’13’ ஐ தீர்வாக ஒருபோதும் ஏற்கவேமாட்டோம்! – கஜேந்திரகுமார் திட்டவட்டம்!
“தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக நேர்மையாகச் செயற்படுகின்ற எந்த நாட்டுடனும் நாங்கள் பயணிப்போம். அதற்காக இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தைத் தீர்வாக நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.”
-இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழர்களுடைய தீர்வு விடயத்தில் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைத் தமிழர்கள்தான் கூறமுடியும். அதனை எவரும் கூற முடியாது; திணிக்கவும் முடியாது. 13 ஆவது திருத்தத்தைத் தீர்வாக ஒருபோதும் ஏற்க முடியாது. நாம் அதில் தெளிவாகவுள்ளோம்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தைத் தமிழ் மக்களை ஏற்றுக் கொள்ளவைப்பது தமிழர்களுடைய அபிலாஷைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழர் தேசத்தை அழிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகத்தான் நாம் அதனைப் பார்க்கின்றோம். இதற்கு நாம் ஒருபோதும் ஒத்துழைக்கபோவதில்லை். நாங்கள் இதனை எதிர்ப்பதை இந்தியா தமக்கு எதிராகப் பார்க்கின்றது என்றால் அது இந்தியாவின் முடிவு.
ஆனால், எங்கள் மக்களுடைய நலன்களை எவருக்கும் நாங்கள் பேரம் பேசி கைவிடத் தயாரில்லை. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக நேர்மையாக செயற்படுகின்ற எந்த நாட்டுடனும் நாங்கள் பயணிக்க மாட்டோம் எனக் கூறவில்லை. மாறாக அனைவரையும் கேட்டுக்கொள்வது தமிழர்களுடைய அடிப்படை அபிலாஷைகளைக் குறிப்பாக திம்புக் கோட்பாடுகளில் கூறப்பட்ட அடிப்படை அபிலாஷைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலே அவர்களுடைய ஆதரவை எமக்குத் தரவேண்டும் என்ற அடிப்படையில்தான் நாம் கோரி வருகின்றோம்.
இதனைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக நாம், அனைவருக்குமே எங்களுடைய தீர்வு யோசனைகளை வழங்கியிருக்கிறோம். தமிழ்த் தேசம் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை முழுமையாக அங்கீகரிக்கக்கூடிய சமஷ்டி தீர்வைத்தான் நாங்கள் கோரியிருக்கின்றோம். இதை நோக்கியதாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதேவேளை சிங்கள மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவதற்கு அவர்கள் தயார் என்றால் அவர்களை அரவணைத்து அவர்களுடன் பயணிப்போம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இந்தியாவுடன் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தியா 13ஆவது திருத்தத்தைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதில் தவறில்லை. ஏன் என்றால் அது வல்லரசு. தன்னுடைய தேவைக்காக அதனைக் கூறுகின்றது. இங்கு யார் பிழை என்றால் தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெற்று தமிழ் மக்களுடைய நலன்களுக்காகக் குரல் கொடுக்காமல் இந்தியாவினுடைய எடுபிடிகளாக இருக்கக்கூடிய துரோகிகள்தான் பிரச்சினை .
ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றோம்; சமஷ்டிதான் தேவை என மக்களிடம் ஆணை பெற்று அதற்கு நேர் எதிராக 34 வருடங்களுக்கு முன்பாகவே எடுத்து எடுப்பிலே நிராகரித்த 13 ஆவது திருத்தத்தை இன்று நடைமுறப்படுத்தக் கேட்பது என்றால் அந்தத் துரோகிகளுக்கு எதிராகச் செயற்படுவோம்.
நாங்கள் எந்த நாட்டையும் எதிரியாகப் பார்க்கத் தயாரில்லை. இந்தியா கேட்கும்போது இந்தியாவின் பக்கத்தில் நியாயம் இருக்கும். ஆனால், ஒற்றையாட்சியாக இருக்கும் 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை