குடியரசு தின நிகழ்வில் சமூக ஒதுக்கல் ஏன்?வ-கௌதமன்.!
குடியரசு தின நிகழ்வில் சமூக ஒதுக்கல் ஏன்? வடதமிழ்நாட்டு சுதந்திர போராட்ட தலைவர்களை புறக்கணித்ததிற்கு கடும் கண்டனம்.
வகௌதமன்.
73 ஆவது குடியரசு தின டெல்லி நிகழ்வில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியின் புறக்கணிப்பை தொடர்ந்து தமிழ்நாடு அரசு நடத்திய குடியரசு தின அணிவகுப்பில் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவன் அவர்கள் உள்ளிட்ட வரலாற்று நாயகர்களையும் எங்களின் மதிப்புமிக்க தலைவர்களான ஐயா முத்துராமலிங்கத் தேவர் கர்மவீரர் காமராஜர் ஐயா இரட்டைமலை சீனிவாசனார் உள்ளிட்ட தலைவர்களையும் காட்சிப்படுத்தியது பெரு மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அதே நேரத்தில் சுதந்திர வேட்கையோடு வட தமிழ்நாட்டில் நின்று போராடிய தமிழ்த் தலைவர்களை தமிழ்நாடு அரசு திட்டமிட்டு சமூக ஒதுக்கலோடு புறக்கணித்ததை தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வரலாற்றை எங்களின் அடுத்த தலைமுறைக்கு நினைவு படுத்துவதற்காகத்தான் இத்தகைய ஊர்வலம் என்று தில்லிக்கு மட்டும் அறிவுரை சொல்லி விட்டு எங்கள் அஞ்சலை அம்மாள், ஆதிகேசவ நாயகர், மா.பொ.சி, சாமி நாகப்பன் படையாட்சி ஆகியோர்களை உங்களால் எப்படி ம(ற)றைக்க முடிந்தது? மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியபோது தென்னிந்தியாவில் இணைந்த முதல் பெண் போராளித் தலைவர் கடலூர் அஞ்சலை அம்மாள். தனது 9 வயது மகளோடு மட்டுமல்ல தான் கர்ப்பம் தரித்த காலத்திலும் எரிமலையாக நின்று சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு சென்றவர். ஒவ்வொரு முறையும் மகாத்மா காந்தி அடிகளால் தென்னாட்டு ஜான்சிராணி என்று புகழப்பட்ட அஞ்சலை அம்மாளை ஏன் புறக்கணித்தீர்கள்? சுதந்திரப்போராட்ட காலகட்டத்திலேயே இரண்டு நபர்களுக்குத்தான் "சர்தார்" பட்டம் வழங்கப்பட்டது. வடக்கில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கும் தெற்கே சர்தார் ஆதிகேசவ நாயகர் அவர்களுக்கும்தான். கோடிக்கணக்கான தனது சொத்தையும் கொடுத்து சுதந்திரத்திற்காக தனது உயிரையும் கொடுத்த ஆதிகேசவ நாயகரை ஏன் மறைக்கிறீர்கள்? வெள்ளையர்களிடம் சிக்கிக்கொண்ட இந்திய ஒன்றியத்தின் வரைபடத்தை மீட்க மட்டுமல்ல கொள்ளையர்களிடம் சிக்கி கொண்ட தமிழ்நாட்டின் வரைபடத்தையும் காக்கப் போராடியவர் எங்கள் மாபொசி. அப்படிப்பட்ட தியாகம் சுமந்த மா.பொ.சி அவர்களையும் உங்களால் எப்படி மூடி மறைக்க முடிந்தது? காந்தியடிகளின் முதல் சத்தியாகிரகப் போராட்டத்தில் முதல் களப்பலியானவர் சாமி நாகப்பன் படையாட்சி. இவர்களையெல்லாம் எதிர்கால தலைமுறைகளுக்கு தெரியப் படுத்த வேண்டாமா? தமிழ்நாட்டை சுற்றி வரும் அலங்கார ஊர்திகள் இறுதியாக ஈரோடு, மதுரை உள்ளிட்ட இடங்களில் நிலைகொள்ளும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அரும்பெரும் சுதந்திர போராட்டத் தலைவர்களான மேற்கண்ட இவர்களையும் காட்சிப் படுத்தியிருந்தால் கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உட்பட வட தமிழ்நாட்டிலும் சுதந்திரப் போராட்ட வரலாற்றை காட்சிப்படுத்தியிருக்கலாமே.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதையுண்ட கீழடி கூட மேலே வரும்போது ஒரு நூற்றாண்டுக்குள் போராடிய அரும்பெரும் விடுதலைப் போராட்டத் தலைவர்களை மூடி மறைப்பது என்பது எத்தகைய நேர்மை.
சுதந்திர தினத்திலும் குடியரசு தினத்திலும் கூட சாதிய பாகுபாடு காட்டி தமிழர் குடிகளுக்குள் கடும் கருத்து வேற்றுமைகளை இனியாவது உருவாக்காமல்
வருங்காலங்களில் உண்மையான தியாகம் சுமந்த விடுபட்ட அத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களையும் காட்சிப்படுத்தி தமிழ்நாடு அரசு அறம் காக்க வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
"சோழன் குடில்"
27.01.2022
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை