ஐ.பி.எல் போட்டி அட்டவணை வெளியீடு!!


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடருக்கான போட்டி அட்டவணையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 தொடரின் நடப்பு ஆண்டுக்கான அத்தியாயம், எதிர்வரும் மார்ச் 26ஆம் திகதி தொடங்கி மே 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில். 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. 4 பிளே ஒப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதன்படி, இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

மே 22ஆம் திகதி வான்கடே மைதானத்தில் நடைபெறும் இறுதி லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

வான்கடே மைதானம் மற்றும் டி.வை. பட்டீல் ஆகிய மைதானங்களில் தலா 20 லீக் போட்டிகளும், மும்பை பிரபோன் மைதானம் மற்றும் புனே எம்சிஏ சர்வதேச விளையாட்டரங்கில் தலா 15 போட்டிகளும் நடைபெறுகின்றன.

இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.

பிளே ஒப் போட்டிகளுக்கான போட்டிகள் மற்றும் மே 29ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் மற்றும் மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரில், இம்முறை இரண்டு குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

குழு ‘ஏ’இல் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, டெல்லி கெபிடல்ஸ் அணி, லக்னோவ் சுப்பர் ஜியண்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

குழு ‘பி’இல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசஸ் ஹைதரபாத் அணி, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இம்முறை இரண்டு புதிய அணிகளின் வருகையுடன் மொத்தம் 10 அணிகள் விளையாட ஒரு அணி, 14 லீக் போட்டிகளில் (7 சொந்த ஊர் மற்றும் 7 வெளியூரில்) விளையாடவுள்ளது.

ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள அணிகளுடன் இரண்டு முறையும், மற்ற குழுவில் அதே வரிசையில் உள்ள அணியுடன் இரண்டு முறையும் விளையாடும். மற்ற குழுவில் உள்ள மீதமுள்ள நான்கு அணிகளுக்கு எதிராக, ஒவ்வொரு அணியும் ஒரு முறை மட்டுமே விளையாடும்.

புனே வோரியர்ஸ் இந்தியா மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய இரண்டு புதிய அணிகளைக் கொண்டிருந்த 2011ஆம் ஆண்டு பதிப்பில் பயன்படுத்தப்பட்ட வடிவம் போன்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.