சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின்தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்!!
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 17 ஆண்டு காலச் சாதனைகள்...!
"சிறப்பு தளபதி லெப் கேணல் அமுதாப்.!
18 ஆம் ஆண்டில் காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, 18 ஆம் ஆண்டில் கால் பதிப்பதனையிட்டு கடந்த வியாழக்கிழமை (10.04.08) நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது:
இன்று நெருக்கடியான கால கட்டத்தில், நெருக்கமான களங்களில் நின்று கொண்டு நெருக்கடிகளைச் சந்தித்து சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 18 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளில் சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நான் நினைக்கின்றேன்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 2 ஆம் கட்ட ஈழப்போர் தொடப்பட்ட போது வன்னியைக் கைப்பற்றுவதற்றாக சிங்களப் படைகள் தயாராகிய நேரத்தில் அந்தச் சிங்களப்படை நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்காக ஒரு மரபு வழிப்படையணியை தேசியத் தலைவர் உருவாக்கினார்.
10.04.1991 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாளில் சகல மாவட்டங்களில் இருந்தும் ஒன்றிணைக்கப்பட்ட போராளிகளைக் கொண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கப்பட்டது.
05.05.1991 ஆம் ஆண்டு வடபிராந்திய இராணுவத்தளபதி லெப். ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ தலைமையில் வன்னியைக் கைப்பற்றுவதற்காக "வன்னி விக்கிரம" படை நடவடிக்கை தொடங்கப்பட்டது.
அந்த நடவடிக்கையை முதல் களமாக சந்தித்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி 20 போராளிகளை இழந்து அந்தப் படை நடவடிக்கையை முற்று முழுதாக முறியடித்து தனது முதலாவது போர்க்களத்தில் சாதனையை நிகழ்த்தியது.
தலைவர் எதிர்பார்த்ததனை கேணல் பால்ராஜ் தளபதியாக இருந்து லெப். கேணல் ராஜன் வழிநடத்தி அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
அன்று டென்சில் கொப்பேக்கடுவவை களத்தில் சந்தித்தோம்.
இன்று மன்னார் களத்தில் லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் வழிநடத்தலில் உள்ள படைகளை சந்தித்து 18 ஆண்டுகால போர் வரலாற்றை நாம் தகர்த்துக் கொண்டிருக்கின்றோம்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு ஒரு தனி வரலாறு இருக்கின்றது.
17 ஆண்டு காலமாக இந்தப் போராட்டக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராணுவச் சாதனைகளில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தனக்கு என ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கின்றது.
இன்று வரைக்கும் இந்த தமிழீழப் போர் அரங்கில் தென் தமிழீழம், வட தமிழீழம் எங்கும் தனது போர் நடவடிக்கையில் இப்படையணி ஈடுபட்டிருக்கின்றது.
5 சிறப்புத் தளபதி
4 தளபதி
ஒரு துணைத்தளபதி
12 தாக்குதல் தளபதிகள் உட்பட
அற்புதமான 1,200 போராளிகளை இழந்து இப்படையணி நிமிர்ந்து நிற்கின்றது.
களங்களில் சிங்களப் படைகளுக்கு எதிராக துணிந்து நிமிர்ந்து நின்று களமாடி வருகின்றது.
தலைவர் எதிர்பார்ப்பதனை சிங்களப் படைகளின் களமுனைளில் சண்டையின் ஊடாக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சண்டை என்பது சாதாரண விடயமல்ல.
இரத்தங்களையும் பிணங்களையும் கடந்து
துன்பங்களையும் துயரங்களையும் கடந்து
வார்த்தைகளாலும் சொற்களாலும் சொல்லமுடியாத கள யதார்த்தத்திற்குள் நின்று
இராணுவ நடவடிக்கைக்கு எதிராக களமாடி
உயிரையும் இரத்தத்தையும் சிந்தி
போரை வெல்வது என்பது சாதாரண விடயமல்ல.
அந்தச் சாதாரண விடயம் என்று சொல்லப்படுகின்ற விடயத்தை சாதாரண விடயமாக உங்களின் பிள்ளைகள் எமது போராளிகள் களத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
களம் என்பது நாளாந்தம் கடுமையானதாக இருக்கும்.
அந்தக் களத்தில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையிணியின் பெருமை சாதனை என்பது இன்று நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது என்று சொன்னால் இந்தக்களத்தில் தமது உயிரைத் தியாகம் செய்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தளபதிகளின்
இப்படையணியில் இருந்து தமது உயிர்களை அர்ப்பணித்த போராளிகளின்
அதிமுக்கியமான சாதனைகளின் ஊடாகத்தான் இப்படை நிமிர்ந்து நிற்கின்றது.
எனவே தான் இப்படையணியின் போரியல் வரலாற்றில் இப்படையணியை வழிநடத்திய சில தளபதிகளின் குறிப்புக்களை அவர்களின் சாதனைகளை அவர்கள் அந்தக் கட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
ஒவ்வொரு போராளிக்கும் ஒவ்வொரு வரலாறு
தமிழீழப் போர் அரங்கில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிச் சிறப்புத் தளபதியாக இருந்த போது லெப். கேணல் ராகவன் ஒரு சுத்தப் போர் வீரன். தனது வாழ்க்கையைக் களத்தில் நகர்த்திய ஒரு வீரன்.
இந்தக் கள நடவடிக்கையால் படிப்படியாக சண்டைக்களங்களில் புடம்போடப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு சிறந்த தளபதியாக அடையாளம் காணப்பட்டு சிறப்புத்தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட போது "ஜெயசிக்குறு" படை நடவடிக்கை நிகழ்ந்தது.
ஒட்டிசுட்டான், மாங்குளம், பள்ளமடுவில் நிற்கின்ற போது விடுதலைப் புலிகளின் கதை முடியப் போகின்றது- என்ற சொல்லப்படுகின்ற நேரம் அது. "ஓயாத அலைகள் - 03" இராணுவ நடவடிக்கையை நாம் தொடங்கியிருக்கின்றோம்.
02.11.1999 ஆம் ஆண்டு ஒட்டிசுட்டானில் அதனைத் தொடங்குகின்றோம்.
இக்கட்டான களமுனையாக இருந்தபோது அந்தக்களத்தில் தனது படையணிச் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதற்காக களத்தில் முதலாவது தளபதியாக நின்று களமுனையை உடைத்துக்கொண்டு உள்நுழைகின்ற போது ஒட்டிசுட்டான் மண்ணில் "ஓயாத அலைகள் - 03" இன் முதலாவது வித்தாக எமது சிறப்புத் தளபதி தம்பிவேவி தனது உயிரை அர்ப்பணித்தார்.
அந்த வீச்சு அதன் இழப்பு களத்திலே நின்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி போராளிகளுக்கு ஒரு வேகத்தை தந்தது.
ஒரு விவேகத்தை தந்தது.
சிங்களப் படைகளைக் கொல்ல வேண்டும் என்ற ஓர்மத்தை தந்தது.
அந்த ஓர்மம்- "ஓயாத அலைகள் - 03" இராணுவ நடவடிக்கையினால்-
சிங்கள அரசாங்கத்தின்-
சிங்களப் படையினரின்-
கோட்பாடுகள் தகர்த்து எறியப்பட்டு இராணுவச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
அக்களங்களில் எல்லாம் எமது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியோடு சகோதர படையணிகளாக பல படையணிகள் களமுனையில் தமது சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன.
இதே படையணிக்கு சிறப்புத் தளபதியாக இருந்து நாகர்கோவில் மண்ணில் "ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையைச் செய்ய முற்பட்ட நேரம் அது.
தனது படையணியை வைத்துக்கொண்டு குறைந்த இழப்புக்களோடு கூடிய வெற்றியைப் பெறுவதற்காக களமுனையில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட போராளிகள் வந்து தகவல்களைச் சொன்னபோது அத்தகவலை நேரடியாகப் பார்க்கச் சென்ற நிலையில் சிங்கள இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகி காயப்பட்டு 23.10.2000 ஆம் ஆண்டு தனது உயிரை அர்ப்பணித்தார் லெப். கேணல் சேகர்.
இவ்வாறாகத் தான் வரலாறுகள் களத்தில் நிகழ்த்தப்பட்டன.
இவ்வாறு ஒவ்வொரு தளபதியின் வழிகாட்டலும் வழிநடத்தலும் களத்தில் நின்று போரை வழிநடத்தியதால் தான் இன்றும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி என்று சொன்னால் சிங்களப் படைகளுக்கு அவர்களை அறியாமலே பயம் குடிகொண்டிருக்கின்றது.
அந்த வகையில் இந்தப் படையணி சாள்ஸ் அன்ரனி எந்த மண்ணில் பிறந்தாரோ எந்த மண்ணில் பிறப்பு எடுத்தாரோ அதே மண்ணுக்குப் போய் இந்தப் படையணி சண்டையிட வேண்டும் என்று சொல்லி தலைவர் விரும்பினார்.
இதன் அடிப்படையில் 1995 ஆம் ஆண்டு லெப். கேணல் கில்மன் சிறப்புத் தளபதியாக இருந்தபோது இப்படையணி தலைநகர் நோக்கி நகர்ந்தது.
அங்கே சாள்ஸ் அன்ரனியின் பெயரைச் சொல்லி களமாடியது.
10 மாதங்களாக திருகோணமலை மாவட்டத்தில் இப்படையணி அங்கே சாதனைகளை நிலைநாட்டியது.
