நீர்த்துப்_போன கனவுப்பூக்கள் - தூரா.துளசிதாசன்!!

 


எங்கும் அமைதி நிலவியது

மலைக்குன்றின் மீதேறி

இமைக்கதவை தாழ்பாளிட்டு 

நிசப்தத்தின் நிழலில்

அயர்ந்து தனிமையில்

தூங்கிக்கொண்டிருந்தது மனம்.. 

திடீரென திடுக்கிட்டு 

விழித்து சுற்றும் முற்றும் 

வெறித்துப் பார்த்தது.. 

எங்கோ மூலையில் 

ஒலித்துக் கொண்டிருந்த 

எண்பதின் கீதங்களை 

சுமந்து வந்தது 

காற்றின் கரங்கள்..

ஒற்றை ரோஜாவின் 

வாசனையை திரும்பவும் 

மனதின் மூலைமுடுக்குகளில் 

அள்ளித் தெளித்தது தென்றல்.. 

பேருந்தின் ஜன்னலோர 

இருக்கையில் பயணமானது 

மனம்... !

இளையராஜாவின் இசையில் 

மயிலிறகாய்  மனதை 

மெதுவாய் வருடியது 

எஸ்பிபி-யின் குரலோசை.. !

பச்சைபசும் நெல்வயல்களில் 

கரிச்சான் குருவிகள் 

காதல் மொழி பேசிட ,

ஒத்தையடி புல்வெளிப் பாதையில் 

பாவாடை தாவணி அணிந்த 

பருவ மயில்கள் நடனமாடின... 

மஞ்சள் பைகளை 

சுமந்தவாறு நடைபழகின

தத்தைகள்..

காதல் சமிக்ஞைகளை 

தூது அனுப்பி 

பின் தொடர்ந்தன 

இளவட்ட குயில்கள் ...!

சொர்க்கத்தின் வாசலை திறந்திடும் சொர்ணலதாவின் குரலில் 

சொக்கிப் போனது மனது.. 

ஆலமரத்தடியில் பேருந்திற்காக 

காத்திருந்த ஆதவன் ,

அவனைக் கண்டதும் 

இதயத்தின் ஆழ்ப்பகுதியில் 

மையம் கொண்டது 

நிலநடுக்கம்...!

இதயத்தின் படபடப்பை 

இமைகள் காட்டிக்கொடுத்தன..

பாதங்கள் மெதுமெதுவாய் 

அவனை நோக்கி நகர்ந்தது.. 

மையப்புள்ளி இன்னும் ஆழமானது.. ஓரப்பார்வை எனும் 

குளிர்ந்த நீர்த்துளியை 

வீசியெறிந்தன அவனது 

விழிகள்.. 

இயல்பு நிலைக்கு 

திரும்பியது  மனம்...!

கருவிழிகள் அங்குமிங்குமாய்

படமெடுத்தன அவனது உருவத்தை.. 

ஈர்க்கும் விழிகள்..

இதயத்தை களவாடும் பார்வை..

மனதை வசீயமாக்கும் பேச்சு..

அவனை வர்ணித்தால்

வார்த்தைகளும் சற்று மயங்கும்

தீரா காதல் கொண்டு.... 

எழுதப்படாத கவிதையாம் 

ஆணின் வெட்கத்தை 

என் விழிகள் 

வாசிக்கும் பொழுதே 

சிவந்தது அவனது முகம் 

செவ்வானமாய்...!

"அம்மா எங்கே இருக்கிறாய்? "

விளையாட சென்ற 

மகனின் குரல் வீச்சு 

சமையலறையை நோக்கி விரைந்தது முகத்தோடு சேர்ந்து 

இதயமும் முகமூடி 

அணிந்து கொள்ள 

புதிய பாதையில் 

பயணித்தது மனசு...!  

                        (பயணம் தொடரும்....)

             தூரா.துளசிதாசன்

                  தூத்துக்குடிTamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.