"என்னை புலி எனக் கூறுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" – சாணக்கியன்!!


சர்வதேசத்துடன் எவ்வாறு கதைப்பதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்இ "இன்று நாட்டில் சுகாதார பணியாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் அதேநேரம் பொது வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

நான் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்தபோது முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சில காணொளிகளைப் பார்த்தேன்.


இதில் ஒன்றில்இ ஹிட்லரைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி செய்ய வேண்டும் என்றுக் கூட ஒருசிலர் கூறியிருந்தனர். உண்மையில்இ இன்று ஹிட்லரைப் போன்றுதான் ஜனாதிபதி ஆட்சி நடத்தி வருகிறார். ஹிட்லர் தனது கடைசி காலத்தில் ஜேர்மானியர்கள் எத்தனைப் பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று தனது கொள்கையை செயற்படுத்தி வந்தார். அதேபோன்றுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செயற்பட்டு வருகிறார். ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் ஒவ்வொருவராக வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள்.


 

இன்று நாட்டில் நீதிக்கு என்ன நடந்தது எனும் கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் இன்று பொருளாதார யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி உள்ளிட்ட பொதஜன பெரமுனவினர் தோல்வியடைந்து வருகிறார்கள்.


எனவே இனியும் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம். கொரோனாவினால் பல உயிர்களை நாம் இழந்துவிட்டோம். இந்த நிலையில் உணவின்றியும் மக்களின் உயிர்களை பறிக்க வேண்டாம் நாம் இவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

 

நாட்டின் பொருளாதாரத்தை முதலில் உயர்த்த நடவடிக்கை எடுக்கவும். பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாத தரப்பிடம் இந்த நாடு இன்று சிக்குண்டுள்ளது.

 

மலையக மக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை மாவை பெற்றுக் கொடுப்பதாக அரசாங்கம் கூறியது. ஆனால் அவர்களுக்கு கோதுமை மா கிடைக்கவில்லை என செய்திகளின் ஊடாக நாம் அவதானித்தோம். இவை தான் நாட்டில் நடக்கின.



அத்தோடுஇ கருப்புப் பணத்தைக் கொண்டு வடகொரியாவிடமிருந்து ஆயுதம் வாங்கியதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். சரியாயின் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்.

வடகொரியா என்பது பொருளாதாரத் தடைக்குட்பட்ட நாடாகும். இந்த நாட்டிலிருந்து எவ்வாறு கருப்புப் பணத்தை கொடுத்து ஆயுதம் வாங்க முடியும்?


விவசாய அமைச்சரோ பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது யாருடைய பணம்?

 

விவசாயிகளுக்கு உரத்தை வழங்கியிருந்தால் அவர்கள் சீராக அவர்களின் வாழ்க்கையை கொண்டு சென்றிருப்பார்கள். அதனைவிடுத்து மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இவ்வாறு செய்வது சரியா? இதுதொடர்பாக அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

 

வடக்கில் இன்று மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக அங்கு போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

அண்மையில் இந்திய மீனவர்களின் படகு மோதுண்டு இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்கள் உயிரிழந்தார்கள்.

 

ஆனால் கடற்றொழில் அமைச்சருக்கு இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண முடியாமல் உள்ளது. யாழில் கடலில் இருந்து கண் பார்வைக்கு எட்டியத் தூரத்தில் இந்திய மீனவர்கள் மீட்பிடித்தும் அவர்களை கைது செய்ய முடியாதுள்ளது.


 

மேலும்இ உயர்தர பரீட்சை நடக்கும் நிலையில்இ நாட்டில் மின்சாரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குப்பி விளக்குளை வைத்தே மாணவர்கள் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கிறார்கள்.


 

இதிலிருந்தே இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்பது உறுதியாகிவிட்டது. சுதந்திரத் தினத்தன்றுஇ பல இலட்சம் ரூபாயை செலவழித்து அணிவகுப்புக்களை அரசாங்கம் நடத்தியது.

இது தேவையற்ற ஒன்றாகும். இந்தப் பணத்தை ஓய்வூதியம் பெறுவோருக்கு பகிர்ந்தளித்திருக்கலாம். மக்களின் வரிப்பணத்தால் இவ்வாறு ஆடம்பரமான செயற்பாடுகள் மேற்கொள்வதை நிறுத்தியிருக்கலாம்.