இவ்வாறாக கடந்த 18 ஆண்டு காலமாக களங்களில் சிங்களப் படைகளோடு களமாடியிருக்கின்றது.
போர்களையும், பிணங்களையும் கடந்து துன்பங்களைனயும், துயரங்களையும் கடந்து வீரத்தோடும், ரோசத்தோடும், மானத்தோடும் சிங்களவனை அழிக்க வேண்டும் என்ற நோக்கோடு நாம் போராடியிருக்கின்றோம். போராடி வருகின்றோம். இன்றும் களங்களில் போராடுகின்றோம்.
கடந்த ஆண்டு இதே நாள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி முள்ளிக்குளத்தில் சிங்களப் படைகளின் ஒரு தாக்குதலை எதிர்கொண்டது.
கடந்த ஆண்டின் இதே மாதம் சாள்ஸ் அன்ரனியின் 17 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தபோது புதிதாக இணைக்கப்பட்ட போராளிகள் இப்படையணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.
பெற்றோரை சந்தித்த 4 ஆவது நாள் மன்னார் முள்ளிக்குளத்தில் சிங்களப் படைகளோடு சாள்ஸ் அன்ரனி படை மோதியது.
போர் மூண்டது.
சில மணிநேரச் சண்டை... புதிய போராளிகள் உள்வாங்கப்பட்டது என்று நாம் சொல்கின்றோம்.
பெற்றோர் சந்திப்பை முடித்த 4 ஆவது நாள் களத்திற்குச் சென்ற போராளி, இந்த சாள்ஸ் அன்ரனியின் பெயரைத்தாங்கி இடி என புயல் என சிங்களப்படையோடு மோதினான்.
20-க்கும் அதிகமான சிங்களப் படைகள் கொல்லப்பட்டு 12-க்கும் அதிகமான ஆயுதங்கள் எடுக்கப்ட்டன. 8 உடல்கள் கைப்பற்றப்பட்டன.
17 ஆவது ஆண்டை வெற்றியோடு நாம் நகர்த்தினோம்.
இன்று ஒரு ஆண்டைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது.
இன்று வரைக்கும் அந்த அணியை வழிநடத்திய தாக்குதல் தளபதிகள் அனைவரும் மன்னார் களமுனையில் ஓய்வில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
களத்தில் வெற்றி இலக்காகக்கொண்ட படையணியில் இருக்கின்ற போராளிகள்- தளபதிகள் அனைவரும் போரின் மையத்தில் நின்றுதான் சண்டையை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறாகத் தான் சண்டைக்களங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனையிறவு- பரந்தன் கூட்டுப்படைத்தளம் இருந்தபோது 09.01.1997 ஆம் ஆண்டு ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்தத் தாக்குதலை வெற்றி கொள்வதற்காக அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன.
கம்பிவேலி தடைகளைத் தகர்த்தெறிகின்ற டொபிடோ என்று சொல்லப்படுகின்ற வெடிமருந்து நிரப்பிய டொபிடோவை வைத்து கம்பிகளை அகற்றிக்கொண்டிருந்த போது ஒரு டொபிடோ வெடிக்காத போது ஒரு கம்பிவேலி அகற்ற முடியாத சூழல் காணப்பட்டது.
எதிரியின் துப்பாக்கி ரவைகளுக்குள் எமது போராளிகள் நகர்ந்து கொண்டிருந்தனர்.
சிறிய வயது நிரம்பிய லெப். சுயாந்தன் என்கின்ற போராளி முடிவெடுத்தான்- உடனடியாக களத்தில் நின்று இரத்தத்திற்குள் நின்று பிணங்களுக்குள் நின்று மரணத்தின் வாசலில் நின்று முடிவெடுத்தான்.
தனது தியாகத்தின் மூலம் செய்வதன் ஊடாக படையணியை நகர்த்தமுடியும் என்று முடிவெடுத்தான்.
உடனடியாக கம்பிவேலிக்கு மேல் தனது உடலைச் சாய்த்து கம்பிவேலியை அமர்த்தி அப்படியே படுத்திருந்தான். அவனுக்கு மேல் ஒவ்வொரு போராளியும் அவனுடைய உடலுக்கு மேலாகப் போய் 1997 ஆம் ஆண்டு அன்றைய நாள் உப்பளப்பகுதியில் 10-க்கும் அதிகமான ஆட்லறிகள் அழிக்கப்பட்டு அச்சண்டையில் சுயாந்தன் என்ற போராளி ஒரு அணியை உட்பகுதிக்குள் நகர்த்திய பெரும் சாதனையை நிகழ்த்தினான்.
பின்னர் அந்தப் போராளி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "ஜெயசிக்குறு" சமர்க்களத்தில் தனது உயிரை அர்ப்பணித்தார்.
இவ்வாறு நிறைய வராறுகள் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை