தேசிய ஐக்கியம், சகவாழ்வு என்பன வலுப்படுத்தப்பட வேண்டும் - தேசிய சமாதானப் பேரவை!!

 


சகவாழ்வைக் கட்டியெழுப்ப செயற்திறனான பங்களிப்பைச் செலுத்துதல் பற்றி தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் மாதாந்த அமர்வில் ஆராயப்பட்டதாக அதன் மாவட்ட இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.


இதுவிடயமாக முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் கலந்துரையாடல் மட்டக்களப்பு கூட்டுறவு கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை  20.01.2022 இடம்பெற்றது.


தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்களும் அதன் வளவாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


நபர்களுக்கிடையே அல்லது சிறு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், இரண்டு அல்லது மூன்று சமூகங்களுக்கிடையே பாரிய மோதலாக வளர்ந்ததா? சமூகங்களிடையே பேச்சுவார்த்தை நின்று போனதா?


அயலவர் நட்புறவு சிதைவுற்றதா? ஒருவரோடுவர் ஒன்றாகப் பணியாற்றுவதை மறுக்கின்றனரா? ஏதேனுமொரு இனத்திற்குரிய நபர்கள் வேறொரு இனத்தினருக்குரிய நபர்கள் இருக்கும் இடத்திற்கு (கூட்டத்திற்கு, அலுவலகத்திற்கு, கடைக்கு அல்லது வேறு பொது இடத்திற்கு) வருவதைத் தடுக்கின்றார்களா? (சமூகங்களிலிருந்து அகற்றப்படுகின்றார்களா?) ஒற்றுமையாக நடத்திச் செல்லப்பட்ட சங்கங்களுக்கு என்ன நடந்தது? ஒருவரையொருவர் சந்தேகிக்க அல்லது ஐயமுற ஆரம்பித்துள்ளனரா? ஒவ்வொரு இனத்தினரிடையேயும் ஒவ்வொருவர் மீதான அச்சம் ஏற்பட்டுள்ளதா?


வேறு இனத்திற்கு அல்லது மதத்திற்கு உரியவர்களர்கள் என்ற வகையில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அல்லது ஒதுக்கப்பட்டுள்ளதாக அல்லது தமக்குரிய ஏதேனுமொரு சேவையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என பிரதேசத்தின் நபர்களுக்குத் தோன்றுகின்றதா?


எண்ணிக்கை ரீதியில் அதிகமாக உள்ள இனத்தினரால் எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையாக இருக்கின்ற இனத்தினர் அல்லது மதத்தினர் பாதிப்புக்கு ஆளாக்கப்படுகின்றனரா?


ஏதேனுமொரு இனத்தைச் சேர்ந்த நபர்களால், நடத்தப்பட்டு வந்த அல்லது வருகின்ற வர்த்தக நிலையத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்வதை தடுப்பதற்கு ஏதேனுமொரு குழுவால் முயற்சி எடுக்கப்படுகின்றதா? அதற்கு அடிபணிந்து பிரதேசத்திலுள்ளவர்கள் அவ்வாறான கொடுக்கல் வாங்கல்களிலிருந்து தம்மைத் தவிர்த்துக் கொள்கின்றார்களா?


ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த பல்வேறு சமூகங்களுக்குரிய சிறுவர்கள் இளைஞர்களாக அல்லது மூத்தவர்களாக வளர்ந்த பின்னர் நண்பர்களாக இருந்தனரா?


சிற்சில இனக் குழுக்களுக்குரிய நபர்களால் ஒரு காலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுச் சென்ற வர்த்தகங்கள், கைத்தொழில்கள், சுய தொழில்கள் செயலிழந்துள்ளனவா?


போன்ற விடயங்கள் சகல சமூகங்களையும் ஒருங்கிணைத்த குழக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டன.


இதனால் இனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பையும் சகோதரத்துவத்தையும் மேம்படுத்தி செயற்திறன் மிக்க பிரஜைகளாகச் செயற்படுதல் வேண்டும் என்பதில் அவதானம் செலுத்தப்படுகின்றது என்றும் தேசிய ஐக்கியம் சகவாழ்வு என்பன மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது உணரப்பட்டுள்ளதாக அங்கு பலராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.


சமூகங்களுக்கிடையில் சகல அம்சங்களிலும் உயிரோட்டமுள்ள தொடர்பைப் பேணுவதனூடாக சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.


சமூகங்களுக்கிடையில் காணப்படும் பல்வேறு வேறுபாடுகள் காரணமாக சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வில் பெரியளவிலான இடைவெளி காணப்படுகின்றது.


வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படும் முரண்பாடான நிலைமைகள் இவ்வாறான இடைவெளிகளுக்குக் காரணமாகும்.


இந்நிகழ்வில் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன மற்றும் திட்ட அலுவலர் எம்.ஆர்.எம். றில்வான் உட்பட இன்னும் பல சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.