சிறையிலுள்ள இந்தியக் கடற்றொழிலர்களை சந்தித்த டக்ளஸ்
இழுவைமடித் வலைத் தொழிலில் ஈடுபடுவதனால் கடல் வளங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களையும், இலங்கை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளுகின்ற வாழ்வாதார அச்சுறுத்தல்களையும் தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களை புத்தாண்டு தினமான இன்று சந்தித்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வைத்து கலந்துரையாடிய போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இலங்கையின் கடல் வளத்தினையும் எமது மக்களின் வாழ்வாதாரத்தினையும் அழிக்கின்ற இழுவை வலைத் தொழில் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது மக்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.
இதனை இந்தியக் கடற்றொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். கடல் வளங்கள் அழிக்கப்படுவதனால் இந்தியக் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்படுகின்றது.
ஆனால், இந்தியாவில் உண்மைகள் மறைக்கப்பட்டு தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இழுவைமடித் தொழிலில் ஈடுபடுகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களும் தமது வாழ்வாதாரத்திற்காகவே தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்பதை நான் அறிவேன்.
எனவேதான், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதுடில்லி சென்ற போது இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான திட்ட வரைபு ஒன்றினை கையளித்திருந்தேன்.
அதன் அடிப்படையில் பரிசீலிக்க இந்தியத் தலைவர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர். எனினும் கொரோனா உட்பட பல்வேறு காரணங்களினால் அதனை இன்னும் தொடர முடியவில்லை.
எதுஎப்படியோ, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தடுத்து வைக்கப்பட்டு்ள்ள நீங்கள் இன்னும் சில வாரங்கள் பொறுத்திருக்க வேண்டும். உங்களுடைய கருத்துக்களை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையில் முன்வைத்து உங்களது விடுதலை தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வேன்.
எனினும், உங்களின் முதலாளிமாருக்கு சொந்தமான படகுகள் அரசுடமையாக்கப்படும். அதற்கான சட்டங்கள் கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அமைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, நீங்கள் விடுதலையாகி நாட்டிற்கு திரும்பியதும் இழுவைமடித் வலைத் தொழிலை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வை மேற்கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சுமார் 56 இந்தியக் கடற்றொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை