நம் பாரதமே...!


பழமைமிக்க பாரதத்தைப்

பார்புகழும் நாடதனை
நமதென்றே நாமறியச் செய்தார் - இதைப்
பாமரரும் தாமுணர வைத்தார்.

வழமைமிக்க பாரதத்தில்
வந்தவர்கள் கொள்ளைகொளும்
வகைமையினைப் பாக்களுக்குள் வைத்தார் - ஒரு
வழியறியா மானிடரை வைதார்.

முழங்கவந்த பாரதியார்
முழுதுமாக மக்களுக்கு
நமதுநாடு என்பதனை உணர்த்தி - அதன்
வரலாற்றை உணர்த்தினார் முன் நிறுத்தி.

பழங்கால பாரதத்தின்
சரித்திரத்தைப் படித்துணர்ந்து
தேர்ச்சிகொள அறிவுறுத்தி நின்றார் - அதன்
திறமையினை வலிமையினைச் சொன்னார்.

பாருக்குள் நல்லநாடு
பாரதம் என்றுணர்த்த
பழங்கதைகள் வரலாறாய்ச் சொன்னார் - அதைப்
படித்தவர்கள் இறுமாந்து நின்றார்.

வேருக்குள் விருட்சத்தின்
விதையுயிராய்ப் பாரதத்து
வீரவர லாற்றறிவை விதைத்தார் - அதை
வெறும்பேச்சாம் என்போர்முன் பதைத்தார்.

நீருக்குள் மூன்று திசை
நித்திலமாம் தீபகற்பப்
பாரதத்தின் சரித்திரமோ இனிது - நித்தம்
படித்தறியப் பார்த்துணர்வார் புதிது

சீரெனவே ஆன்மிகமும்
திலகமெனப் பல மொழியும்
பாரதத்தின் கண்களெனப் பார்ப்பாய் - என்ற
பாரதியின் மொழிமனதில் சேர்ப்பார்.

இதிகாசம் புராணங்கள்
ஈரிரண்டு வேதங்கள்
எல்லாமே நம்நாட்டின் பெருமை - அதனை
என்றும்நாம் உணர்ந்தாலே அருமை.

அதிசயமாம் கோவில்கள்
ஆண்டவனின் அருங்கதைகள்
அத்தனையும் நம்நாட்டுப் புதையல் - அறிய
ஆர்த்தெழுமாம் புத்தம்புது விடியல்.

விதிவந்தால் சாகும்முன்
வெந்ததையே தின்றுவுடல்
வீணாக வளர்ப்பதென்ன பிறவி - நாட்டின்
வீரவர லாறுபடி துருவி.

நதிக்கரையின் நாகரிகம்
நன்றாக வளர்ந்தமுதல்
நாடுநம் பாரதமே உலகில் - இதை
நாமுணர்ந்தால் நாடுயரும் விரைவில்.
பதியெனவே தலைமைகொளும்
பாரதமே வையகத்து
நிதியாகும் என்றுலகம் ஏற்கும் - அதன்
நிறை சரித்திரத் தேர்ச்சிகொளப் பார்க்கும்.

                                     நன்றி முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ் 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.