குருந்தூர் மலைக்குச் செல்லவுள்ளதாக சுமந்திரன் தெரிவிப்பு!
முல்லைத்தீவில் உள்ள குருந்தூர் மலைக்கு செல்ல தடையேதும் இல்லை என உச்ச நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த விடயங்கள் தொடர்பில் பரிசீலிக்க நாளை குருந்தூர் மலைக்கு செல்லவுள்ளதாகவும் தடுத்தால் எதிர்கொள்வோம் எனவும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் 03.02.2022 இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாளைய தினம் இலங்கை சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படுகின்ற நாளில் இருந்து 75 ஆவது ஆண்டிற்குள் இந்த நாடு காலடி எடுத்து வைக்கிறது 74 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் தலைநகரிலேயும் வேறுபல இடங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
மக்கள் உணவில்லாமல் பட்டினியை எதிர்நோக்கியுள்ள இந்த கால கட்டத்திலே கடந்த சில நாட்களாக கொழும்பிலே ஜெட் விமானங்கள் பறந்து திரிந்து நாளைய அணிவகுப்பிற்கு எண்ணெயை விரையமாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். நாளைய தினம் விமர்சையாக சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கின்றார்கள்.
தமிழ் மக்களை பொறுத்த வரையிலே ஆரம்பத்திலிருந்தே மேற்கு ஆட்சியாளர்களிடமிருந்து இலங்கைக்கு கொடுத்ததாக சொல்லப்படுகின்ற சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த நாட்டிலே எண்ணிக்கையிலே பெரும்பான்மையாக இருப்பவர்கள் தான் ஜனநாயம் என்ற போர்வையிலே இந்த நாட்டை ஆண்டு வருகின்றார்கள்.பெரும்பான்மை ஆட்சி ஜனாதிபதியின் சிறப்பியல்பு என்ற கூறினாலும் அது பேரினவாத ஆட்சியாக மாறுகின்ற போது அது ஜனநாயகத்தின் பண்பியல்புகள் அனைத்தையும் இழந்துவிடுகின்றது. அப்பிடியான ஆட்சியொன்றைத்தான் 1948ஆம் ஆண்டிலிருந்தே நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்.
அதனால்தான் காலத்திற்கு காலம் நாங்கள் இந்த ஆட்சிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் அரச அதிகாரங்கள் அனைத்து மக்களோடும் சமமாக பங்கிடப்பட வேண்டும். அதற்கான ஒழுங்குமுறைகள் செய்யப்பட வேண்டும். சமஸ்டி முறையிலான ஒரு ஆட்சியிலே தான் அது செய்யப்பட முடியும் என்று எங்களுடைய கோரிக்கையை முன்வைத்து 1956 இம் ஆண்டிலிருந்த இன்று வரை அந்த சமஸ்டி கோரிக்கைக்கு குறையாக மக்கள் ஆணையைத்தான் தொடர்ச்சியாக எங்கள் மக்கள் கொடுத்து வந்திருக்கின்றார்கள்.
ஆனால் ஜனநாயக ரீதியாக மக்கள் கொடுக்கின்ற அந்த தீர்ப்புக்களை புறந்தள்ளி வெறுமனே ஒற்றையாட்சி முறையின் கீழே பெரும்பான்மை ஆட்சியின் மூலம் எங்களுடைய மக்களுடைய உரிமைகளை நசுக்குகின்ற, ஒடுக்குகின்ற, அடக்கியாழுகின்ற ஒரு முறைமையிலே தொடர்ந்து மாறிமாறி வந்திருக்கின்ற அரசாங்கங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த 75 அவது சுதந்திர வருடத்திற்குள்ளே இலங்கை காலடி எடுத்துவைகின்றது என்று சொல்லப்படுகின்ற அதே தினத்திலே எங்களுக்கு இந்த சுதந்திரத்திலே எந்தப்பங்கும் இல்லை தொடர்ச்சியாக எங்கள் சுதந்திரங்கள் உரிமைகள் ஒன்றன்பின் ஒன்றாக பறிக்கப்பட்டுதான் வந்திருக்கின்றன.
எங்களுடைய நிலங்கள் மிக மேசமான நிலையிலே துரிதமான முறையிலே பறிக்கப்படுகின்றன.நாங்கள் இந்த நாட்டிலே வாழ்கின்ற ஒரு மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழே மக்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள்.அப்படியான மக்களுக்க சுயநிர்ணய உரிமையுண்டு. தங்களடைய சரித்திர வாழ்விடங்களிலிலே தங்களை தாங்களே ஆழ்கின்ற கட்டமைப்பை பெற்றுக்கொள்வதற்கான உரித்து உண்டு.
