உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்!


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்

சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும்.
கடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி.
யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் சாள்ஸ்.
சிறிய வயதில் தன்னுடைய போரியல் வாழ்கையை தொடங்கியபோது அவரின் தோற்றமும் வயதும் போதாத காரணத்தால் வடமராட்சியில் போர் நெருக்கடி காரணமாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் தளபதி கிட்டண்ணாவினால் தெரிவு செய்யப்பட்டிருந்த நியாய விலைக்கடையில் பொருள் விற்பனையாளராக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.
பின்னர் வடமராட்சியில் “ஒப்பரேசன் லிபரேசன்” நடவடிக்கையைச் சந்தித்த போது பருத்தித்துறை களமுனையில் இறுதிவரை நின்று போராடி பிற்பாடு விலகி மீண்டும் மில்லரின் புதிய சகாப்தத்துடன் உள்நுழைந்து சாதனை படைத்தார்.
இந்திய இராணுவம் முழுமையாக யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்திய இராணுவத்தின் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் சாள்ஸ். அங்கு மீண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர்.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப்படை வெளியேறிய பின்னர் அன்று தொடக்கம் வடமராட்சியினை தளமாகக் கொண்டு செயற்பட்ட சாள்சின் செயற்பாடு கண்டு- புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களால் அடையாளம் காணப்பட்டு- தெற்கில் தளம் அமைப்பதற்காகவும், அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முகம் தெரியாத புலியாகச் சென்றார்.
உண்மையில் நீண்டகாலமாக தென்னிலங்கையில் நின்று வெற்றிகரமாக பல தாக்குதல்களை குறிப்பாக சிறிலங்காப் படையின் கூட்டுப்படைத் தலைமையகம் உள்ளிட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களை தலைமையேற்று வழிநடத்தி அங்கு சிறிலங்காப் படைகனளால் தேடப்படும் போது மட்ட்க்களப்பைத் தளமாக வைத்துக்கொண்டு பல வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டு வழிநடத்தினார்.
2001 ஆம் ஆண்டு உலகமே வியக்கத்தக்க வகையில் எந்தவொரு பொதுமகனும், வெளிநாட்டுப் பிரயாணியும் பாதிப்படையாத வகையில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தினை தகர்த்து எறிவதற்காக கரும்புலி அணிக்கான நீண்டகாலப் பயிற்சியினை வழங்கி, தாக்குதலை வழிநடத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த உத்தமவீரன். ஆனால் எங்கள் மக்களுக்கு அவர் முகம் தெரியாத ஒரு தளபதி.
தொடக்க காலத்தில் தான் சார்ந்திருந்த துறையில் இருந்து கொண்டு கடற்புலிகளையும் வடக்கு-கிழக்கிற்குள் மட்டுப்படுத்தப்படாமல் தெற்கிலும் பாரிய தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் சில மறைமுக கடற்கரும்புலிகளை உருவாக்கி அவர்களுக்கு புலனாய்வுத்துறையில் பணிகளை முன்னெடுத்த அதேநேரம் ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு ஊடாக சிறிலங்காவின் காலி கடற்படைத்தளத்தை மறைமுக கடற்கரும்புலிகளைக் கொண்டு தகர்ப்பதற்காக பல ஆண்டுகளாக அப்பணியைத் தொடர்ந்து, அத்தாக்குதல் நடைபெறுகின்ற நேரம் தொடர்புகளைப் பேணி வழி நடத்திய தளபதி இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் கண்டிப்பாக அவரின் கனவுகளை சுமந்து இப்போரியலை முன்னெடுத்துச் செல்வர்.
சாள்ஸ் தாக்குதலிலும் நடவடிக்கைகளிலும் மட்டும் விற்பனர் அல்ல. எல்லோரோடும், தலைவர் அவர்களுடனும் நட்பு உரிமையுடன் பழகுகின்றவர். இவர் தனித்துவமாக தெற்கில் மட்டும் தகாக்குதலை தீவிரப்படுத்தவில்லை. யாழ். குடாநாட்டிலும் தாக்குதலை முன்னெடுத்து புதிய படைய புலனாய்புப் போராளிகளைக் கொண்டு முகமாலை முன்னரங்க நிலைகளை உடைத்து முன்னேறுகின்ற நடவடிக்கையிலும் அணியை வழிநடத்தியவர் இன்று இல்லை.
இன்றை சூழ்நிலையில் இவரின் இழப்பு விடுதலைப் போராட்த்திற்கு பாரிய இழப்பாகவும் உள்ளது. எமது விடுதலைப் போராட்டம் பல தளபதிகளையும் துறைசார் பொறுப்பாளர்களையும் இழந்து நிற்பினும் படிப்படியாக பல வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது.
இழப்புக்களை தாங்கிக்கொள்வது கடினம். ஆனால் இழப்புக்கள் இல்லாமல் விடுதலையை பெற்றுவிட முடியாது. நிச்சயமாக சாள்சின் கனவினையும் விடுதலைப் போராட்டத்தின் எண்ணத்தையும் முன்னெடுத்து எமது விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்குவோம் என்றார் அவர்.
கேணல் சூசை
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி
( கேணல் சாள்ஸ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் 06.01.2008 அன்று ஆற்றிய உரையில் இருந்து …)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.