உயர்ந்த எண்ணங்களே உயர்வை அளிக்கும்!

 


எண்ணுவது உயர்வாக இருந்தால்

நம் வாழ்க்கை வளமானதாகவும

அழகிய வண்ணமானதாகவும்

அமையும்...

வாழ்க்கையைக் கற்றுக் கொள்வதில்
குழந்தை போல் இருக்க வேண்டும்...
குழந்தைக்கு அவமானம் வெகுமானம்
எதுவும் தெரியாது ...

விழுந்தவுடன் எழுந்து
திரும்பவும் நடப்பது போல
நிறைவான வாழ்க்கை என்பது
இன்பத்தை மட்டும் எண்ணாது
துன்பத்தையும் ஏற்றுக்கொண்டு
எதார்த்தமாக வாழ்வதே...

ஆசைப்படுவதற்குத் தகுதி
தேவையில்லை
அடைவதற்கான தகுதியை
உருவாக்கிக் கொள்...

தயங்கும் இடம் மட்டுமே
தடைகளாகத் தெரியும்...
துணியும் இடமெல்லாம்
தூசிகளாய்ப் போய்விடும்...

பிறரின் உணர்வுகளை
மதிப்பவன்
மனங்களையும் தொடுகிறான்...
மதிக்காதவன்
தன்னையேத் தொலைக்கிறான்...

தொடர்ந்து
முயன்று கொண்டே இருங்கள்...
முடியாதவை கூட,
முயற்சியின் தொடர்ச்சியினைத்
தாக்குப் பிடிக்காமல் ...
இலகுவாக முடிந்துவிடும்...

அவசரத்தில் தவறான முடிவை
எடுப்பதை விட
ஆற அமர, ஆலோசித்து
சரியான முடிவை எடுக்கலாம்...

பிறரை எதிர்க்கும்
ஆற்றல் இருந்தாலும்
பிழைகளைப் பொறுத்து
அதனை மாற்றிக் கொண்டால்
வாழ்க்கை வசந்தமாயிடும்...

சூழ்நிலைகளை விளக்கிக் கூறி
நேரத்தை வீணடிக்க வேண்டாம்
நம்மைப் புரிந்தவருக்குத்
தானாகப் புரியும்...
புரியாதவருக்கு எப்போதும்
புரியப் போவதில்லை...

எல்லாம் தெரியும் என்று
சொல்பவர்களை விட
என்னால் முடியும் என்று
முயற்சித்தவர்களே
எதையும் சாதித்திருக்கிறார்கள்...
என்பதை மறந்து விடாதே...

மனம் திறந்து பேசுங்கள்
மனிதர்களோடு நன்றாகப் பழகுங்கள்...
மன நிறைவான வாழ்க்கைக்கு
நல்வழி கிடைக்கும்...

விட்டுக் கொடுப்பது
வாழ்க்கைக்கு நல்லது...
விடாமல் முயற்சிப்பது
வாழ்வதற்கு நல்லது...

உறவுகள் படர்வதற்கு
நல் மனங்களை தேடி வைத்தால்
தொடர்ந்து வருகின்ற துயரங்கள்...
தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடும்...

வெற்றிக்காகப் போராடும் போது
வீண் முயற்சி என்பவர்கள்
வெற்றிக்குப் பின்பு,
விடாமுயற்சி என்பார்கள்...

வண்ணம் இல்லையென்றால்
வானவில்லுக்கு அழகில்லை
நல்ல எண்ணம் இல்லையென்றால்
நம் நவாழ்க்கைக்குப் பயனில்லை...

                                              நன்றி முத்துக்கமலம் பன்னாட்டு 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.