அதை இல்லாது பண்ணுவதற்காக எங்களுடைய சரித்திர வாழ்விடங்களை மாற்றியமைக்கின்ற செயற்பாடு ஆரம்பகாலத்திலிருந்து நடந்துவந்தாலும் கடந்த சில வருடங்களாக துரிதப்படுத்தப்பட்டு மிகவும் வேகமான முறையிலே அமுல்படுத்தப்படுகின்றது. அதற்கு உதவியாக பல திணைக்களங்கள், தொல்லியல் திணைக்களம், மகாவலி, வனவள பாதுகபாப்பு, வன ஜீவராசிகள் என்று பலவிதமான திணைக்களங்கள் அதனுடைய விசேட சட்டங்களையும் பிரயோகிக்கின்றார்கள்.
திட்டமிட்ட நேரடியான சிங்கள குடியேற்றங்களுக்கு மேலதிகமாக இப்படியான ஒரு செயல்முறையினையும் அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது. இப்பொழுது தொல்லியல் திணைக்களம் இதிலே ஈடுபடுகின்ற போது புத்த சமயத்தை ஒட்டிய சின்னங்களை கண்டுபிடிப்பதாக பல இடங்களிலே வடக்கிலும் கிழக்கிலும் பாரிய வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். அதன் பிரதிபலனாக எங்களுடைய மக்கள் தங்களுடைய வழிபாட்டு உரிமைகளை இழந்து நிற்கின்றார்கள். பல இடங்களில் இதனைக் காணக்கூடியதாக உள்ளது.
வெடுக்குநாறி மலையிலே அவ்வாறன ஒரு சம்பவம் இடம்பெற்றது. குருந்தூர் மலையிலே ஒரு வருடத்திற்கு முன்னர் நீண்டகாலமாக வழிபட்டுவந்த இடத்திலே எங்கள் மக்கள் வழிபடாமல் தடுக்கப்படடுள்ளனர்.
ஆகவே நாளைய தினம் எங்களுடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றது. நாங்கள் சுதந்திரம் இல்லாத நாடடிலே வாழ்கின்றோம் என்பதை பெப்ரவரி 04 ஆம் திகதியே உலகத்திற்கு எடுத்துக்காட்டுகின்ற ஒரு நடவடிக்கையாக குருந்தூர் மலைக்கு அதிகாலையிலே செல்லவிருக்கின்றோம்.
இது சம்மந்தமாக ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்திலே நிலுவையிலே இருக்கின்றது. எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் இவர்கள் மூவரும் இதிலே மனுதாரர்களாக இருக்கிறார்கள் நான் அந்த வழக்கிலே ஆயராகின்றேன். அந்த வழக்கிலே பிரதிவாதியாக குறிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்திலே வந்து நாங்கள் அங்கே செல்வதற்கு தடையேதும் இல்லை என்று கூறியிருக்கின்றார்கள். ஆகையினாலே தடையேதும் இல்லையென்றால் நாங்கள் நாளை அங்கே செல்லவிருக்கின்றோம். செல்லுவதை யாராவது தடத்தால் அதை அந்த நேரத்திலே நாங்கள் எதிர்கொள்வோம்.
காலையிலே நாங்கள் சேர்ந்து அந்த இடத்திற்கு செல்வதென்று கடந்த 29ஆம் திகதி கிளிநொச்சியிலே பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் சேர்ந்து தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினர் நடத்திய கூட்டத்திலே தீர்மானம் எடுத்தோம்.
அதனைத் தொடர்ந்து நான் பத்திரிகையாளர் மாநாட்டிலே சொல்லுகின்ற போது நான் இந்த விபரங்களை கூறவில்லை. ஆனால் திடீர் திடீரென சில விடயங்களை அறிவிப்போம். அதற்கான காரணங்கள் உண்டு என்று நான் சொல்லியிருந்தேன்.
அதனைத் தொடர்ந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் 30ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற போது இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டு தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவும் இதிலே இணைந்து கொள்வதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
எனவே அனைவரும் சேர்ந்து நாளை இந்த செயற்பாட்டிலே ஈடுபடுவோம் என்று அழைப்பு விடுக்கின்றேன். இது நாங்கள் இப்போது அறிவித்தாலும் இதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்திலே வேறு ஒரு அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது.
காலை 10.00 மணிக்கு பின்னதாக முள்ளிவாய்க்காலிலே ஒரு எதிர்ப்பு போராட்டம் ஒன்று செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களோடும் நாங்கள் இணைந்து கொள்வோம். நாங்கள் மலைக்கு சென்று வந்து நாங்கள் அவர்களோடு சேர்ந்துவிடுவோம். அவர்களும் காலையிலே எங்களோடு வருகைதந்து இந்த நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று நம்புகின்றோம். நாங்கள் ஒன்றாக சேர்ந்து இந்த இரண்டு நடவடிக்கையிலும் நாளைய தினம் ஈடுபடுவதற்காக இருக்கின்றோம்.என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை