கர்ப்பிணி பெண் கொலை வழக்கும் – ஐந்தாண்டுகளின் பின்னான கைதும்

 


ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் , ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் குற்ற புலனாய்வு துறையினரின் விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் கடந்த மாதம்  2ஆம் திகதி புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி  ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் 7 மாத கர்ப்பிணியான பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு , அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.


இளம் குடும்பம். 
நெடுந்தீவு பகுதியை சேர்ந்த இளம் குடும்பத்தினரான இவர்கள்,  கணவர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றி வருவதனால் , ஊர்காவற்துறை பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் பிள்ளையும் உண்டு. 
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் அன்றைய தினம்  வழமை போன்று மனைவி , பிள்ளைகளை வீட்டில் விட்டு விட்டு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றுக்கு கடமைக்கு சென்று உள்ளார்.

தொலைபேசிக்கு பதில் இல்லை.
மனைவி கர்ப்பிணியாக இருப்பதனால் , மதிய வேளைகளில் மனைவியுடன் தொலைபேசியில் உரையாடுவதனை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார். அவ்வாறு அன்றைய தினமும் , மனைவிக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய வேளை தொலைபேசிக்கு பதில் இல்லாததால் அயலவர்களுடன் தொடர்பு கொண்டு மனைவி பற்றி விசாரித்து உள்ளார். 
அதனை அடுத்து அயலவர் வீட்டுக்கு சென்று பார்த்த வேளை அவரது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடைத்துள்ளார். அதனை கண்ணுற்ற அயலவர்கள் உடனடியாக கணவருக்கு அறிவித்ததுடன் காவல்துறையினருக்கும் தகவல்கள் தெரிவித்தனர்.

https://www.tamilarul.net/


அடித்தும் , வெட்டியும் படுகொலை செய்துள்ளனர். 
குறித்த பெண்ணை படுகொலை செய்த கொலையாளிகள் , பெண்ணின் தலையின் பின்புறத்தில் கட்டையால் பலமாக அடித்துள்ளனர். அத்துடன் கழுத்து பகுதியில் வெட்டியும் உள்ளனர். 

தடயங்களை அழிக்க முயற்சி.
பெண்ணை படுகொலை செய்யத பின்னர், தடயங்களை அழிக்கும் நோக்குடன் கொலையாளிகள் செயற்பட்டு உள்ளனர். இரத்தகறைகளை கழுவியும் உள்ளனர்.  பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

https://www.tamilarul.net/


சந்தேகநபர்களாக சகோதரர்கள் இருவர் கைது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் , கொலை இடம்பெற்ற அன்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர்கள் இரத்தகறை படிந்த ஆடைகளுடன் முச்சக்கர வண்டியில் , ஊர்காவற்துறை பக்கமாக இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி  பயணித்த வேளை மண்டைதீவு காவல்துறை காவலரணில் கடமையிலிருந்த காவல்துறையினரினால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.


கைதான சகோதரர்கள் இருவரும் , வாக்குமூலம் அளிக்கையில் சகோதரர் , விபத்துக்கு உள்ளானதாகவும் , அதனாலையே தமது ஆடையில் இரத்தகறை இருந்ததாகவும் தெரிவித்து இருந்தனர்.பின்னர் இருவரும் ஊர்காவற்துறை காவல்துறையினரினால், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.


சந்தேகநபர்கள் சம்பவ இடத்தில் இல்லை. 
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் சம்பவம் நடந்த தினத்தன்று சம்பவ இடத்தில் இருக்கவில்லை என சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன்  2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி நீதிமன்றில் தெரிவித்தார். .

https://www.tamilarul.net/


எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றார். 
அதன் போது சந்தேக நபர்கள் தரப்பு சட்டத்தரணி மன்றில் விண்ணபம் செய்த போது, கைது செய்யப்பட்டு உள்ள சந்தேக நபர்களில் ஒருவர் கொலை நடந்ததாக கூறப்படும் ஜனவரி  24ம் திகதி காலை 11.30 மணியளவில்,  சம்பவம் நடந்த ஊர்காவற்துறை பகுதியில் இருந்து சுமார் 30 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மருதனார்மடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்பி உள்ளார்.


அதற்கு ஆதாரமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவற்றை பெற்று விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். 

