அரசாங்கத்தைச் சாடிய பழனி திகாம்பரம்!!

 இலங்கையில் 20 வருடங்கள் ஆட்சி செய்வோம் எனச் சூளுரைத்தவர்கள் இன்று 2 வருடங்களிலேயே வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.


“இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான போராட்டம் மலையக மண்ணில் இருந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே, தலவாக்கலையில் ஏப்ரல் 03 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று , அரசை வீட்டுக்கு அனுப்ப எம்முடன் அணிதிரளுங்கள்" எனவும் மலையக மக்களுக்கு அவர் அறைகூவலும் விடுத்தார்.


சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த மகளிர் தின விழா, நேற்று (13) ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய திகாம்பரம் எம்.பி. கூறியதாவது:-


"மலையக மக்கள் மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டாலும், மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.

 

20 வருடங்கள் ஆட்சியில் இருக்க இந்த அரசை அனுமதிக்க முடியாது. தங்களுடன் வந்துவிடுங்கள் என எமக்கும் ஆளுங்கட்சியினர் அழைப்பு விடுத்தனர். நம்பிச் சென்றிருந்தால் இன்று மலையக அமைச்சர் போன்று, மாவு அமைச்சராகவே இருந்திருக்க வேண்டும். 20 வருடங்கள் ஆட்சி எனச் சூளுரைத்தனர். இன்று இரண்டு வருடங்களிலேயே வீடு செல்லவேண்டி ஏற்பட்டுள்ளது.


நல்லாட்சி என்பது மலையகத்துக்குப் பொன்னான காலம். 50 வருடங்கள் அரசியல் செய்தவர்களுக்கு மத்தியில் நான்கரை வருடங்களில் மலையகத்தில் பாரிய வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தோம். உரிமை அரசியலையும் வென்றெடுத்தோம்.


மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. சஜித் தலைமையில் அதனை நாம் நிச்சயம் செய்வோம்.


இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான மாபெரும் போராட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறும். அதன்பின்னர் ஏப்ரல் 03ஆம் திகதி தலவாக்கலையிலும் நடைபெறும். அதில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்" - என்றார்.

.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.