தமிழ்த்திறன் போட்டி-2022 Germany!

 யேர்மனியில் 29 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. சென்ற இரண்டு ஆண்டுகளாகக் கொடூரமாகப் பரவிவரும் கொரோனா தொற்று நோய்க்கும் சவாலாக யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களின் தமிழ்மொழிப் பற்று உள்ளது.

முதற் சுற்றில் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஏழு வயதுப்பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் முதல் நிலைகளைப் பெற்ற மாணவர்கள் மாநிலத் தெரிவுப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து கனோவர், கிறேபெல்ட், வூப்பெற்றால், புறுக்சால், நூர்ன்பேர்க் ஆகிய ஐந்து நிலையங்களில் இரண்டாவது தெரிவுப்போட்டி 11.12.2021 நடைபெற்றது. அதில் முதல் மூன்று நிலைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.
19.02.2022 சனிக்கிழமை 09:30 மணிக்குத் தமிழ்த்திறன் இறுதிப்போட்டி கிறேபெல்ட் நகரத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், நடுவர்கள், செயற்பாட்டாளர்கள் நிறைந்த மண்டபத்தில் மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கப்பட்டு, அகவணக்கம் செலுத்திய பின் தமிழாலய கீதமும் இசைக்கப்பட்டது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் மற்றும் தமிழ்த்திறன் பிரிவினர், கலந்துகொண்ட எல்லோரையும் வாழ்த்தி வரவேற்றுத் தமிழ்த்திறன் போட்டிக்கான அறிவுறுத்தல்களைப் பங்கேற்பவர்களுக்கு வழங்கி 11:00 மணிக்குப் போட்டிகள் தொடங்கப்பட்டன.

இறுதிப்போட்டியில் 51 தமிழாலயங்களிலிருந்து 250க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் 500க்கு
மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டார்கள். இவர்களை 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நடுவம் செய்து திறமையாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். போட்டிகளை நடாத்த 25க்கு மேற்பட்ட மாணவச் செயற்பாட்டாளர்கள் உறுதுணையாக நின்றனர்.

பங்கேற்ற ஒவ்வொரு மாணவருக்கும் பங்கேற்றமைக்கான பதக்கமும் சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இதில் பல மாணவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றமை அகத்தின் மகிழ்ச்சியை முகத்தில் காணக்கூடியதாக இருந்தது. இயற்கை இடையூறுகள் இருந்த நிலையிலும் போட்டிகள் திட்டமிட்டப்படி 17:30 மணிக்கு நிறைவுபெற்றன.

போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று நிலைகளைத் தட்டிச் செல்லும் மாணவர்களுக்குத் தமிழ்க் கல்விக் கழகத்தின் 32ஆவது அகவை நிறைவு விழாவில் வெற்றிக்கிண்ணமும் சான்றிதழும் வழங்கிப் பாராட்டப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.