கடலில் நடக்கும் மரணங்களக்கு கடற்படையே காரணம் என்கிறார் சார்ள்ஸ் எம்பி.!!

 


இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகளால் கடிதங்கள் கொடுத்ததன் பிற்பாடுதான் கடலில் இறப்புக்கள் நடைபெறுகிறது. இது இலங்கை அரசாங்கத்தின் ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.


வவுனியாவில் நேற்று (07) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


இந்தியா பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதிகார பகிர்வு வேண்டும் என்று தமிழ் கட்சிகளால் கொடுக்கப்பட்ட கடிதங்களின் பின்னணியில் சம்பவங்கள் தற்போது  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கிறது.  இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆகவே கடிதம் கொடுத்ததன் பிற்பாடு இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையில் ஒரு அழுத்தத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கியது இந்தியா. இந்தியாவுக்கு பொறுப்பு இருக்கிறது.


எங்களுடைய தாய்நாடு இந்தியா, ஆகவே இலங்கையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எல்லா பிரதிநிதிகளும் இணைந்து ஒரு விடயத்தை முன்வைக்கின்ற போது அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரு கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கிறது. 


ஆனால் தற்போது தமிழ்நாட்டையும், இலங்கை தமிழர்களையும்  முரண்படுகின்ற வகையில் இலங்கை அரசாங்கம் தந்திரோபாய திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அதாவது வடபகுதியில் இருக்கின்ற மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் தற்போது ஒரு முரண்பட்ட நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது.


இலங்கை அரசாங்கம்  இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய மக்களை தங்களுடைய சொந்த நிலங்களில், சொந்த கடலில் மீன் பிடிப்பதற்கு ஏற்ற நிலைமையை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. 


ஆனால் தற்போது  வடக்கு கடலில், இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் முரண்பட்டு மரணிக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது. 


அண்மையில் நான்கு உயிர்கள்  பறிபோயிருக்கிறது.  இதில் சந்தேகம் இருக்கிறது. இந்திய பிரதமருக்கு கடிதங்கள் கொடுத்ததன் பிற்பாடுதான் இந்த சம்பவங்கள் கடலில் நடைபெறுகிறது. ஆனால் கடலில் இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சண்டை பிடித்தார்கள் என்பதற்கு எந்த விதமான ஒரு ஆதாரமும் இல்லை. ஆனால் அவர்கள் இறக்கிறார்கள். எப்படி  இறக்கிறார்கள்? 


என்னை பொறுத்தவரையில், இது இலங்கை அரசாங்கத்தினுடைய ஒரு ராஜதந்திர நகர்வாக கடற்படையினுடைய செயற்பாடாக இருக்க வேண்டும். 


இலங்கை மீனவர்கள் சிறு படகில் இரண்டு பேர் செல்வார்கள். அவர்களை கொன்று கடலில் போட்டால் அவர்கள் தற்போது இருக்கின்ற நிலைமைக்கு என்ன நினைப்பார்கள்? இந்திய இழுவை படகில் வந்தவர்கள் தான் இவர்களை கொன்றிருக்கிறார்கள் என்றே எண்ணுவார்கள்.

அதே நேரத்தில் இந்திய மீனவர்களை சிறு படகில் சென்று தாக்கினால் இலங்கை மீனவர்கள் தமிழர்கள்தான் தாக்குகிறார்கள் என்ற ஒரு செய்தியையும் ராஜதந்திர ரீதியாக இலங்கை அரசாங்கம் கொண்டு வரும்.  

இலங்கை  கடற்படைதான் இந்த சம்பவங்களை பின்னிருந்து நடைமுறைப்படுத்திவிட்டு தமிழர்களுக்கு ஆதரவாய் இருக்கிற தமிழ்நாட்டையும், இந்தியாவையும் ஒரு முரண்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை மத்திய அரசாங்கத்துக்கு வழங்குகின்ற அழுத்தத்தை தவிர்க்க முடியும் என எண்ணியே இவை நடைபெறுகின்றது என மேலும் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.