உக்ரேன் மீதான படை நடவடிக்கை சரியானதே!


 ஒரே வரியில் சொல்வதானால், (உருசியாவின் நிலைப்பாட்டில் இருந்து நோக்குகையில்) தற்போதைய உக்ரேன் மீதான படை நடவடிக்கை சரியானதே!

உலகெங்கும் ஆயுத, படைக்கலங்களை விற்பனை செய்து மானிட அழிவிலும் மோதல்களிலும் இன்பம் கண்டவர்கள், அடுத்தவர் அழிவில் தங்கள் வாழ்வை மேம்படுத்தியவர்கள், தங்களுக்கு அடிவிழும் போது காப்பாற்ற உலகம் ஓடோடி வரவில்லை என இரந்து நிற்பது வேடிக்கையாக உள்ளது.
தாங்கள் நினைத்தது போன்றுதான் பூமிப்பந்து சுழல வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு இது நல்லதொரு செருப்படி என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.
அதேவேளை உலக சமாதானத்திற்கான, நடுநிலை செயற்பாட்டாளர்கள் என்று தம்மைத்தாமே கூறிவரும் அமெரிக்காவின் (நேட்டோவின்) எடுபிடியான ஐ.நாடுகள் சபையினால் (உருசியாவிற்கு எதிராக) ஒரு ஆணியையும் பிடுங்க முடியவில்லை.
தருணம் பார்த்திருந்து, சரியான - பொருத்தமான காலத்தில் தன் கைவரிசையை புடின் காட்டி வருகின்றார். தொடர்ந்து காட்டுவார் என்றே நம்பப்பெறுகின்றது.
ஆயுத பலத்தாலும், பண பலத்தாலும் உலகம் தங்கள் கைகளில்தான் என இறுமாந்திருந்த அமெரிக்க, ஐரோப்பிய முதலாளிகளுக்கு புடின் நல்லதொரு செய்தியை தெளிவாக உரைத்துள்ளார். அதுவே இப்போது உலகிற்கான - அனைவருக்குமான செய்தியாகும்.
உண்மையில் உக்ரேன் மீதான நடவடிக்கைக்கு புடின் (உருசியா) சொல்லும் காரணங்கள் ஏற்கத் தக்கவையே!
இன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விடும் நீலிக்கண்ணீர், உக்ரேன் மக்கள் மீதான அக்கறையோ, அனுதாபமோ அல்ல! தங்களின் தற்போதைய உக்ரேனின் கைப்பொம்மை அரசு பறிபோகின்றதே என்ற வருத்தம், தங்கள் முதலாளித்துவத்திற்கு தீனி இல்லாமல் போய்விடுகின்றதே என்ற ஆதங்கம், தவிப்பு!
ஆசியாவிலோ, ஆபிரிக்காவிலோ இந்த போர் நடைபெறுமானால் இவர்களுக்கு கவலையில்லை. இப்போது நடைபெறும் போர் தங்கள் வாசலிற்கு வந்து விடும் என்ற அச்சம் இன்னொரு பக்கம். ஏனென்றால் அடிப்பது உருசியா என்ற, இவர்களின் விருப்பத்திற்கு ஆடாத, ஆட மறுக்கும் தனித்துவமான தேசமல்லவா!
இவர்களுக்குத்தான் யாரும் தனித்துவமாக, சிறப்பாக நாட்டை, தன்மக்களை வழிநடத்தினால் பிடிக்காதே! அந்தவகையில் தானே தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் இப்பூமிப்பந்திலிருந்து அகற்றப்பெற்றது. அதை நாங்கள் மறந்துவிடவோ, மன்னித்து விடவோ முடியாது.
அன்றைய பனிப்போர் காலங்களிலேயே உருசியாவின் அறிவியல், தொழில்நுட்ப ஆற்றலை விபரிக்க ஒரு கதை சொல்வார்கள், அது வெறும் கதையாயினும், சோவியத் ஒன்றியமாக இருந்த உருசியாவின் வளர்ச்சியை, சிறப்பை சுட்டுவதாக இருந்தது.
அது என்னவெனில்... மிக மெலிதான, நுண்ணிய கம்பியொன்றை செய்த அமெரிக்கா, தங்கள் திறமையை அன்றைய சோவியத் ஒன்றியத்திடம் காண்பிக்க, இதைவிட மெலிதாக உங்களால் உருவாக்க முடியுமா என சவால் விட்டதாம்.
அதற்கு, பதிலளித்த உருசியா அக்கம்பியில் துளையிட்டு காட்டியதாம். அப்படித்தான் சோவியத் ஒன்றியத்தின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி இருந்ததென அக்காலங்களில் பேசப்பட்டது.
அந்த வகையில் தற்போதைய உருசியாவையும் யாரும் குறைத்து மதிப்பிடலாகாது.
இந்தப் போரில் மக்களின் #உயிரிழப்புக்கள், #அவலங்கள், #இடப்பெயர்வுகள் என்பன மிகவும் வேதனைக்குரியவையே!
ஆனால் உருசியாவின் இருப்பு, எதிர்காலம் என்று நோக்குகையில், அவர்களுக்கு இது தவிர்க்க முடியாத, தள்ளிப் போட முடியாத ஒன்றாகும். உக்ரேனை கட்டுப்படுத்தாது, இப்படியே மேற்குலக ஊடுருவலிற்கு இடமளித்தால், அது உருசியாவின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்குவதுடன், நேட்டோ அமைப்பின் சர்வாதிகார போக்கிற்கு சாதகமாகவும் அமைந்து விடும்!
எனவே புடினின் இந்த முடிவு, நேட்டோ எனப்படுகின்ற சர்வதேச சண்டியர்களுக்கு தக்க பாடமாக அமைவதுடன், சண்டியர்களின் வாலை ஒட்ட நறுக்குவதாக அமையட்டும்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.