வவுனியாவுடன் அனுராதபுரத்தின் இரு கிராமங்களை இணைக்க முயற்சி!


 அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஈரப்பெரியகுளத்திலுள்ள மண்டபமொன்றில் சிரதம்பரபுரம் கோமரசன்குளம் மதுராநகர் கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொருளாதார நெருக்கடிகளினால் ஒப்பந்தக்காரர்கள் தாம் எடுத்த ஒப்பந்தங்களை முடிவுறுத்த முடியாதுள்ளனர். இவற்றுக்கு சீமெந்து பொருட்களின் விலையேற்றம் உட்பட கட்டட பொருட்களின் விலையேற்றம் காரணமாக உள்ளது.

அத்துடன் மக்கள் யுத்த காலத்தினை போன்று பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இதற்கு நாட்டின் ஜனாதிபதியும், அமைச்சரவையும் எடுக்கும் தவறான கொள்கையே காரணமாக இருக்கின்றது. இதனால் மக்கள் மிகப்பெரும் சவாலான வாழ்க்கைக்கு உட்பட்டிருக்கின்றனர்.

2015 இல் இருந்து 2019 வரையும் வடக்கு கிழக்கில் இடம்பெறவிருந்த சிங்கள குடியேற்றங்களை நாம் தடுத்து நிறுத்தியிருந்தோம். எனினும் 2019 நவம்பர் மாத்திற்கு பிற்பாடு வட மாகாணத்தில் வவுனியா முல்லைத்தீவில் தென் பகுதியில் இருந்து சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டு வருகின்றனர். வடக்கில் தமிழர்களின் விகிதாரசாரத்தினை மாற்றியமைப்பதற்காக இது மிக தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

இந்த குடியேற்றத்தினை இரண்டு வகையாக மேற்கொள்கின்றனர். அதாவது இங்குள்ள அரச காணிகளில் தென்பகுதியில் இருந்து கொண்டு வந்து குடியெற்றுவது மற்றையது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு அனுராதபுரம் மாவட்டத்துடன் உள்ள கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதாக உள்ளது.

அண்மையில் போகஸ்வௌ கிராமத்திற்கு ஜனாதிபதி வந்தபோது திட்டமிட்டு கெப்பிட்டிகொல்லாவையில் உள்ள கிராமத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு செல்வது கடினம் எனவும் வவுனியா நகரத்திற்கு செல்வது இலகு என்பதால் தமது கிராமங்களை வவுனியாவுடன் இணைத்து விடுமாறு பிரதேசசபை உறுப்பினரொருவரால் கூறப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் அண்மையில் வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் அனுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவ பிரதேச செயலகத்தின் கனகவௌ என்ற கிராம சேவகர் பிரிவையும் பதவிய பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கம்பெலிய என்ற கிராம சேவகர் பிரிவையும் முழுமையாக வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதற்கான அனுமதி பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிராக நாம் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல்கொடுத்து வருகின்றோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.