கடுக்காய் வைத்தியர்!!


ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாகக் கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, மகன் என்று எல்லோரும் வைத்தியம் செய்து பிழைத்து வந்தனர். கடைசியில் ஒரு பேரன் அதைக் கவனிக்காமல் ஊர் சுற்றி வந்தான்.
பிறகு ஒருநாள் திருந்தி, நாமும் வைத்தியம் செய்து பிழைக்கலாமே என எண்ணி, பழைய மருந்துகளைத் தேடினான். கடுக்காய் மூட்டை ஒன்றுதான் கிடைத்து, இதை வைத்தேப் பிழைக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

ஒரு சமயம், இரண்டு பெண்டாட்டி கட்டிய ஒருவன் எப்போதும் மூத்தவளுடன் சண்டை போட்டான். மூத்தவள் இவனிடம் வந்தாள். இவன் யோசித்து, ‘இந்தா, எட்டுக் கடுக்காய். இதைக் கொண்டுபோய் நன்றாக அரைச்சு, உன் வீட்டுக்காரருக்குக் கொடுத்துப் பாரு’ என்று சொல்லி அனுப்பினான்.

என்ன செய்வது என்று கேட்க, அரைத்து உள்ளுக்குக் குடிக்கக் கொடுக்கச் சொன்னான்.

அவள் அப்படியே செய்தாள்.

அவள் கணவனுக்கு ஒரே பேதி நிற்காமல் போய்க் கொண்டிருந்தது. இளையவள் பார்த்தாள். துர்நாற்றம் தாங்கவில்லை. நம்மால் இதைச் சகிக்க முடியாது என்று போய்விட்டாள்.

மூத்தவள் அவன் உடனிருந்து வேண்டிய உதவிகள் செய்து காப்பாற்றினாள். ஆகவே அவனுக்கு மூத்தவள் மேல் பரிவும் பாசமும் ஏற்பட்டு அவளுடனேயே வாழ்ந்து வந்தான். இந்த செய்தி ஊருக்குள் பரவியது.

இன்னொரு சமயம், பக்கத்து ஊரில் ஒரு எருமை மாடு காணாமற் போய்விட்டது. மாட்டுக்குச் சொந்தக்காரன் அந்த வைத்தியனிடம் முறையிட்டான். அவனுக்கும் எட்டுக் கடுக்காயைக் கொடுத்து அரைச்சுக் குடிக்கும்படி சொன்னான். அவனும் அப்படியே செய்ததும் வயிற்றுப்போக்கு அதிகமாகியது. தாங்க முடியாமற் போகவே ஏரிக் கரையிலேயே உட்கார்ந்து விட்டான்.

அப்போது அவனது காணாமற்போன எருமை தண்ணிர் குடிக்க அங்கே வந்தது. அதைக் கண்டதும் மகிழ்ச்சியோடு பிடித்து வீட்டுக்குக் கொண்டு வந்தான். இந்தச் செய்தியும் ஊரில் பரவி, வைத்தியருக்குப் பெருமை சேர்த்தது.

மற்றொரு சமயம் பக்கத்து ஊர் அரசன் பட்டாளத்துடன் படையெடுத்து வந்தான். எல்லோரும் என்ன செய்வது என்று பயந்து இருந்தனர்.

கடுக்காய் வைத்தியரோ பத்துக் கடுக்காய்களை அரைத்துப் படைவீரர்களுக்குக் கொடுத்தான். அவ்வளவுதான், எல்லோருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

அரசன் பார்த்தான், ‘இந்த ஊரில் காலரா பரவுகிறது’ என்று பயந்து, சண்டை போடும் எண்ணத்தையேக் கை விட்டுவிட்டு அவ்வூரை விட்டேத் தனது படையுடன் திரும்பிப் போய்விட்டான்,

இப்படியாகப் பெயரும் புகழும் பரவிக் கடுக்காய் வைத்தியனுக்குப் பாராட்டுகள் குவிந்தன.

அவ்வூர் அரசனும் வைத்தியனை அழைத்துப் பாராட்டிக் கெளரவித்தான்.

இதைக் கேள்விப்பட்ட மற்றொரு வைத்தியர் இவரிடம் வந்து “உங்களுக்கு எப்படி வைத்திய ஞானம் வந்தது? இவ்வளவு குறுகிய காலத்தில் பெயரும் புகழும் கிடைத்தது?” என்று கேட்டார்.

கடுக்காய் வைத்தியர் சொன்னார்;

‘இளம் பெண்டாட்டிக்காரனுக்கும் எட்டுக்கடுக்காய், எருமை கெட்டவனுக்கும் எட்டுக் கடுக்காய், படை எடுத்த மன்னனுக்குப் பத்து கடுக்காய்’ என்று தனக்குப் புகழ் வந்த விதம் அவ்வளவுதான் என்று தன் கதையைக் கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.