ரஞ்சித் அண்ணா பிரான்சில் அகாலமரணம் ஆனார்!


 உணர்ச்சிப் பாடகி பிரின்ஸி அக்காவின் கணவருமான ரஞ்சித் அண்ணா பிரான்சில் அகாலமரணம் ஆனார்

தமிழீழ காவல்த் துறையின் உயர்நிலை முதன்மை கண்காணிப்பாளர் திரு.இ.இரஞ்சித்குமார் அவர்களை எமது தமிழினம் என்றும் மறக்கமுடியாது!!
தமிழர் தேசத்தின் உயர்நிலை காவலனாக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஓர் உன்னதமான மனிதனை தமிழினம் இன்று இழந்துவிட்டது!
எமது தாயகத்தின் விடுதலைக்கான போர்க்களம் ஆரம்பித்த சில வருடங்களிலேயே அந்த தாயகத்தை ஒழுக்கமாகவும்,கட்டுப்பாடாகவும் வைத்திருக்கவேண்டுமென்ற தலைவரின் சிந்தனையை முதன்மையாக நின்று நிறைவேற்றிவந்த ஓர் தேசப்பற்றுமிக்க உறுதியான தலைமை காவலனை தமிழினம் சற்றுமுன்னர் இழந்துவிட்டது.
தாயக விடுதலைக்கான தனது தேசியப்பணியில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற மூன்று முதன்மை விடையங்களையும் தனக்கான தாரக மந்திரமாக நெஞ்சிருத்தி பயணித்துவந்த ஓர் தேசியப் பற்றாளன் இவர் என்பதை இவரோடு இணைந்து பயணித்தவர்களுக்கும்,இவரோடு நெருங்கி பழகியவர்களுக்கும் நன்கு தெரியும்.
எமது தேசியத் தலைவர் அவர்களின் அன்பிற்கும், மதிப்பிற்கும் மற்றும் பாராட்டுதல்களுக்கும் சில தடவைகள் அல்ல பல தடவைகள் தெரிவாகிய ஒரு சிறந்த ஆளுமைமிக்க,சிறந்த சிந்தனைமிக்க முதன்மை காவலன் இவர் என்பதை இவரது துறைசார் உறுப்பினர்கள் மட்டுமன்றி,தமிழீழ பல்துறைகள்சார் போராளிகளும் பெரும் மதிப்போடுதான் இவரை பார்த்துவந்தார்கள்.
யாழ் நகரில் ஆரம்பித்த இவரது தேசப்பணியானது,வன்னியின் சகல மாவட்டங்களிலும் ஒன்றுவிடாது தொடர்ந்ததுடன்,ஆளிப்பேரலை மட்டுமன்றி முள்ளிவாய்க்கால்வரை பல ரணகளங்களை கடந்துவந்த சந்தர்ப்பத்தில்,இறுதியில் இலங்கை இராணுவத்தினர் இவரை கைதுசெய்து பல சிறைக்கூடங்களில் இவரை அடைத்து சித்திரவதை செய்ததுவந்தநிலையில், இவருக்கு அதன்பால் ஏற்பட்டிருந்த உடல் பாதிப்புகள் காரணமாக சாகும் தறுவாயில் சிங்கள சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
மிகவும் வேதனைமிக்க உள்ளுடல் பாதிப்புக்களை அதிகளவில் இவர் சந்தித்திருந்ததால் இவரை பல்வேறு நோய்கள் தினமும் பந்தாடிவந்த நிலையில்,தான் நேசித்துவந்த தனது தேசத்தின் பாசத்திற்குரிய மக்களினதும், போராளிகளினதும் இறுதிவரையான துயரமிகு சம்பவங்களை எப்படியாவது தன்னால் இயன்றவரை வெளிக்கொணரவேண்டும் என்ற ஆவலோடு தனக்கு கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரான்ஸ் மண்ணிற்கு சென்றிருந்தார்.
அங்கும் அவருக்கு எதிரிகளால் ஏற்படுத்திவிடப்பட்ட வலிகள் ஆறாத ரணங்களாக தொடர்ந்துவந்தபோதும்,தான் நேசித்த தாய்நாட்டின் கடந்துபோன வரலாறுகளை தற்கால சந்ததிக்கு எப்படியாவது தான் பதிவுசெய்யவேண்டும் என்ற ஆர்வத்தோடு செயற்பட்டவராகவே இருந்துவந்தார்.
கடந்த சில நாட்களின்முன்பு இவருக்கு ஏற்பட்டிருந்த மாரடைப்பு நோயை குணப்படுத்துவதற்கு அந்நாட்டு மருத்துவர்கள் அறுவை சிகிற்சை செய்வதே தமக்கிருக்கும் ஒரேயொரு கடைசி வழியெனக்கூறி ஒரு சத்திர சிகிற்சையை அவர்கள் மேற்கொண்ட சந்தர்பத்தில் அந்த சத்திரசிகிற்சை பலணளிக்காது பிரான்ஸ் மண்ணில் சற்றுமுன்னர் எம்மை கலங்கவைத்து தனது கண்களை மெளனமாக மூடிக்கொண்டார்.
இவரது புனிதமான ஆத்மா சாந்தியடைய இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தோடும், உறவுகளோடும் இணைந்து நாமும் பிரார்த்திப்போம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.