வரலாற்று சாதனை படைத்த ரபேல் நடால்!!


ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

35 வயதான ரபேல் நடால், வென்ற 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதன்மூலம் டென்னிஸ் வரலாற்றில் 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரபேல் நடால் படைத்தார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலும், இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-2 என டேனில் மெட்வேடவ் எளிதாக கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், டேனில் மெட்வேடவ்வுக்கு ரபேல் நடால் கடும் நெருக்கடி கொடுத்தார்.

இதனால் செட் டை பிரேக் வரை நீடித்தது. இதிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய டேனில் மெட்வேடவ், 7-6 என செட்டை கைப்பற்றினார்.

இன்னமும் ஒரு செட்டை இழந்தால் வெற்றி பறிபோகும் என்ற அச்சத்தில் மூன்றாவது செட்டை எதிர்கொண்ட நடால், 6-4 என செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நடால், நான்காவது செட்டையும் 6-4 என கைப்பற்றி அசத்தினார்.

இருவரும் தலா இரண்டு செட்டுகளை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இதில் தனது அனுபவத்தை சிறப்பாக கையாண்ட நடால், அரங்கத்தில் குழுமியிருந்த இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நான்கு மணிநேர போராட்டத்தை 7-5 என முடிவுக்கு கொண்டுவந்து சம்பியன் கிண்ணத்தை வென்றார்.

நடால், இறுதியாக 2009ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்றிருந்தார். இது அவரது இரண்டாவது அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டமாகும்.

21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை பதிவு செய்த நடாலுக்கு சக வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பெடரர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், உங்களது அசாத்தியமான பணி நெறிமுறை, அர்ப்பணிப்பு மற்றும் போராடும் குணம் எனக்கும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற பிறருக்கும் உத்வேகமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், ஜோகோவிச் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அற்புதமான சாதனை. உங்களின் போராட்டக் குணம் மற்றொரு முறை வெற்றி பெற்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.