சசிக்குமார் நடிக்கும் 'காமன்மேன்' யாருக்கு சொந்தம்?


 இந்திய சினிமாவில் எந்த மொழியிலும் படத்தின் தலைப்பு சம்பந்தமாகப் பஞ்சாயத்துக்கள் ஏற்படுவதில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் தலைப்பை பதிவு செய்துவிட்டு படமே எடுக்காமல் தலைப்புக்களை காலவரம்பு இன்றி சங்கங்களில் மறு பதிப்பு மூலம் வேறு யாரும் அந்த தலைப்புகளை பயன்படுத்த முடியாமல் தடைக்கற்களாக இருந்து வருகின்றனர் சிலர்.


இதற்குச் சங்க நிர்வாகிகளும் உடந்தையாக இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை அதுபோன்ற சம்பவம்தான் 'காமன்மேன்' படத்தலைப்பு விஷயத்திலும் நடந்துள்ளது.



 

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் காமன்மேன் (Common Man) என்கிற படத்தின் அறிமுக முன்னோட்ட போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்தப் படத்தை செந்தூர் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தத் தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் (AGR RIGHT FILMS) என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் முறையீடு செய்துள்ளது.


அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆம் ஆண்டு காமன்மேன் என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஷால் இதே போல காமன்மேன் என்று ஒரு பட வேலையை முன்னெடுக்க அப்போதும் இவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதன் பின்னர் விஷால் தன் படத்தலைப்பை மாற்றிக் கொண்டார்.


தற்போது, செந்தூர்ஃபிலிம்ஸ்இண்டர்நேசனல் (CHENDUR FILMS INTERNATIONAL) காமன்மேன் என்கிற தலைப்பில் படம் அறிவிக்கவே, அதில் நாயகனாக நடிக்கும் நடிகர் சசிகுமாரிடம், ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தினர் தலைப்பு தொடர்பான பிரச்சினை குறித்துச் சொல்லியிருக்கிறார்கள். அவரோ, எதுவானாலும் ஃபிலிம் சேம்பர் வழியாகப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.



 

அதன் பின்னர், இது தொடர்பாக ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனம், ஃபிலிம் சேம்பரை அணுக, சேம்பரோ தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.


தயாரிப்பாளர் சங்கமும் இந்தத் தலைப்பை செந்தூர் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்துக்குத் தவறுதலாக வழங்கிவிட்டதாகப் பதிலளித்துள்ளது. இதை எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் சான்றாக ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்திடம் கேட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கமும் இதோ தருகிறோம் அதோ தருகிறோம் என்று நாட்களைக் கடத்தியுள்ளது.


தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கடிதத்துக்காக ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனம் காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் செந்தூர் ஃபிலிம்ஸ் நிறுவனம் காமன்மேன் என்கிற தலைப்பில் டீசர் வெளியிட்டுவிட்டது.


அதிர்ச்சியடைந்த ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனம் ஃபிலிம் சேம்பரை மீண்டும் அணுகியதாம். சேம்பருக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் இருந்து எந்தவிதமான முறையான பதிலும் வரவில்லை என்றும் இதற்கான தேவையான சட்ட நடவடிக்கைகளை ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு சேம்பரும் உறுதுணையாக இருக்கும் என ஃபிலிம்சேம்பர் கூறியிருக்கிறது.



 

அதனால் இப்போது ஏஜிஆர் ரைட் நிறுவனம், காமன்மேன் என்கிற தலைப்பு தங்களுக்கே சொந்தம் என செந்தூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கும், இந்தத் தலைப்பில் வெளியான டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிடுமாறு திங்க் மியூசிக் நிறுவனத்துக்கும், இந்தத் தலைப்பில் தங்களைத் தவிர வேற எந்த நிறுவனத்தின் படத்திற்கும் அனுமதிச்சான்று வழங்கக் கூடாது என்று தணிக்கைக் குழுவுக்கும் சட்ட ரீதியான நோட்டீஸ்அனுப்பியுள்ளதாம்.


என்ன நடக்கப்போகிறதெனப் பார்ப்போம்.


-இராமானுஜம்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.