ஐக்கிய நாடுகள் சபை நீதி, நேர்மையுடன் செயற்பட வேண்டும் - மாணிக்கம் ஜெகன்!!

 


உலக வல்லரசுகளின் பின்னால் அலையாமல் நீதி, நேர்மை, நியாயம், மக்கள் என்ற வகையில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை செயற்பட வேண்டும் என கலை இலக்கிய சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் தெரிவித்தார்.


ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


இன்றைய சூழலில் மிகவும் எதிர்பார்க்கப்படக்கூடிய அமர்வு ஐக்கிய நாடுகள் சபையின் நாற்பத்தியொன்பதாவது அமர்வு. அதைத் தொடர்ந்து என்ன நடைபெற போகின்றது? என்ற எதிர்வு கூறலும் தான் இப்போது அதிகமாக இருக்கிறது. 


ஒரு இலங்கை தமிழனாக அல்லது வடக்கு, கிழக்கில் வாழுகின்ற மிகப்பெரிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற வகையிலே அதிகமாக இதனை  எதிர்பார்க்கின்றோம்.


இந்த எதிர்பார்ப்பு எங்களுக்கு இப்போதாவது ஒரு நியாயமான தீர்வு கிடைக்காதா? அல்லது இப்போதாவது, எங்கள் வேதனைகளுக்கும், யுத்த வடுக்களுக்குமான ஒரு தீர்வு அல்லது ஒரு ஆறுதல் கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்புக்குரிய சமூகத்தின் பிரதிநிதியாக இங்கே  நான் பார்க்கிறேன்.


ஏனென்றால் என் சமூகம் மிகவும் இந்த அரசாங்கத்தால் அல்லது இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்து இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கத்தால் வஞ்சிக்கப்பட்டது. மிக கொடூரமாக அது சித்திரவதைக்குட்பட்டது என்ற வார்த்தைகளோடு நான் முடித்துக் கொள்கிறேன்.


இறுதி யுத்தத்திலே என்ன நடந்தது? என்று உலகத்துக்கு  தெரியும். உண்மையிலேயே நாங்கள் படிக்கும் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை என்பது உலகிலே மிக உயர்ந்த சபை என நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.


ஆனால் எங்களுக்கு ஏற்பட்ட அந்த இறுதி யுத்தத்தின் பின் நான் ஐக்கிய நாடுகள் சபை என்பது எல்லா நாடுகளையும் போல அது ஒரு நாடு என்ற நிர்வாக கட்டமைப்பாக  தான் பார்க்கின்றேன்.


ஏதோ ஒரு வல்லரசுகளின் பின்னால் அலைகின்ற ஒரு அமைப்பாகத்தான் நான் பார்க்கின்றேன். வார்த்தை அதிகமாக இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. இதைத் தவிர வேறு எந்த ஒரு வார்த்தையும்  ஐக்கிய நாடுகள் சம்பந்தமாக நான் சொல்ல விரும்பவில்லை.


மிகப்பெரிய யுத்த  அழிவை சந்தித்த ஒரு இனத்துக்கு இதுவரை யுத்தம் நடந்து பதின்மூன்று ஆண்டுகளுக்கு பின்பு கூட சரியான தீர்வை அந்த மக்கள் இன்னும் அந்த யுத்தத்தின் வடுக்களை சுமந்து கொண்டிருக்கின்ற மக்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து அதனால் பரிகாரம் தேட முடியாத மக்களாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள். 


தற்போது வீதிகளிலே காணாமல் போனோர் சம்பந்தமாக தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கின்றார்கள். இதை விட இதற்கு ஒரு பதில் பரிகாரம் செய்ய முடியாத இந்த ஐக்கிய நாடுகள் சபை உலகத்துக்கு தேவையா? என்ற ஒரு கேள்வி கூட எங்களை பொறுத்தவரை வடக்கு, கிழக்கு தாயகமாக கொண்ட தமிழர்களின் மத்தியில் இருக்கிறது.  


நான் தெளிவாக ஒரு விடயத்தை கூறுகின்றேன்.  வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் இந்த ஐக்கிய நாடு சபையின் நிர்வாகத்தை தேவையா? என்று கேட்கும் அளவுக்கு எங்களை கொண்டு வந்து விளிம்பின் எல்லையில் விட்டிருக்கிறது.


நாங்கள் பெரிதாக நம்பியிருந்தோம். இறுதி யுத்தத்திலே மிக மிக தெளிவான முடிவுகளை அறிவிக்கப்பட்ட பின்பே ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதென்பதை மீண்டும் இந்த உலகுக்கு சொல்ல விரும்புகின்றோம். அதன் பின்பு சரணடைந்தவர்கள் தொடர்பாக, இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக, அதனால் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக எந்த ஒரு சாதாரண மனித விழுமியங்கள் இருக்கின்ற ஒரு இனம் அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இந்த அரசு இன்னும் அதற்கான தீர்வைத் தரவில்லை. என்பதுதான் உண்மை. 


ஆகவே தொடர்ந்து இந்த நாற்பத்தியொன்பதாவது அமர்வும் இவ்வாறான ஒரு அமர்வாகத்தான் ஏற்கனவே பத்தோடு ஒன்று, பதினொன்றாக இருக்கின்ற அமர்வாகத்தான், முடியப்போகின்றதா? அல்லது இந்த அமர்வில் கூட ஏதாவது ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய, தமிழ் மக்கள் நிம்மதியாக இனியாவது வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை தருமா? என்ற ஏக்கத்தோடு இந்த மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


உலக வல்லரசுகளின் பின்னால் அலையாமல் நீதி, நேர்மை, நியாயம், மக்கள் என்ற வகையில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை செயற்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் தெரிவித்து கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilankaகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.