கொக்குளாயும் பறிபோகும் நிலை - து.ரவிகரன்!!


 வடக்கு, கிழக்கை இணைக்கின்ற ஒரு பூர்வீக கிராமமான கொக்குளாயை முற்றுமுழுதாக விழுங்கி விடுவார்களோ என்ற ஐயப்பாடு இருக்கிறது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவு - கொக்குளாயில் நில அளவை மேற்கொள்ளப்பட்ட விடயம் தொடர்பில் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


கொக்குளாய் பகுதியில் கனிய மணல் அகழ்வுக்காக 2010 ஆண்டு தொடக்கம் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பாக 44 ஏக்கர் காணி பதினாறு பேருடையது. அதிலே சொந்த காணி உறுதிகள் இருப்பதாக காணி கட்டளை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அரச காணி அனுமதி பத்திரங்களும் இருக்கின்றன. அது ஏற்கனவே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள்.


சுமார் 80 ஆண்டு கால பராமரிப்பாக அவர்கள் அந்த குறிப்பிட்ட காணிகளுக்கு பராமரிப்பாளர்களாக, சொந்தக்காரர்களாக காணப்படுகின்றார்கள். அந்த 44 ஏக்கர் காணியை எடுக்கும் பொருட்டு இவர்களிடம் நில அளவை செய்த போது நில அளவைக்கான கையொப்பத்தை வையுங்கள் என்று கூறி விட்டு அவர்களுக்கு காணியை விற்பதற்கு கையொப்பம் பெற்றதாக அந்த மக்கள் சிலரிடம் கூறி இருக்கின்றார்கள்.அப்படி ஒரு ஏமாத்து வேலை இந்த மக்களிடம் நடத்தப்பட்டிருக்கின்றது. 


நாங்கள் மாகாண சபையில்  இருந்த போது இந்த விடயம் கொண்டு வரப்பட்டு 2018 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 24 ஆம் திகதி மாகாண சபை காலம் முடிவுறும் மட்டும் அவர்கள் அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யவில்லை.


மாகாண சபை முடிவுற்றதன் பின்பு இந்த நடவடிக்கையில் குழுவை கூப்பிட்டு எங்களுக்கு கூட்டமும் வைக்கவில்லை. அவர்கள்  தங்களுடைய எண்ணத்திற்கு வேலி அமைத்து மண் குவிக்கப்பட்டு  அகழ்வு வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 


தற்போது  அதற்கு அடுத்த காணிகளும் நில அளவை திணைக்களத்தால் அளக்கப்படுகின்ற  போது மக்கள் விழித்தெழுந்திருக்கிறார்கள்.  கிட்டத்தட்ட கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கர்நாட்டுகேணி, கொக்கு தொடுவாய் வடக்கு, மத்தி மற்றும் தெற்கு , நாயாறு, செம்மலை வரையான இடத்தில்  கனிய மணல் அகழ்விற்காக கிட்டத்தட்ட கடற்கரையிலிருந்து 650 மீற்றர் தூரத்துக்கு 12 கிலோமீட்டர் நீளமான இடத்திற்கு கனிய மணல் அகழ்வை மேற்கொள்ள போகின்றார்கள் என்ற தகவலை இந்த மக்கள் தெரிவிக்கின்றார்கள். 


அங்கிருக்கும் குளங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. வில்லு குளம் என்று சொல்லக்கூடிய குளம் அக் குளத்தோடு  சேர்த்து நான் குறிப்பிட்ட  இடங்கள் வரைக்கும் சில சில சின்ன குளங்களும் இருக்கின்றன. இதன் ஊடாகத்தான் அந்த கிராமத்துக்குரிய தண்ணீர்கள் நன்னீராக பேணப்படுகின்றன. அதோடு சேர்ந்து கால்நடைகள் எல்லாம் பயனடையக்கூடிய வகையிலும், இந்த மக்கள் பயனடையக்கூடிய வகையிலும் அந்த குளங்கள் இருக்கின்றன. அந்த குளங்களையும் விட்டு வைக்கவில்லை. குடியிருப்பு காணிகள் , தென்னந்தோட்டங்கள் , கச்சான் தோட்டங்கள், நெல் வயல்கள் போன்றவாறான இடங்களையெல்லாம் அளந்திருக்கிறார்கள். 


மக்கள் எனக்கு அறிவித்ததையடுத்து நான் மாசி மாதம் 09 ஆம் திகதி அங்கு சென்று பார்வையிட்ட போது  அறுவடை செய்த வயல் இடங்களையெல்லாம் அளந்திருப்பதாக காட்டினார்கள். 


அது தவிர 10 ஆம் திகதி சட்டத்தரணி தனஞ்சயனையும் அழைத்து கொண்டு அங்கு சென்று வழக்கு போடக்கூடிய நிலையில்  இருக்கின்றதா? என்ற வகையில் அதை ஆய்வு செய்தோம். அதன்படி அவர் ஊடாகவும், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களோடும் தொடர்பு கொண்டு அவரும் இந்த வழக்கை எனக்கு நேரடியாக கூறினார். 



இது சம்பந்தமாக வழக்கு போடுவதற்கு காணி உரிமையாளர்களிடம் இருந்து பெரும்பாலான அனுமதி பத்திரங்களையும், உறுதி காணி உள்ளவர்களுடைய பத்திரங்களையும் கொக்குத்தொடுவாய் தொடக்கம் நாயாறு வரை நாங்கள் சேகரித்து கொண்டிருக்கின்றோம். அந்த சேகரிப்புகள் முடிந்தவுடன் நிச்சயமாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்கான, முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். 


650 மீற்றர் தூரமான மணலை அள்ளும் போது நிச்சயமாக, கடற்கரையோரங்கள் எல்லாம் அள்ளி எடுக்கும்போது இந்த மக்களுடைய வாழ்வாதாரங்கள் மட்டுமல்ல கடல் நீர் உள்புகும் அபாயம் கூட ஏற்படும். இப்படியான ஒரு , அடாவடித்தனத்தை இந்த திணைக்களத்தின் ஊடாக செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.


கொக்குளாய் மண் எங்களுடைய வடக்கு, கிழக்கை இணைக்கின்ற ஒரு பூர்வீக கிராமம் . அதனை முற்றுமுழுதாக விழுங்கி விடுவார்களோ என்ற ஐயப்பாடு இந்த மக்களிடத்திலே இருக்கின்றது. அது மட்டுமல்ல இந்த கடல் நீர் உட்புகுந்தால் தாங்களே அழிந்து போவமோ என்ற எண்ணத்திலும் தங்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்கின்றார்களா என்ற ஐயத்திலும் இருக்கின்றார்கள். 


கொக்கிளாய் கிராமமானது பூர்வீக, பழைய தமிழ் கிராமம். முகத்துவார பகுதியில் சிங்கள மக்களை கொண்டு வந்து 1984 ஆண்டு பகுதியில் குடியேற்றி அந்த முகத்துவாரத்தில் இருந்த தமிழ் மக்களை எழுப்பினார்கள். அந்த மக்களுடைய காணி உறுதிகள் இன்றும் இருக்கிறது. அதற்கு ஒரு முடிவு இல்லை. இப்படியான செயல்களை தடுக்க வேண்டும்.   நாம் மக்களுக்கு,  நிச்சயமாக ஆதரவாக இருப்போம். என மேலும் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.