மற்றைய சந்தேகநபர் வேலணையில் நின்றார். 
அதேவேளை மற்றைய சந்தேக நபர்  சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் வேலணை பகுதியில் நின்று உள்ளார்.  அவர் வேலணை பகுதியில்  துவிச்சக்கர வண்டியில் விபத்துக்கு உள்ளாகி உள்ளார். அதனால் அவருக்கு இரத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அதற்காக வேலணையில் உள்ள மருத்துவ சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று உள்ளார். 

அதனை அங்கு சிகிச்சை அளித்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் உட்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதன் ஊடாகவும் அவர்களின் வாக்கு மூலங்களின் ஊடாகவும் அவற்றை உறுதிப் படுத்திக்கொள்ளலாம்.


தொலைபேசி அழைப்புக்களை விசாரிக்க வேண்டும். 

அத்துடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களின் தொலை பேசி அழைப்புகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் அவர்கள் தொலைபேசியில் உரையாடியதனை வைத்து அவர்கள் எந்த தொலைத்தொடர்பு கோபுர வலையத்தினுள் இருந்து உரையாடல்களை மேற்கொண்டார்கள் என்பதனை கண்டறிய முடியும்.


அதன் மூலம் அவர்கள் கொலை நடந்த நேரத்த்தை அண்மித்த நேரங்களில் எந்த பகுதியில் இருந்தார்கள் என்பதனை கண்டறிய முடியும். எனவே தொலை பேசி அழைப்புக்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றில் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார்.

https://www.tamilarul.net/


விசாரணைக்கு உத்தரவு. 

அதனை அடுத்து நீதிவான் மருதனார்மடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கமராவின் ஒளிப்பதிவு காட்சிகளை பெற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறும் , வேலணையில் சந்தேக நபர்களில் ஒருவர் சிகிச்சை பெற்றதாக கூறப்படும் சிகிச்சை நிலையத்தில் வைத்தியர் மற்றும் பணியாளர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களின் வாக்கு மூலங்களை பெறுமாறும் உத்தரவு இட்டார்.


தொலைபேசி அழைப்புக்களை விசாரிக்கவும் உத்தரவு. 

அத்துடன் கடந்த 21ம் திகதி முதல் 24ம் திகதி வரையிலான கால பகுதியில் சந்தேக நபர்களின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான் உத்தரவு இட்டார்.


படுகொலையின் கண்கண்ட சாட்சியாக வாய்பேச முடியாத சிறுவன்

படுகொலையை கண்ணால் கண்ட சாட்சியமாக 12 வயது சிறுவன் உள்ளதாக பொலிஸார் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி நீதிமன்றில் தெரிவித்து இருந்தனர். அந்நிலையில் இரு நாட்களின் பின்னர்,  27ம் திகதி சாட்சியமான சிறுவனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக  நன்னடத்தை பிரிவு உத்தியோகஸ்தரினால் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.


சிறுவனுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு. 
சிறுவனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு  சிறுவன் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட வேண்டும். சிறுவனுக்கு பாதுக்காப்பு அளிக்குமாறு நீதிமன்று உத்தரவு இட்டத்தற்கு அமைய பாதுகாப்பு வழங்கப்பட்டதா ? அது தொடர்பான  அறிக்கை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதற்கான காரணம் தொடர்பில் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.


https://www.tamilarul.net/

சைகை மொழி தெரிந்தவர்களின் உதவிய நாடவும். 

சிறுவனின் வாக்கு மூலத்தை காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும். அதற்கு நவில்ட் பாடசாலையில் இருந்து சைகை மொழி தெரிந்த ஆசிரியர்களை அழைத்து அவர்கள் உதவியுடன் வாக்கு மூலத்தை பதிவு செய்ய வேண்டும். அல்லது சிறுவனுக்கு பரீட்சயமான சிறுவனின் சைகை மொழி தெரிந்தவரின் உதவியுடன் வாக்கு மூலத்தை பதிவு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கையை முன் வைத்தார். 
தொடர்ந்து குறித்த சட்டத்தரணி மன்றில் கோரிக்கை முன் வைக்கையில் , 

அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் விசாரணை. 

அச்சுறுத்தல் விடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். சிறுவன் கூறும் அங்க அடையாளங்களை கொண்டு அச்சுறுத்தல் விடுத்தவர்களை சாட்சியங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றில் வழங்கு தொடர வேண்டும். என்றார்.

அச்சுறுத்தல் விடுத்தவர்களின் ஓவியங்களை வரையவும். 

