நிதி அமைச்சரை விசாரணை செய்ய வேண்டும் – இரா.சாணக்கியன்!!
நிதி அமைச்சர் வடகொரியாவில் இருந்து கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியதாகச் சொல்லுகின்றார். இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இன்று மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்று சொல்லி ஒரு கூட்டம் இங்கு இடம்பெற்றது. மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் எதுவும் இக்கூட்டத்தில் ஆராயப்படவில்லை. அதற்குக் காரணமாக நிதி இல்லை என்று சொல்லப்படுகின்றது.
அண்மையில் நீதியமைச்சர் வடக்கிற்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இதில் காணாமல் போனவர்களின் விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. உண்மையில் இந்த உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. காணாமல் போனவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு இலட்சம் ரூபாய்க்காக தாய்மார் இன்று வரை வீதியில் போராடவில்லை என்பதையும் அவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அத்துடன் நேற்றைய செய்தியில் பார்த்திருந்தேன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தாங்கள் வடகொறியாவில் இருந்து கறுப்பு டொலர்களைப் பயன்படுத்தி யுத்தத்திற்கு ஆயுதங்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஒரு நாட்டின் நிதி அமைச்சர் அவர்கள் எவ்வாறு இவ்வாறானதொரு கருத்தைச் சொல்ல முடியும்.
பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒருநாட்டில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆயுதம் வாங்கி இந்த யுத்தத்தை நடாத்தியதாகச் சொல்லுகின்றார்கள். இனிவரும் காலங்களில் இன்னும் இன்னும் எத்தனை உண்மைகளை நாங்கள் அறியக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை.
நீதி அமைச்சர் சொல்லுகின்றார் காணாமல் போனாருக்கு நட்டஈடு கொடுப்பதாக, அதே நேரத்தில் நிதி அமைச்சர் வடகொரியாவில் இருந்து கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியதாகச் சொல்லுகின்றார். இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை செய்ய வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் இதனைக் கவனிக்க வேண்டும்.
தொடர்ந்தும் இந்த அரசாங்கம் இவ்வாறு ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற விடயங்களை வன்;மையாகக் கண்டிக்க வேண்டும்.எமது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சொன்னார் பொங்கலுக்குப் பிறகு எமது மாவட்டத்தில் பல மில்லியனர்கள் உருவாகுவார்கள் என்று. ஆனால் இன்று மாவட்டத்தில் உருவான ஒரு மில்லினர் கூட இல்லை. இன்று மாவட்ட விவசாயிகள் எல்லாம் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று இந்தக் கூட்டத்தில் கூட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதைக் கூட நாங்களே முன்வைக்க வேண்டி இருக்கின்றது.
அதே நேரத்தில் இன்று ஒமிக்கறோன் மட்டக்களப்பில் அதிகமாக இருக்கும் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அப்படியான ஒரு நேரத்தில் அவசரமாக இந்தக் கூட்டம் எதற்காக? இன்று முக்கியமானவர்கள் பலரை இந்தக் கூட்டத்திற்கு அழைக்கவும் இல்லை.
வழமையாகப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று அதில் தீர்மானிக்கும் விடயங்களை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கொண்டு வருவதுதான் வழமை. ஆனால் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடந்திருக்கின்றது. பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நாளையும் இனிவரும் காலங்களிலும் நடக்க இருக்கின்றன. இவ்வாறானதொரு குழப்ப நிலை இந்த மாவட்டத்தில் இருக்கின்றது.
கூட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் கதைக்க வேண்டும் என்றால் கையை உயர்த்திக் கதைக்க வேண்டுமாம். இது சந்திரகாந்தன் அவர்களின் பிறந்தநாள் விழா அல்ல நாங்கள் கையை உயர்த்திவிட்டுக் கதைப்பதற்கு.
இன்று இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பல விடயங்களுக்குத் தீர்வுகளைத் தருவதாகச் சொல்லியிருந்தார். விசேடமாக ஐ புரொஜக்ட் நிதியினை வைத்திருக்கும் நபரிடமிருந்து அந்த நிதியை மீள எடுத்து அந்தத் திட்டத்திற்கு வழங்குவதற்கான அனுமதியை அவர் வழங்கியிருந்தார். அதேவேளை கெவிலியாமடுவில் இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு நாங்கள் விலியுறுத்தயிருந்தோம். அம்பிட்டிய சுமணரத்தின தேரர் எமது பண்ணையாளர்களின் மாடுகளை வலுக்;கட்டாயமாகப் பறித்தமை தொடர்பிலும் நாங்கள் தெரியப்படுத்தியிருந்தோம்.
இன்று இந்த நாட்டிலே ஜனாதிபதிக்கும் அறிவில்லை, நிதியமைச்சருக்கும் அறிவில்லை, அவர்களின் பிரதிநிதிகளாக எமது மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு அறிவில்லை என்ற நிலைமையே இருக்கின்றது.” என தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை