கிழக்கு சகோதரத்துடனான எங்கள் உறவுகளை தொடர்ந்தும் கட்டி வளர்ந்து வந்தோம்.

 

கட்சி மாறுபாடுகளுக்கு அப்பால் பெரியவர்  சௌமியமூர்த்தி தொண்டமானை நான் எப்போதும் மதிக்கிறேன். அவர் அன்று எடுத்த முடிவு சரியானதே. தனிநாடு என்ற இலக்கை மலையக தமிழ் மக்கள் ஏற்க முடியாது என அவர் முடிவெடுத்தார். அதேவேளை, பொது நோக்கங்களில் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் முடிவெடுத்து செயற்பட்டார்.


"தனிநாடு" என்பதால் கூட்டு செயற்பாட்டில் இருந்து தொண்டமான் விலகியதை கணக்கில் எடுப்பவர்கள், அவர் அதுவரை தமிழ் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.


இது தொடர்பில் செளமியமூர்த்தி தொண்டமான் கடை பிடித்த கொள்கைகளையே நானும் கடை பிடிக்கிறேன். அதேபோல் நண்பர் சந்திரசேகரன் கடைபிடித்த கொள்கைகளையே நான் கடைபிடிக்கிறேன்.  நானும் நேற்று பொதுவாழ்வுக்கு வந்தவனல்ல. எனக்கும் இவை தொடர்பில் நீண்ட வரலாறு இந்நாட்டில் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக இருக்கிறது.


இன்று எமது பொது நோக்கு நிகழ்ச்சி நிரலில் தனிநாடு என்ற இலக்கு இல்லை. ஆயுதப் போராட்டம் என்பதும் இங்கில்லை. எங்கள் தந்தை நாடான இந்தியா, எங்கள் தாய் நாடான இலங்கையுடன், பிரிபடாத நாட்டுக்குள் எங்கள் பிரச்சினைகள் தொடர்பில் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்திகொண்ட கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என நாம் இன்று கோருகின்றோம்.  இது எமது பிரச்சினைகளுக்கு முழுமையான அரசியல்  தீர்வு அல்ல எனவும் கூறுகிறோம்.


இதை எப்படி சிங்கள மக்களுக்கு, சிங்கள மொழியில் எடுத்து கூற வேண்டும் என்பதும் எனக்கு தெரியும். இன்று மாகாண சபைகளை இடைநிறுத்தி ஆளுநர்கள் மூலம் இந்த அரசு அராஜகம் செய்வதும், ஒரு தேர்தல் மூலம் இந்த அரசுக்கு கடும் செய்தி ஒன்ற சொல்ல சிங்கள மக்கள் காத்திருப்பதும் எனக்கு தெரியும். ஆகவே இதையிட்டு எவரும் கலவரமடைய தேவையில்லை" - என்றார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.