உரிய நிபுணர்களின் உதவியுடன் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் தொடர்பில் சிறுவன் கூறும் அடையாளங்களை கொண்டு ஓவியம் வரைந்து அச்சுறுத்தல் விடுத்தவர்களை கைது செய்து அவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தனியாக வழக்கு தொடருமாறு நீதிவான் கட்டளையிட்டார்.


சிறுவனுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கவும். 

அத்துடன் நீதிமன்றின் மறு அறிவித்தல் வரை சிறுவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு இட்டார். 

சிறுவனின் தாயின் சாட்சியம்.
2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , சிறுவனின் தாயார் சாட்சியம் அளிக்கும் போது ,


கொலையுண்ட பெண்ணின் வீட்டுக்கு என் மகன் செல்கின்றவன். அங்கு சென்று தொலைக்காட்சி பார்ப்பான். அவர்களது சிறு பிள்ளையுடன் விளையாடுவான். அவ்வாறே கொலை நடந்த தினமான கடந்த 24ம திகதி இவன் அந்த வீட்ட சென்று உள்ளான். அப்போது அங்கு  இருவர் நின்று அவனை மிரட்டி துரத்தி உள்ளனர். அவர்கள் தான் அந்த பெண்ணை கொலை செய்து இருக்க வேண்டும். கொலையாளிகளை என் மகன் கண்டு உள்ளான்.


பிறகு 27ம்  திகதி வீதியில் வைத்து யாரோ என் மகனை கொலை செய்வேன் என மிரட்டி உள்ளனர். அதனை நீதிமன்றுக்கு தெரிவித்தோம்.அத்துடன் ஊர்காவற்துறை காவல்நிலையத்திலும் அது தொடர்பில் முறைப்பாடு செய்தோம்.


தற்போது எனது மகனுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்து உள்ளது.  இருந்தாலும் எனது மகனை தனியே விட்டு விட்டு நான் வேலைக்கு செல்ல முடியாது உள்ளது. அவனை நான் வேலை பார்க்கும் இடத்திற்கு சில வேளைகளில் அழைத்து செல்வேன். சில இடங்களுக்கு அழைத்து செல்ல முடியாது. அதனால் நான் வேலைக்கு போக முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நானும் அவனும் மிகவும் வறுமையில் வாழ்கின்றோம். என தெரிவித்தார்.


சிறையில் பேரம் பேசிய மரணதண்டனை கைதி
கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நெடுந்தீவு சந்தைக்கு சென்ற சிறுமியை நெடுந்தீவை சேர்ந்த ஜெகன் என அழைக்கப்படும் கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர் கடத்தி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கல்லொன்றால் அடித்து கொலை செய்தார் எனும்  குற்றச்சாட்டில் யாழ்.மேல் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07ஆம் திகதி குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்தது.


குறித்த மரண தண்டனை கைதியான ஜெகன் , படுகொலை சம்பவத்தின் கண்கண்ட சாட்சியான சிறுவனின் உறவினர் முறையான நபர் ஒருவருடன் சிறையில், குறித்த படுகொலை தொடர்பில் தனக்கு தகவல்கள் தெரியும் எனவும் , அதனை தான் நீதிமன்றில் கூறுவதற்கு தனக்கு ஐந்து இலட்சம் பணம் தருமாறும் பேரம் பேசியதாக தம்மிடம்  தெரிவித்ததாக ஊர்காவற்துறை காவல்துறையினர் 2017 ஏப்ரல் 28ஆம்  திகதி நீதிமன்றில் தெரிவித்தனர்.


அதேவேளை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதி கால பகுதியில் , கிளிநொச்சி நீதிமன்றில் திருட்டு குற்றம் தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி , தனக்கு கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில் சில தகவல்கள் தெரியும் என கிளிநொச்சி நீதிமன்றில் தெரிவித்தார். 
அதனை அடுத்து கிளிநொச்சி நீதவான் அந்த நபரை ஊர்காவற்துறை நீதிமன்றில் சாட்சியம் அளிக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவு இட்டு இருந்தார்.


இருவரிடமும் தாம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாக 2017ஆம் ஆண்டு மே மாதம்  13ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஊர்காவற்துறைகாவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.


குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை பொறுப்பெடுப்பு.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்ற நீதிமன்று உத்தரவிட்டு இருந்தது. நீதிமன்ற உத்தரவினை அடுத்து படுகொலை சம்பவம் தொடர்பில் குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை பொறுப்பெடுத்து , விசாரணைகளை முன்னெடுக்க ஆரம்பித்தனர்.


