காளிதாசரிடம் கேள்விகள் கேட்ட கிராமத்துப்பெண்!!



ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது, தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்.

காளிதாசர் அவரைப் பார்த்து, "அம்மா தாகமாக இருக்குகிறது, கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா?" என்று கேட்டார்.

அந்தக் கிராமத்துப் பெண்ணும், "தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றாள்.

உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து, "நான் ஒரு பயணி அம்மா" என்றார்.

உடனே அந்தp பெண், "உலகில் இரண்டு பயணிகள்தான். ஒருவர் சந்திரன், ஒருவர் சூரியன். இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள்" என்றாள்.

"சரி, என்னை விருந்தினர்" என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்.

உடனே அந்தப் பெண், "உலகில் இரண்டு விருந்தினர்தான். ஒன்று செல்வம். இரண்டு இளமை. இவை இரண்டும்தான் விருந்தினராக வந்து உடனேப் போய் விடும்” என்றாள்.

சற்று எரிச்சலான காளிதாசர், “தான் ஒரு பொறுமைசாலி” என்றார்.

அந்தப் பெண், “அதுவும் இரண்டு பேர்தான். ஒன்று பூமி, எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும். மற்றொன்று மரம், யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும்” என்றாள்.

சற்று கோபமடைந்த காளிதாசர், “நான் ஒரு பிடிவாதக்காரன்” என்றார்.

அதற்கும் அந்தப்பெண், “உலகிலேயேப் பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர்தான் ஒன்று முடி, மற்றொன்று நகம். இரண்டும் எத்தனை முறை வேண்டாமென்று வெட்டினாலும் பிடிவாதமாக வளரும்” என்றாள் சிரித்தபடி.

தாகம் அதிகரிக்கவே, “நான் ஒரு முட்டாள்” என்று தன்னை கூறிக்கொண்டார்.

உடனே அந்தப் பெண், “உலகிலேயே இரண்டு முட்டாள்கள்தான். ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன். மற்றவன் அவனுக்குத் துதிபாடும் அமைச்சன்” என்றாள்.

காளிதாசர் செய்வதறியாது, அந்தப் பெண்ணின் காலில் விழுந்தார்.

அந்தப் பெண், “மகனே எழுந்திரு...” என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப் போனார்.

அங்கு அவர் முன்பு, சரஸ்வதி தேவி நின்றாள்.

காளிதாசர் கைகூப்பி வணங்கியதும், தேவி தாசரைப் பார்த்து, “காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான். நீ மனிதனாகவே இரு” என்று கூறி தண்ணீர்க் குடத்தைக் காளிதாசர் கையில் கொடுத்துவிட்டு மறைந்தாள்.

                                 நன்றி முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.