பக்தர்கள் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி!


 கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்களும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கை பக்தர்கள் 500 பேர் மாத்திரம் கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்க யாழ். மாவட்ட செயலகத்தில் கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் தமிழக பக்தர்களுக்கும் திருவிழாவில் பங்கேற்க அனுமதியளிக்குமாறு தமிழக அரசாங்கம் சார்பில் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இந்த நிலையிலேயே இரு நாட்டு பக்தர்களும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.இந்நிலையில் கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இரு நாட்டு பக்தர்களும் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.