சந்தேக நபர்களான சகோதரர்களுக்கு பிணை. 

சுமார் 17 மாத கால பகுதி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சகோதரர்கள் இருவரும், 2018ஆம் ஆண்டு மே மாதம் நிபந்தனைகள் அடிப்படையில் யாழ்.மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது.
 வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த தினமான 2017 ஐனவரி 24ஆம் திகதி கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனான ஊர்காவற்துறை நீதிமன்றில் பணியாற்றும் ஞானசேகரனுக்கு , தற்போது கைது செய்யப்பட்ட நபரும், நெடுந்தீவில் சிறுமி ஒருவரை வன்புணர்ந்து படுகொலை செய்த குற்றசாட்டில் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளி (கொலை சம்பவம் இடம்பெற்ற கால பகுதியில் பிணையில் விடுவிக்கப்படிருந்தார்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு “எங்கே நிற்கிறாய்?” என வினாவியுள்ளார். அதன் போது தான் வேலையில் நிற்பதாக தெரிவித்து இருந்தார்.


தொலைபேசி உரையாடல் தொடர்பில் விசாரணை.
  குறித்த தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட இருவரும் நெடுந்தீவு பகுதியை சேர்த்தவர்கள். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனும் நெடுந்தீவை சேர்ந்தவர். என்பதனால் , ஆரம்பத்தில் குறித்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் காவல்துறையினர் கவனத்தில் கொள்ளாத நிலையில் , வழக்கு விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரின் கைகளுக்கு மாறிய பின்னர் , குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பத்தில் இருந்து தமது விசாரணைகளை ஆரம்பித்தனர். 

அதன் அடிப்படையில் கொலை நடந்ததாக சந்தேகிக்கப்படும் , நேரம் , கொலையான பெண்ணின் கணவனுக்கு வந்த திடீர் தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர். 
அதேவேளை , தொலைபேசி அழைப்புக்களை எடுத்த நபர்களில் ஒருவர் மரண தண்டனை கைதியாக சிறையில் உள்ள நிலையில் , தனக்கு படுகொலை தொடர்பில் தகவல்கள் தெரியும் என சிறையில் பேரம் பேசிய சம்பவமும் அவர்கள் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.


அதன் அடிப்படையில் தொலைபேசி பகுப்பாய்வுகள் மூலம் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , ஐந்தாண்டுகளில் பின்னர், நெடுந்தீவை சேர்ந்த தற்போது கிளிநொச்சியில் வசித்து வரும்  நபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.


ஐந்தாண்டுகளில் பின்னர் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை 
கைது செய்யப்பட்ட நபரிடம் குற்ற புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில்,  தானும் , நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கில் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள நபரும் இணைந்தே கர்ப்பிணி பெண்ணை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.


அத்துடன் கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று , யாழ்ப்பாணத்தில் நகை விற்பனையாளர் ஒருவரிடம் அதனை 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயற்சித்த போது , அவர் அதனை 35 ஆயிரம் ரூபாய்க்கே கொள்வனவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.


நகைகளை கொள்வனவு செய்தார் என கூறப்பட்ட நபரிடம் , கொலை சந்தேக நபர் கூறிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் , குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலத்தினை பதிவு செய்துள்ளனர். 
அந்நிலையில் கடந்த மாதம்  2ஆம் திகதி புதன்கிழமை கொலை சந்தேக நபரை நீதிமன்றில்  முற்படுத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் , நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியாக சிறையில் உள்ள நபரிடம் வாக்கு மூலம் பெறுவதற்கு ஊர்காவற்துறை நீதவானிடம் விண்ணப்பம் செய்தனர்


மரண தண்டனை கைதியிடம் வாக்கு மூலம் பெற அனுமதித்த நீதவான் , கொலை சந்தேக நபரை  விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்தையே 2017ஆம் ஆண்டு உலுக்கிய கர்ப்பிணி பெண் கொலை வழக்கு ஐந்தாண்டுகளில் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமையும் , அவரின் வாக்கு மூலம் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு தொடர்பில்லாது இருக்கின்றது.


சம்பவம் நடைபெற்று ஐந்தாண்டுகள் ஆனா நிலையிலும் உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் நோக்குடன் தொடர் விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வந்து சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளமை மீண்டும் அந்த வழக்கினை பேசு பொருள் ஆக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.