மானிப்பாயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பெண்கள் படுகொலை

 


யாழ்ப்பாணம் மானிப்பாய் செல்லமுத்து கனகசபாபதி வீதியில் உள்ள நாகேந்திரம் போஜன் என்பவரது வீட்டிற்குள் 16.01.2006 அன்று நள்ளிரவு வெள்ளைவான் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் தயாரான 54 வயதுடைய போஜன் அர்த்தநாரீஸ்வரி, இரு மகள்களான தியாகேஸ்வரன் ரேணுகா (வயது 30), போஜன் சண்முகா (வயது 24) என மூவர் கொல்லப்பட்டதுடன், தந்தையாரான நாகேந்திரம் போஜன் (வயது54) மற்றும் மகனான போஜன் உல்லாசன் (வயது 26) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

சம்பவ தினத்தன்று இரவு 08 மணியளவில் அவர்களது வீட்டுக்கு முன்னால் வழமைக்கு மாறாக அதிகளவு இராணுவத்தினர் நிற்பதை குறித்த குடும்பத்தினர் அவதானித்துள்ளனர். அங்கு நின்றிருந்த இராணுவத்தினர் அனைவரும் தங்களது முகங்களை கறுப்புத் துணியால் மூடிக்கட்டியிருந்துள்ளனர். குறித்த குடும்பம் வசித்த வீடு மேல்மாடி வீடு என்பதால் அவர்கள் அங்கிருந்து வெளியே நடப்பதை அவதானித்துள்ளனர். பின்னர் இரவு 10 மணியளவில் இராணுவத்தினர் அனைவரும் அங்கிருந்து அகன்றுவிட குடும்பத்தினர் நித்திரைக்குச் சென்றுள்ளனர்.
நள்ளிரவைத் தாண்டி 12.40 மணியளவில் வீதியில் நாய்கள் குரைக்கும் சத்தமும், அதனையடுத்து சிலர் கேற்றில் ஏறி வீட்டுக்குள் பாயும் சத்தமும் கேட்டதையடுத்து நித்திரையிலிருந்து விழிப்படைந்த குடும்பத்தினர் வெளியில் அவதானித்த போது, அங்கு 09 பேர் ஆயுதங்களுடன் சிவில் உடையில் ஏறிக்குதித்து உள்ளே நின்றதைக் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டும் முகத்தை கறுப்புத்துணியால் மூடிக்கட்டியிருந்துள்ளார்.
குறித்த ஆயுததாரிகள் ”கதவைத் திறவடா வீட்டை சோதனையிட வேண்டுமெனவும், தாங்கள் இராணுவத்தினர்” எனவும் கூறியதையடுத்து நாகேந்திரம் போஜன் அவர்கள் கதவைத் திறந்துள்ளார். அவருடன் அவரது மகனும் கூட இருந்துள்ளார். அவர்கள் இருவரையும் வீட்டின் வெளியே நிலத்தில் இருக்குமாறு ஆயுததாரிகள் பணித்துள்ளனர். அப்போது மகளான சண்முகா வீட்டின் வாசலுக்கு வந்துள்ளார். அவரை வெளியே இழுத்த ஆயுததாரிகள், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். அவர் சம்பவ இடத்திலேயே உடனேயே சரிந்து விழுந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வீட்டினுள் நுழைந்த ஆயுததாரிகள் வீட்டிற்குள் இருந்தவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். இதில் மகளான ரேணுகா மற்றும் தாயாரான அர்த்தநாரீஸ்வரி ஆகியோர் துப்பாக்கிச்சனங்கள் துழைத்த நிலையில் உடனேயே சரிந்து வீழ்ந்துள்ளனர்.
தொடர்ந்து வீட்டின் வெளியே இருத்தி வைக்கப்பட்டிருந்த தந்தை மற்றும் மகனை இலக்கு வைத்தும் ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நடாத்தினார்கள். அதில் தந்தையும், மகனும் காயமடைந்தனர். காயமடைந்த நிலையிலும் எழுந்த மகன், வீட்டினுள் ஓடிச் சென்று விறாந்தையில் விழுந்துள்ளார். மீண்டும் வீட்டினுள் சென்ற ஆயுததாரிகள் விழுந்து கிடந்த மகன் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடாத்தினர்கள்.
பின்னர் ஆயுததாரிகள் தாம் வந்த வெள்ளைவானில் ஏறிச் சென்றதும் வீட்டினுள் இருந்த ரேணுகாவின் கணவர் வெளியில் வந்து அவதானித்த போது இரு மகள்கள் மற்றும் தாய் ஆகியோர் இறந்த நிலையில் இருந்துள்ளனர். தந்தையார் காலில் காயமடைந்திருந்தார். வீட்டினுள் இருட்டாக இருந்ததால் ஆயுததாரிகள் அவரை அவதானித்திருக்கவில்லை. அதனால் அவர் காயங்கள் ஏதுமின்றி உயிர்தப்பியிருந்தார்.
காயமடைந்தவர்களை வைத்தியசாலை கொண்டு செல்வதற்கு பயத்தின் காரணமாக அயலவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. அதனையடுத்து வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்டு இரு மணித்தியாலங்களின் பின்னர் அம்புலனஸ் வருகை தந்து காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மானிப்பாய் சந்தியில் இருந்த இராணுவ முகாமிலிருந்து வெள்ளைவான் ஒன்றில் நள்ளிரவில் புறப்பட்டவர்களே இக்கொலையை செய்துவிட்டு, பின்னர் நவாலி நாச்சிமார் கோவில் வீதியூடாக பிப்பிலி சந்தியை அடைந்து மீண்டும் இராணுவ முகாமிற்குச் சென்றதாக தகவல்கள் தெரிவித்திருந்தன.
தந்தையாரான நாகேந்திரம் போஜன் அவர்கள் இலங்கை சாரணர் சேவையில் காங்கேசன்துறை ஆணையாளராக நீண்ட காலம் பணியாற்றியவர். அத்துடன் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவின் வடபகுதி ஆணையாளராகவும் பணியாற்றியவர்.
மூத்த மகளான தியாகேஸ்வரன் ரேணுகா மானிப்பாய் சிந்மயபாரதி வித்தியாலய ஆங்கில ஆசிரியர் ஆவார். அத்துடன் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட அவர் ”அம்மா நலமா?” என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இச்சம்பவம் நடைபெற இரு வாரங்களுக்கு முன்னரே பதிவுத் திருமணம் முடித்திருந்தார்.
இளைய மகளான போஜன் சண்முகா யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவியாவார்.
காயமடைந்த மகனான போஜன் உல்லாசனன் அவர்கள் யாழ் மத்திய கல்லூரியின் கணிதபாட ஆசிரியராவார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.