 

அதேபோல் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களாக 25 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கென தனியான வாகனங்கள்இ வாகனங்களுக்கான எரிப்பொருள் என அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால்இ இவர்களோ தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அபிவிருத்தி சார் விடயங்களை கொடுக்கிறார்கள். விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறு தான் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. தங்களுக்கு நெருக்கமானவர்களை மகிழ்விக்கவே மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இதுதான் இன்று நாட்டின் நிலைமை. அத்தோடுஇ நாம் சர்வதேசத்துடன் ஒன்றித்து பயணித்தால் மட்டுமே முன்னேற்றகரமான நாட்டை கட்டியெழுப்ப முடியும்.


 

சர்வதேசத்துடன் எவ்வாறு கதைப்பதென்றுஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

 

நீதியமைச்சர் அலி சப்ரி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் சர்வதேசத்துடன் ஒன்றித்து செயற்பட முடியாது. இதன் ஊடாக ஐ.நா.வுக்கு பதில் வழங்க முடியாது. 

 

யாழிற்கு சென்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று நீதியமைச்சர் கூறியுள்ளார். 2009 இல் இருந்து தாய் மார் போராடுவது இந்த ஒரு இலட்சம் ரூபாய்க்காக அல்ல என்பதை அரசாங்கத்தரப்பினர் புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று தான் அவர்கள் கோருகிறார்கள். இது அவர்களின் உரிமையாகும்.

இதற்கு பதில் வழங்காமல்இ யாழுக்குச் சென்று ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்துவதால் சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வொன்று கிடைத்துவிடாது.

 

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாயின் சரியான முறையில் அதனைக் கையாள வேண்டும். அதேநேரம்இ பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட எத்தனை தமிழ்- முஸ்லிம் இளைஞர்கள் இன்னமும் சிறையில் வாடுகிறார்கள்?

 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுவித்தமையால் சர்வதேசத்தை ஏமாற்றிவிடலாம் என நினைக்கக்கூடாது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்பவர் தனி ஒரு நபர். அவருக்காக பல சட்டத்தரணிகள் வாதாடினார்கள். இன்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

ஆனால்இ ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவைப் போன்று எத்தனையோ பேர்இ இன்னமும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் வெளிஉலகிற்கு தெரியாது.

 

இந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போராட்டமொன்றையும் ஆரம்பித்துள்ளது.

இந்தச் சட்டமானது எதிர்க்காலத்தில் நிச்சயமாக சிங்கள மக்களையும் பாதிக்கும். இதனை மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

 

இன்னும் 6 மாதங்களில் நாட்டில் பஞ்சம் ஏற்படும். இதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலைமை வரும்போது அரசாங்கம் அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிச்சயமாக பிரயோகிக்கும்.

பயங்கரவாத் தடைச்சட்டத்திற்கு எதிராக சட்டத்தரணி அம்பிகா சற்குணராஜா கடிதமொன்றை எழுதியவுடன்இ வெளிவிவகார அமைச்சு அதற்கு எதிரான அறிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

முதலில் இந்த விமர்சனத்தை நேர்மறையாக கையாள வேண்டும். இவ்வாறு செயற்படுவதன் ஊடாக மட்டுமே சர்வதேசத்துடன் நட்புறவுடன் நாம் பயணிக்க முடியும்.

 

அரசாங்கம் சரியான பாதையில் பயணித்தால் நாமும் அதற்கு ஒத்துழைக்க தயாராகவே இருக்கிறோம். தொல்லியல் இடங்கள் எனும் போர்வையில் எமது காணிகள் அபகரிக்கப்படுகின்றன. நாம் காலம் காலமாக வழிபட்டுவந்த குருந்தூர் மலை அபகரிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு எதிராகத் தான் நாம் குரல் கொடுக்கிறோம்.

 

நாம் அரசாங்கத்திடம் கோருவது மிகவும் நியாயமான கோரிக்கைகளாகும். நாம் எந்தக் காரணம் கொண்டும் இன்னொரு நாட்டைக் கோரவில்லை. இலங்கையை பிரித்துத் தர வேண்டும் என்றுக் கோரவில்லை.

மாறாக பிரிக்கப்படாத ஒரு நாட்டுக்குள் எமது அடிப்படை உரிமைகளையே நாம் கோருகிறோம். இதனை அரசாங்கம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.' எனத் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை இரா.சாணக்கியன் உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஆளும் தரப்பிலிருந்த சில உறுப்பினர்கள் "புலி, புலி" என கோசமிட்டிருந்தனர்.

 

இதற்கு பதில் வழங்கிய இரா.சாணக்கியன் " என்னை புலி எனக் கூறுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" எனவும் குறிப்பிட்டிருந்தார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.